ஒரு முக்கிய அறிவிப்பு

கர்த்தருடைய தமது பெரிதான கிருபையால் www.brovijay.com என்ற புதிய இணையதளத்தை தொடங்க உதவி செய்துள்ளார். இதன்மூலம் கட்டுரைகள், வீடியோ, Mp3 ஆடியோ, மின்புத்தகங்கள் (eBooks), சமூகவலைதளங்கள் ஆகிய அனைத்தையும் ஒரே தளத்தில் இணைக்க முடிந்திருக்கிறது.

இனி இந்த வேர்ட்பிரஸ் தளம் இயங்காது என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன். நமது subscriber-களின் email-களை நமது புதிய தளத்துக்கு மாற்ற முயற்சி செய்கிறேன். இதன் மூலம் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் புதிய தளத்தில் மறுபடி பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

புதிய இணையதளம் உருவாக்கப்பட பெரிதும் துணைபுரிந்த சகோ. பென்னி அவர்களுக்காக கர்த்தரைத் துதிக்கிறேன். தளத்தை கண்டு அதை மேம்படுத்த உதவும் உங்கள் மேலான கருத்துக்களை எனக்கு தயங்காமல் எழுதுங்கள். கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்!

பொது

ஒன்றுமில்லாமை எனும் உச்சகட்ட வெற்றி!

இக்கட்டுரையை ஆடியோ வடிவில் கேட்க:

உலகத்தில் எந்த மனிதனும் பேசியிராத, பேசமுடியாத சில வசனங்களை இயேசுவால் மாத்திரமே பேச முடிந்தது. அவற்றுள் ஒன்றுதான் இந்த யோவான் 14:30 “இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை” என்கிற வசனம். வேதத்தில் எனக்கு மிக மிக மிக பிடித்த வசனங்களில் இதுவும் ஒன்று. இது வெறும் வசனமல்ல.. ஒட்டுமொத்த மனுக்குலத்தின் பிரதிநிதியான மனுஷகுமாரனின் வெற்றி முழக்கம்!

இந்த ஒன்றுமில்லையின் அர்த்தம் வெறுமை அல்ல…ஆளுமை! ஒன்றுமில்லை என்றவரின் கை வெறுங்கை அல்ல, சாத்தானை செவுட்டில் அடித்து வீழ்த்திய பெரும் கை!

அந்த ஒன்றுமில்லைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போமா!

ஆராதனைக்காரன் லூசிபரை அருவருப்பின் அடையாளமாக மாற்றியதுதான் இந்தப் பெருமை எனும் பாவம், அந்தப் பெருமை வறுமையுற்றது இயேசுவிடம் மட்டுமே! அல்லும் பகலும் ஆராதிக்கப்பட்டவராக இருந்தும் அனைத்தையும் துறந்து அடிமை ரூபமெடுத்து மனுஷசாயானவரிடம் பெருமையை எங்கே தேடுவது? ஆராதித்தவனை வீழ்த்திய பெருமையால் ஆராதிக்கப்பட்டவரை அணுகக்கூட முடியவில்லை. உலகில் யாரையும் என்னால் வீழ்த்த முடியும் என்று இனி பெருமை பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது! ஆக…பெருமை இவர்முன் நில்லாது!

பயம் என்பது மனிதனின் நிழல் போன்றது. அது அவனை எப்பொழுதும் விடாமல் தொடர்கிறது. இயேசுவோ தாம் எதற்காக, யாரால், இன்னவிதமாய் மரிக்கப் போகிறோம் என்று தெரிந்தே பிறந்தார். அவர் உடல் பிளக்கப்பட்ட போதுகூட இரத்தமும் தண்ணீருந்தான் மிச்சமின்றி வந்ததே தவிர அச்சம் அணுவளவேனும் வெளியேறவில்லை. அது இருந்தால்தானே வருவதற்கு? காரிருளில் கரும் கடலுக்குள் கடும்புயல் வீசிகொண்டிருக்கையில் அதற்குள் சாவகாசமாக வாக்கிங் போவதற்க்கு வேறு யாரால் முடியும்? கொடுங்கோலன் ஏரோது அதிகாரத்தில் இருக்கையிலேயே சொல்லி வைத்து அவன் எல்லைக்குள்ளேயே பிறந்தவர் இவர்! வளர்ந்து நாட்டு நடப்புகளைக் கண்டபின்னராவது இவருக்கு ஏரோதிடம் பயம் வந்ததா? எள்ளளவும் இல்லை, நான் சொன்னதாக போய் அந்த நரிக்கு சொல்லுங்கள் என்ற இந்த யூத ராஜசிங்கத்தின் கர்ஜனையைக் கேட்டு உள்ளூர்க்காரர்களுக்கு மட்டுமல்ல உலகத்தின் அதிபதிக்கே உள்ளூர உதறல் எடுத்திருக்கும்! கொடும் மரணத்துக்கே அஞ்சாவர் களிமண்ணான ஏரோதைக் கண்டா அஞ்சுவார்! அவன் மணிமுடி இவர் காலடி தூசுக்கு சமம்! ம்ம்ம்..பயமும் இவரிடம் செல்லாது!

உலகோர் எல்லோருக்கும் கவலைகளை அள்ளித்தரும் கொடூரக் கொடையாளிதான் இந்த உலகத்தின் அதிபதி. அப்படிப்பட்ட அவனையே கன்னத்தில் கை வைத்து கவலையுடன் மூலையில் அமரவைத்தவர்தான் இயேசு! காரணம் இவரை வீழ்த்தும் ஆயுதம் எதுவும் அவனிடம் இல்லை. அவனது பிரதான அஸ்திரமாகிய மரணத்தையே முனையை மழுங்கடித்து மூலையில் வீசிவிட்ட இந்தக் கன்மலையிடம் இனி வேறு எந்த ஆயுதத்தைக் கொண்டுதான் மோதுவது?! காகங்களையும் காட்டு புஷ்பங்களையுமே கவலைக்குள்ளாக்க விடாமல் உணவளித்து, உடுத்துவிக்கும் அவர் தானா கவலைப்படுவார்? அண்ட சராசரங்களைக் கட்டி ஆளும் எல்ஷடாயின் பிள்ளை இவர், கவலை என்றால் கிலோ என்னவிலை என்று கேட்கும் இடத்திலிருந்து வந்தவர் இவர். ஆக கவலையும் இவரிடம் ஃபெயில்!

நசரேயனாகிய சிம்சோனைப் பதம்பார்த்த பிசாசின் ஆயுதமொன்று நாசரேத்தூர் இயேசுவிடம் மண்ணைக் கவ்வியது! அதுதான் இச்சை! இச்சையடக்கமுள்ள பல இளைஞர்களைப் பிசாசு பார்த்திருப்பான். ஆனால் இச்சையடக்கமே ஒரு இளைஞனாக வந்ததை அவன் இயேசுவிடம்தான் பார்த்திருப்பான்! தாவீதின் வம்சம்தானே! பத்சேபாள்களுக்கு மயங்கிவிடுவார். எல்லோரையும் இச்சையை வைத்து இம்சை செய்வதுபோல இவரையும் பிடித்துவிடலாம் என்று மனக்கணக்கு போட்டிருப்பான். ஆனால் இயேசுவுடன் இடைப்பட்ட கன்னிகைகள் யாவரும் கண்ணியமுள்ளவர்களாய் மாறினார்களே தவிர இவரைக் கண்ணிகளால் வசப்படுத்த யாராலும் இயலவில்லை! பிதாவின் திவ்ய பிரசன்னத்தில் திருப்தியடைந்தவர் இவ்வுலகத் தேன்கூடுகளை மிதிக்கத்தானே செய்வார்! (நீதி 27:7) ஆக இச்சை எனும் விக்கெட்டும் அங்கு காலி!

பிலேயாமையும் கேயாசியையும் கொள்ளை கொண்ட பொருளாசையே, போய் இறைமகன் இயேசுவைக் கவர்ந்து கொண்டு வா! என்று ஒரு வேளை உலகத்தின் அதிபதி பொருளாசையை அனுப்பியிருப்பான். அது இவரது முகவரியை விசாரித்துப் பார்த்து மிரண்டே போயிருக்கும்! வானம் எனக்கு சிங்காசனம், பூமி எனக்கு பாதபடி என்று சொன்னவரின் பிள்ளையை எந்தப் பொருளைக் காட்டி மயக்குவது?! பொன்னும் வெள்ளியும் வேண்டுமானால் இவரிடம் மயங்கி இவர் பின்னாலே போகும். இருக்கிறவராகவே இருக்கிறவரின் இன்முகத்தையே தரிசித்த இவருக்கு இகத்திலுள்ள இரத்தினங்கள்கூட இருளாகத்தானே தெரியும்!? தன் முதல் முயற்சியிலேயே தலைகுப்பறக் கவிழ்ந்தது பொருளாசை!

இயேசுவை பிடிக்க முடியாவிட்டாலும், இயேசுவை பிடிக்க முயன்றவர்களைப் பிடிக்க பிசாசுக்கு உதவியதுதான் இந்தப் பொறாமை எனும் பேராயுதம்! இயேசுவைப் பிடிக்க பொறாமைக்கு கட்டளை கொடுக்கலாம் ஆனால் யாரைக் கொண்டு இயேசுவை பொறாமைக்குள்ளாக்குவது? இந்தக் கேள்விக்கு பிசாசிடம் இன்றுவரை பதில் இல்லை! முக்காலத்திலும் எக்காலத்திலும் அப்படியொருவன் வந்ததுமில்லை, வரப்போவதுமில்லை. ஆகவே பொறாமைக்கு இப்போரில் பங்கே இல்லை!

பெருந்தீனிக்காரர் பல்லாயிரம் பேரைக் கண்டவனாயிற்றே பிசாசு! பெருந்தீனியால் இவரை வசப்படுத்தலாம் என்று நினைத்து, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எத்தனை கோடிகள் செலவிட்டாலும் இவரது விருப்ப உணவைக் கொண்டு இவரை உணவுக்கு அடிமையாக்குவது என்று முடிவெடுத்து இவரது ஃபேவரைட் மெனு எதுவென ஆராய்ந்தவன் பிதாவின் சித்தம் செய்வதே இயேசுவின் விருப்ப உணவு (யோவா 4:34) என்று அறிந்து அதிர்ந்தே போய்விட்டான்! காரணம் அந்த உணவை இவர் உண்டால் இவன் யுகாயுகங்களாகக் கட்டிவைத்த அஸ்திபாரங்களே நொறுங்கி விடுமே!இயேசுவின் விஷயத்தில் சாத்தான் பெருந்தீனியை பட்டினி போடவேண்டியதாயிற்று! ஆக பெருந்தீனி முதல் சுற்றிலேயே நாக்அவுட்!

மூர்க்கம், உக்கிரம், எரிச்சல் என்ற மூன்றையும் அனுப்பிப் பார்த்தான்… அவைகள் மூர்க்கமாக முன்னேறிச் சென்று இயேசுவுக்குள் உக்கிரமாக நுழைய முயன்று ஊசிமுனையளவும் இடம் காணாமல் எரிச்சலுடன் திரும்பி வந்தன. தாங்கள் கால் நுனி வைக்கக்கூட அந்த நடமாடும் தேவாலயத்தில் இடமில்லையென அவை தங்கள் எஜமானனிடம் அறிக்கையிட்டன!

இனியும் வேறென்ன?…

தான் ஆணென்ற அகங்காரம் இல்லை, அழகனென்ற அகம்பாவம் இல்லை, யூதனென்ற இனப்பெருமை இல்லை, வேற்று இனத்தோர்மேல் வெஞ்சினமும் இல்லை, பேதைகள்மேல் உதாசீனம் இல்லை, மேதை என்கிற மமதையும் இல்லை, ஒடுங்கிக் கிடக்க விலங்குகள் இல்லை , முடங்கிக் கிடக்க சோம்பலும் இல்லை, மதவாதிபோல் மாய்மாலம் இல்லை, பரிசேயன்போல பகல்வேஷமும் இல்லை, யூதத் தலைமைக்கு இணங்கவில்லை, ரோம அரசுடன் தோழமையும் இல்லை, சொத்துக்கள் குவிக்கும் இலக்குகள் இல்லை, சொந்தங்கள் ஆதிக்கம் செலுத்த அனுமதித்ததும் இல்லை, ஆசாரியப் பட்டங்களுக்கு அலைந்ததும் இல்லை, மோசேயின் சட்டங்களை மீறியதும் இல்லை, தாசரின் தவறுகளை உணர்த்தத் தயங்கியது இல்லை, சீசரின் வரிகளைச் செலுத்த தாமதித்ததும் இல்லை. வறுமையை பிடித்துக்கொள்ளவில்லை, ஐசுவரியத்திடம் பிடிபடவும் இல்லை, நோய்கண்டு வாடியதில்லை, பேய்கண்டு ஓடியதுமில்லை, வெறுப்பு இல்லை, கசப்பு இல்லை, சலிப்பு இல்லை, நடிப்பு இல்லை, உலகத்தின்மேல் பிடிப்பும் இல்லை, பகைமை இல்லை, கயமை இல்லை, சிறுமை இல்லை, வெறுமை இல்லை, பிதாவோடு இருந்ததால் தனிமையும் இல்லை. இல்லை இல்லை இல்லை..ஒன்றும் இல்லை…

“இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை”

அவரது காலுக்கடியில் குற்றுயிராய் நெளிந்து கொண்டிருந்த தலை நசுக்கப்பட்ட சர்ப்பமொன்று ஆமோதித்து முணுமுணுத்தது.. ஆம் அவருக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை… என்னிடமும் அவரை வீழ்த்த ஒன்றுமில்லை….

– சகோ.விஜய்

பொது

என்னை உணர்வுள்ளவனாக்கும்!

வல்லமையின் அலைகள் (Waves ofPower) மற்றும் தமிழ் கிறிஸ்தவ வானொலியில் 16/04/2017 அன்று ஒளிபரப்பான உயிர்தெழுதல் திருநாளுக்கான சிறப்புச் செய்தி!

இது உயிர்த்தெழுதலைப் பற்றிய செய்தியல்ல, உயிர்த்தெழுதலை நினைவுகூறுதலைப் பற்றிய செய்தி!

பொது

இன்று காலை இந்த செய்தியை படித்துவிட்டு காலையில் இருந்து கோபத்துடன் சுற்றிக்கொண்டிருக்கிறேன்.ஜெர்மனியில் இருந்து மகாபலிபுரம் சுற்றுலா வந்த பெண்ணை மூன்று பேர் பலாத்காரம் செய்துள்ளார்கள்.[ பாதிக்கப்பட்ட ஜெர்மனி பெண் தாய்நாடு செல்வதற்காக பயணசீட்டு முன்பதிவு செய்ததாகவும் அவர் தாய்நாடு சென்றால் விசாரணை பாதிக்கப்படும் என்பதால், குற்றவாளியை பிடிக்க ஒத்துழைப்பு தரும் வகையில் சில நாட்கள் தங்கியிருக்கும்படி போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.ஆனால், தான் கடும் மன உளைச்சலில் தவிப்பதாகவும் எனவே உடனடியாக நாடு திரும்ப வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்

பயணம்

One Indian Girl

​​​​​உலகம் : One Indian Girl
படைத்தவர் : Chetan Bhagat
திறவுகோல் : வைஷ்ணவி

பொது

Everyone Has a Story

​​​​​உலகம் : Everyone Has a Story
படைத்தவர் : சாவி சர்மா
திறவுகோல் : வைஷ்ணவி

பொது

நம்மை நாமே சோதித்தறிந்தால்...

இன்று சபைகள் பெருகுகின்றன,
சீஷர்கள் உருவாகிறார்களா?

கிறிஸ்தவம் அகலத்தில் வளருகிறது,
கிறிஸ்துவோடு உள்ள உறவின் ஆழத்தில் வளருகிறதா?

எண்ணிக்கைகள் பெருகுகின்றன,
எண்ணங்கள் இயேசுவோடு இசைகிறதா?

வேதம் அதிகம் விற்கிறது
அதற்கு கீழ்ப்படிபவர்கள் பெருகியிருக்கிறார்களா?

கிறிஸ்தவ கலைகள் வளருகின்றன
அதில் கிறிஸ்து மகிமைப்படுகிறாரா?

சபை சொத்துக்கள் பெருகுகின்றன
அதில் அநாதைகளுக்கும் திக்கற்றவர்களுக்கும் பங்குண்டா?

விதவிதமாய் சிலுவைகள் விற்கப்படுகின்றன,
சிலுவை சுமக்கப்படுகிறதா?

இறைப்பணியாளர் பெருகுகிறார்கள்,
இறையரசு வளருகிறதா?

நற்செய்திக் கூட்டங்களுக்கு பஞ்சமில்லை
மெய்யான மனந்திரும்புதல் இருக்கிறதா?

ஆவியானவர் ஆவியானவர் என்கிறார்கள்
அவர் தரும் வெற்றி வாழ்க்கை இருக்கிறதா?

எழுப்புதல் எழுப்புதல் என்கிறார்கள்
சர்ச்சுக்குள் தூங்குபவர்களையாகிலும் எழுப்பியிருக்கிறார்களா?

விசுவாசம் அதிகம் பிரசங்கிக்கப்படுகிறது
பயப்படுகிறவர்கள் குறைந்துவிட்டார்களா?

பரலோக ராஜ்ஜியம் பேச்சிலல்ல பெலத்தில் இருக்கிறது (1கொரி 4:20)

பொது