குறிச்சொற்கள் » புத்தகம்

அரூப நெருப்பு | கே.என்.செந்தில்

கே.என்.செந்திலின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான ‘அரூப நெருப்பு’, கல்குதிரை, காலச்சுவடு, வலசை, உயிர்மை, புது எழுத்து, புதுவிசை என வெவ்வேறு இதழ்களுக்காக எழுதப்பட்ட எட்டு சிறுகதைகளின் தொகுப்பு. ‘தங்கச்சிலுவை’ மற்றும் ‘மாறாட்டம்’ தவிர பிற கதைகள் அனைத்தும் தன்னிலையில் சொல்லப்பட்டிருக்கின்றன. தன்னிலையில் கதை சொல்கையில் சில வரையறைக்குள் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் எழுத்தாளனுக்கு உருவாகின்றது. நேரடியாகவோ மறைமுகமாகவோ கதையின் எல்லா வரிகளிலும் கதைசொல்லியின் இருப்பு அவசியமாகின்றது. வர்ணனைகளுக்கு இங்கே இடமில்லை. கதைசொல்லி கேட்பதையும் நினைப்பதையும் தாண்டி வெளியே பிரவேசிக்க முடியாது. இந்த எல்லைகளுக்குள் நின்று கொண்டே கே.என்.செந்தில் கதை சொல்கிறார். அளவான உரையாடல்கள். பெரும்பாலும் மனதின் குமுறல்களாகவே இருக்கின்றன.

தாயின் இறப்பிற்கு பின் அனாதை என தன் தந்தையின் வீட்டில் வளர்க்கப்படும் கணேசன், அவ்வீட்டில் தனது மறுக்கப்பட்ட உரிமையைக் கைப்பற்றுவதற்காகக் காத்திருக்கிறான். தன் மேல் காறி உமிழ்ந்ததற்காக பழி தீர்க்கும் மூர்க்கத்திலுள்ள சுதாகர், அவனால் பல் உடைபட்டு அவமானப்படுத்தப்பட்டவனால் வெட்டுண்டு சாகிறான். மனைவியால் அவமானத்திற்குள்ளாகும் தாஸ் தனது கோபத்தை குடியின் மீதும் பிணத்தின் மீதும் மட்டுமே காட்ட முடிகின்றது. தன் மனைவியின் கள்ளக்காதலை அறியும் பரமு அவளைக் கொன்று சாந்தம் கொள்ள முயல்கிறான். பரிட்சையில் தோற்று, தந்தைக்கு பயந்து வெளியூரில் எச்சியிலை பொறுக்கும் சோமு எப்படியாவது வீடு திரும்ப அல்லாடுகிறான். தனது வீட்டை விற்றதால் மனப்பிறழ்விற்கு ஆளாகும் தந்தை, இடிக்கப்பட்ட தனது வீட்டின் ஆணியொன்றில் சட்டையை மாட்டியபடி மகிழ்ச்சி கொள்கிறார்.

அடியாளாக வேலை செய்பவன், பிணத்துடனும் பன்றியுடனும் படுத்துறங்குபவன், எச்சியிலை பொறுக்குபவன், லாட்டரி விற்பவன், இறைச்சி உண்பதே தனது ஆகப்பெரிய சந்தோஷமாகக் கருதுபவன், முத்தம் தந்து மகிழ்விப்பதைத் தவிர தன் மனைவிக்காக வேறேதும் செய்ய இயலாத பொருளாதார சிக்கலில் உழல்பவன் என விளிம்பு நிலையில் வாழும் மாந்தர்களினுடைய கதைகளின் தொகுப்பு. ‘திரும்புதல்’ எனும் ஒரே ஒரு கதையில் ஓரிரு இடங்களில் மட்டுமே நகைச்சுவை வெளிப்படுகின்றது. வெஞ்சினம், வெறி, பழி தீர்க்கும் மூர்க்கம், மறுக்கப்பட்ட உரிமை, நிராசை, பொருளாதார சிக்கல் என இத்தொகுப்பின் கதை மாந்தர்கள் அனைவர்களுக்குள்ளும் நெருப்பு எறிந்தபடியே இருக்கின்றது. இதனாலேயே ‘அரூப நெருப்பு’ எனும் தலைப்பு இத்தொகுப்பிலுள்ள அநேக கதைகளுக்கு பொருந்துவதாகவும் உள்ளது.

! புத்தகம்

ஈட்டி | குமார் அம்பாயிரம்

சமகாலத்தில் (கடந்த பத்து ஆண்டுகளில் எழுத வந்தவர்கள் எனக்கொள்வோம்) வாசிக்க நேரும் சிறுகதைகள், நாவல்கள் பலவும் எதார்த்தவகையைச் சார்ந்தவை. தனது அனுபவத்தை, உண்மைச் சம்பவத்தைப் பின்புலமாகக் கொண்டோ அல்லது கற்பனைக் கதையோ எதுவாயிருப்பினும் நேரடியான கதை சொல்லல் முறையில் எதார்த்தமாக பதிவு செய்வதாக இருக்கின்றன. இல்லையேல், ஒரே கதையினை நான்கைந்து பகுதிகளாகப் பிரித்து மூன்று, ஒன்று, நான்கு என வரிசை மாற்றித் தருவது. அல்லது வேறொருவர் கதை சொல்வது போலவோ, கடிதமாகவோ, குறிப்புகளாகவோ, நனவோடை யுக்தியாகவோ ஏதாவதொரு பாணியில் அதே எதார்த்தக் கதையினை வேறொரு வடிவத்தில் தருவது. இதைத் தாண்டி புனைவு எனும் பேச்சிற்கே இடமில்லை. பின்நவீனத்துவம் எனும் பெயரில் நிகழ்பவற்றையும் ‘பரிசோதனை முயற்சி’ என லேபிள் ஒட்டிவிடுகிறார்கள் மூத்த படைப்பாளிகள்.

கிளாஸிக்ஸ் என முன்னோடிகளை மறுபடியும் வாசித்துக் கொண்டிருக்கிறோம். வருங்காலத்தில் சமகாலப் படைப்புகள் கிளாஸ்சிக்ஸ்ஸாக வாசிக்கப்படுமா? சமகாலப் படைப்புகளில் எவை கிளாஸிக்ஸ்? என பரிசல் செந்தில்நாதன் ஒரு முறை புலம்பிக்கொண்டிருந்தார். அவரோடு நானும் உடன்படுகிறேன்.

புனைவிற்காக நமது முன்னோடிகளையோ அயல் இலக்கியத்தையோ நாட வேண்டிய சூழல் நிலவுகிறது. அதாவது மாய எதார்த்தம், நான்-லீனியர் இத்யாதியாக இருக்கவேண்டுமெனச் சொல்லவில்லை. புனைவாக வேண்டும். அவ்வளவே! சமகால படைப்புகளில் (கடந்த பத்து ஆண்டுகளில் எழுத வந்தவர்கள் எனக்கொள்வோம்) புனைவிற்கு சிறந்த உதாரணமொன்றை வினவினால் குமார் அம்பாயிரத்தின் ‘ஈட்டி’ தொகுப்பினைத் தயக்கமின்றி பரிந்துரைக்கலாம்.

நமது முன்னோர்களின் நம்பிக்கைகளும் கதைகளும் அழிந்து கொண்டிருப்பதே நமது கலாச்சார சிதைவிற்கு அதிமுக்கிய காரணம். கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் நிகழ்ந்த பெரும்மாற்றம் யாரும் யூகித்திராரது. தொன்மங்களையும் முன்னோர்களின் கதைகளையும் (மித்) மீட்டுருவாக்கம் செய்வதும் மறுவிசாரணை செய்வதும் குமார் அம்பாயிரம் கதைகளின் சிறப்பம்சங்களுள் ஒன்று. மாயத்தன்மை அவரது கதைகளில் மிகச்சிறப்பாக நிகழ்ந்திருக்கிறது. இத்தொகுப்பிலிருக்கும் ஒவ்வொரு கதைகளிலும் விலங்குகள், பறவைகள், மரங்கள், செடிகள், பூச்சிகள் என ஏதோ ஒன்று இடம்பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது.

I highly recommend!

! புத்தகம்

குதிரை வேட்டை | பெர் பெதர்சன் | தமிழில்: யுவன் சந்திரசேகர்

நாவலின் தொடக்கம்; ‘நவம்பர் ஆரம்பம். ஒன்பது மணி. டிட்மௌஸ் பறவைகள் ஜன்னலில் மோதுகின்றன. மோதியதன் விளைவாக, சில வேளை கிறங்கிப் பறக்கின்றன. பிற வேளைகளில், புதுப் பனியில் வீழ்ந்து தவிக்கின்றன – மீண்டும் எழுந்து பறக்க இயலும்வரை.

! புத்தகம்

பறளியாற்று மாந்தர் | மா.அரங்கநாதன்

‘முப்பதுகளின் முன்னர்’ எனும் முதல் பாகத்தில் மட்டும் முப்பதுக்கும் மேற்பட்ட பாத்திரங்கள். ஊருக்கும் மாந்தருக்குமான பிணைப்பு தான் முதல் பாகம். மாந்தரைப் பிரதானப்படுத்தியும் கதையினை ஆங்காங்கே ஓரிரு வரிகளில் நகர்த்திச் செல்வதுமான கதை சொல்லல் யுக்தி. ஏதோவொரு பக்கத்தில் சொல்லிச் சென்ற ஓரிரு வரிகளை சில பக்கங்கள் கடந்து தொடர்வதாய் அமைத்திருப்பதும் மிகப்பெரும் சம்பவத்தை சொற்ப வார்த்தைகளில் கையாள்வதும் வாசிப்பதற்கு சவாலாகவும் சுவாரசியமாகவும் இருக்கின்றது.


‘ஐம்பதுகளின் பின்னர்’ விவசாயத்தை விடுத்து வேலை நிமித்தமாக வெளியூர் செல்கிறார்கள் இரண்டாம் தலைமுறையினர். அவர்களின் நினைவுகளிலிருந்து சொந்த ஊரின் மயக்கம் ஒரு போதும் தெளிவதே இல்லை. சந்திக்கும் ஊர்க்காரர்களிடமெல்லாம் விசாரித்து மகிழ்ச்சியடைகிறார்கள். ஊருக்கும் அவர்களுக்குமான பந்தம் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்தபடியே இருக்கிறது. ஊரை விட்டு எற்கனவே மாநகருக்கு வந்தவர், ஆரலில் மின்சார விளக்கு வந்தது குறித்து ஆச்சர்யம் கொள்கிறார். இனி ஊரில் ரயில் ஓடினால் நாமும் வியந்து பேசவிருக்கும் என நினைத்துக் கொள்கிறான்.

‘தொண்ணூறுகளில்’ எனும் மூன்றாம் பாகத்தில் நான்கைந்து பாத்திரங்களைத் தாண்டி இல்லை. மூன்றாம் தலைமுறைக்கு சொந்த ஊரின் உறவு அறவே அற்றுப்போகிறது. கதையின் மாந்தருக்கு பெயரிடுவதைக் கூட தவிர்க்கிறார். அவர்களுக்கென என்ன அடையாளம் இருந்துவிடப் போகிறது? சொந்த ஊரைக் கடந்து பேருந்து செல்கையில் ‘நம்ம ஊரு’ என மனைவி கணவனை எழுப்பவும், தலையை நிமிர்த்தி முதன் முறையாக தனது ஊரைப் பார்த்துவிட்டு மீண்டும் உறங்கிப்போகிறான்.

குழந்தை கூட அடையாளம் கண்டுகொண்ட ஆரல்மொழி – அவனுடைய சொந்த ஊர் – மனைவியால் அடையாளம் காட்டப்பட்டுப் பார்க்க நேர்ந்த கொடுமையைக்கூட உணரமுடியாத அவனுடைய வாழ்க்கை ‘சோகங்களிலும் துயரமானது தான்’ எனும் ம.இராஜேந்திரனின் வரிகளே இந்நாவலின் சாராம்சம்.

! புத்தகம்

இருமுனை: பாம்புகள் உலவும் புழுக்கள் நெளியும் தேன் மணக்கும் கதைகள்

இலக்கியம் அறிவுத்தளத்தில் இயங்குவதல்ல, உணர்வுத்தளத்தில் எனக் கொண்டால் அது உணர்வின் எந்த பகுதியைத் தொடுகிறது என்பதைப் பொறுத்து கலையாகும் மாயத்தைப் புரிந்துகொள்ளலாம். மென் உணர்வைத் தீண்டி எளிதில் கண்ணீர் உகுக்கச் செய்யும் எழுத்து கலையாகாது. பணத்தேவையின் பொருட்டு விலைமாதானாள், குழந்தையின் கண்களில் அமிலமூற்றி குருடாக்கி பிச்சையெடுக்கச் செய்தான், அவளை வன்புணர்ந்து பின் இரும்பு ராடைச் சொருகினான், காதலியின் கண்களில் தனது அம்மாவின் கண்களைப் பார்த்தான் போன்ற ஒரே ஒரு வாக்கியம் அந்த வேலையைச் செய்துவிடும். தமிழ் சினிமாவின் அநேக திரைப்படங்கள் இதைத் தான் செய்துகொண்டிருக்கின்றன. அதற்கு பார்வையாளர்கள் தொடர்ந்து சோரம் போவது துரதிருஷ்டமானது. அதற்கு சற்றும் சளைக்காமல் இலக்கியமும் தன் பங்கை ஆற்றிக்கொண்டிருக்கிறது. இதுமட்டுமல்லாது தேய்வழக்கான உணர்வினைக் கையாள்வதும் சலிப்பூட்டக்கூடியவை.

இச்சுழலுக்குள் சிக்கிய ‘முகம்’ கதை தவிர்த்து பிற அனைத்தும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன.


புதிதாக எழுதத்தொடங்குபவர்களும் சினிமாவிற்குள் நுழைபவர்களும் திருநங்கை, விலைமாது, ஓரினச்சேர்க்கை, பொருந்தாக் காமம் வகையறா கதைகள் புனைவதைக் காண முடியும். இம்மனநிலை ஆய்விற்குட்படுத்தப்படவேண்டியது. இவ்வகையறா கதைகள் பெரும்பாலும் மென் உணர்வைத் தூண்டி அழ வைப்பவை. இத்தொகுப்பின் அநேக கதைகளில் இதே விஷயங்கள் மிக நுட்பமாக கையாளப்பட்டிருக்கின்றன. அவை வாசகனின் பச்சாதாபத்தை மட்டும் எதிர்பாராமல் அவர்களது வாழ்வியலை – மனதினை – கூர்ந்து அணுகியிருப்பதும் சிறப்பாக புனைவாக்கியிருப்பதும் தூயனின் பலம்.

இத்தொகுப்பின் முதல் கதையான ‘இன்னொருவனி’ல், காணாமல் போதல் என்பதையும் கதையின் தலைப்பையும் முடிவையும் கையாண்டிருக்கும் விதம் – ‘ஒற்றைக்கைத் துலையனி’ல் ராசாத்தி அக்காவையும் இருளாத்தியையும் இணைத்திருக்கும் விதம் ஆகியவை தூயனின் எழுத்துகளில் வெளிப்படும் சிறப்பை உணர்ந்துகொள்ள உதவும் தருணங்களுள் சில.

ஊரை, உறவை, மொழியை இழந்து பிழைப்பிற்காக தமிழகத்தை நாடி வந்த ஏழை பீகார் இளைஞனும் அவனுடன் பழகும் தமிழக இளைஞனுக்குமான உறவும் தான் ‘இன்னொருவன்’ கதையின் பிரதான அம்சம். ஹோட்டலில் வேலை பார்க்கும் வட மாநிலத்தவர்களை மூடர்களைப்போல நடத்துவதைப் பார்த்திருப்போம், பாவம் என்பதைத்தாண்டி வேறெந்த பார்வையையும் நாம் அவர்களுக்குத் தந்ததில்லை. அவர்கள் மீதான நமது பொதுபுத்தியை இக்கதை உடைக்கிறது. இந்திய வரைபடத்தை பாரத மாதாவின் உருவத்துடன் தமிழ் இளைஞன் ஒப்பிடுகையில் சிலுவையோடு பொருத்திப்பார்க்கிறான் அமிர்தி. அதே வேளையில் தனது விரல்களை இரயிலாக்கி வரைபடத்தில் சொந்த ஊரை அடையுமிடத்தில் வெளிப்படும் வெகுளித்தனம், அவனது கதையை நண்பனிடம் பகிர்ந்துகொள்கையில் வெளிப்படும் துயரம் என அமிர்தியை நாமும் நெருங்குகிறோம். தமிழ் இளைஞனின் பார்வையில் கதை பயணமாவது இதற்கு முக்கிய காரணம். தமிழ் இளைஞனை விட்டு அமிர்தி விலகிச்செல்கையில் அத்துயரம் நம்மையும் வாட்டுகிறது (வெறும் கழிவிரக்கம் அல்ல).

இக்கதையை வாசிக்கையில் நாஞ்சில் நாடனின் கூர்க்கா குறித்த கதையொன்று நினைவிற்கு வந்தது.

மிகப்பொருத்தமான உவமைகளும் தூயனின் எழுத்திற்கு வலு சேர்க்கின்றன. வட இந்தியனான அமிர்தி, தமிழ் எழுதுகிறபோது ‘அவ்வெழுத்து ஊர்ந்து செல்லும் எறும்புகள் போலிருக்கும்’ என எழுதுகிறார். எல்லோரிடமும் தன்னை புனிதாத்மாவாகக் காட்டிக்கொள்ளும் இருதயசாமி மொட்டைமாடியில் தொழில்காரியுடன் உறவுகொள்வதை எழுதுகையில், ‘அவரின் இயக்கம் ஒரு கொலையை மென்மையாக செய்ய ஆயத்தப்படுவது போன்றிருந்தது’ என்கிறார். வாலில்லாத பெரிய சைஸ் பல்லி போலிலிருந்தது அவனின் குறி – அந்திவேளையில் படுத்தெழுந்தது போலவொரு வெறுமை மனதுக்குள் சூழந்திருந்தது – பேருந்துகள் பன்றியின் முலைப்பால் குடிக்க முண்டும் குட்டிகளாக இடம் கிடைக்காமல் திணறியபடி ஒன்றொடொன்று முட்டிக்கொண்டிருந்தன – மாட்டின் கருத்த மூக்குபோன்ற பழையபாணி உருண்டை சுவிட்ச்கள்.

அட்டைப்படத்திலிருக்கும் ஓவியத்தை சிலுவையில் தொங்கும் இயேசு என்றிருக்கிறார் கிருஷ்ணமூர்த்தி. யோனி என பதறியிருக்கிறார் தூயன். என்னவொரு முரண்!

O

இருமுனை | தூயன் | யாவரும் வெளியீடு | விலை Rs. 140/-

! புத்தகம்

புலிநகக் கொன்றை பற்றி… 2: இந்தா பிடி ஒரு நாவல்!

1

புலிநகக் கொன்றையில் கதை நகரும் வேகம் அதற்கு கூடுதல் வாசிப்புத்தன்மையூட்டுவது அல்ல. நாவலின் வடிவ ரீதியாக இயல்பாகவே உருவானது அந்த வேகம். இதற்கு முக்கியமான காரணமாக நான் கருதுவது, எந்த விஷயத்தை சொல்லும் போதும் ஆழமும் விரிவும் நுண்மையும் கூடிவராத மேம்போக்குதன்மை.

புத்தகம்

புலிநகக் கொன்றை பற்றி… 1: வாசிப்பின் பலஸ்ருதி

“முழுக்க திருநவேலி பற்றி தான் வருகிறது” என்று அறிமுகமான நாவல் புலிநகக்கொன்றை. திருநவேலிக்கு அப்பால் திருநவேலி பற்றி கேள்விப்படுதல், வாசித்தல் அவ்வளவு சந்தோஷம். யமு அண்ணன் என்னிடம் அப்படிச் சொல்லி இந்த நாவலைப் படிக்க விருப்பமூட்டியதும் சிறு தாளில் ‘புலிநகக் கொன்றை..

புத்தகம்