வேதம் ஓத வேண்டாம்?

வேதத்தைப் படிக்க முடியவில்லையா? கவலையை விடுங்கள்.

கீதையைப் படியுங்கள். அதுவும் முடியவில்லையா? ஒன்றும் கவலை வேண்டாம். திருப்பாவையைப் படியுங்கள். போதும். ஏனென்றால் #திருப்பாவை ‘பாதகங்கள் தீர்க்கும், பரமனடி காட்டும், வேதம் அனைத்திற்கும் வித்தாகும்’ என்பது வாக்கு

அதெப்படி திருப்பாவையை ‘வேதம் அனைத்திற்கும் வித்து’எனலாம்?’ மார்கழித் திங்கள்’எனத்துவங்கும் முதல் பாசுரத்தில் விடை உள்ளது.

‘நாராயணனே நமக்கே பறைதருவான் ..’என்கிறாள் ஆண்டாள்.

‘நாராயணன் பறைதருவான்’என்றில்லாமல் ‘நாராயணனே’என்று ‘ஏ’காரம் உள்ளதைக் கவனியுங்கள்.நாராயணன் ஒருவனே மோட்சம் அளிப்பான் என்பது பொருள்.

கீதையின் ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ’என்கிற வரிகள் இதனுடன் ஒத்திருக்கின்றன.கீதை,வேதத்தின் சாரம்.ஆக,கீதையில் கண்ணன் சொல்லும் ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ’என்பதை ஆண்டாள் ‘நாராயணனே நமக்கே பறை தருவான்’என்பதன் மூலம் உணர்த்துகிறாள்.

இதெல்லாம் சரி. திருப்பாவை தெரியவில்லை என்றால் ?

அதற்கும் பதில் உள்ளது.

‘ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரைவையம் சுமப்பதுவும் வம்பு’என்பது முதலில் கண்ட செய்யுளின் முடிவு. திருப்பாவை தெரியாதவரை இவ்வுலகம் சுமப்பதே வீண் என்கிறார்கள்.

நாம் வீணானவர்களா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆக கூடியிருந்து திருப்பாவையைப் பாடுவோம் வாரீர்.

சிங்கப்பூர்

ஓஷோ - ஒரு ஓவியப் பிரார்த்தனை

ஓஷோ குறித்து எனக்கு பெரிய அறிமுகமில்லை. சில ஆண்டுகள் முன்பு, புதிய கலாச்சாரம் வாசகர் வட்டக் கூட்டமொன்றில், ஒரு தோழர் (பெயரைச் சொன்னால் கட்சி விரோத நடவடிக்கையாக கருத வாய்ப்பிருக்கிறது) ஓஷோவின் கருத்துக்கள் குறித்து காட்டமாக விமர்சித்த நினைவிருக்கிறது. கடந்த சில தினங்கள் முன்பு எதேச்சையாக ஓஷோவின் ‘வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்’  (கண்ணதாசன் பதிப்பகம்) எனும் நூல் கண்ணில் பட்டது. சரி, படித்துதான் பார்ப்போமே என படிக்க துவங்கினேன். ஒரு சில பக்கங்களுக்குள், அவர் எளிமையாக முன்வைக்கும் ஆழமான கருத்துக்களிலும், குறுங்கதைகளிலும் ஈர்க்கப்பட்டேன்.

புத்த மதத்தையும், பிற மதங்களையும் வகைதொகையின்றி அவர் கிண்டலடித்த வண்ணமிருந்தாலும், புத்தரின் மத்திம பாதையை புத்துணர்ச்சியோடு எடுத்து வைப்பதில் ஓஷோ வெற்றி பெறுகிறார். குறிப்பாக இயங்கியலோடு ஒட்டி, “உண்மையான ஆன்மீகம் எந்த நிலையான கொள்கையும் கொண்டதல்ல. அது மாறும் தன்மை கொண்டது. இதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்” எனச் சொல்லும் பொழுது, நெருக்கமாக உணர வைக்கிறார்.

“நீங்கள் செய்யும் உணர்வற்ற சடங்கால், எந்த பிரயோஜனமும் இல்லை… அதே சமயம் புகைப்பதை முழு ஈடுபாட்டுடன், உணர்வோடு செய்யலாம். அதில் தவறில்லை. அப்பொழுது அது பிரார்த்தனையாக மாறுகிறது.” எனும் கூற்று சிரிப்பை வரவழைக்கலாம். ஆனால் அதனை நடைமுறைப்படுத்திப் பார்க்கும் பொழுது அதன் முழு அர்த்தத்தையும் உணர முடியும்.

உதாரணமாக, அன்றாடம் ஒரே சமயத்தில் பற்பல வேலைகளை செய்யும் (multi-tasking) பல இளைஞர்களைப் பார்க்கிறேன். அதனை பெருமையாக கருதுபவர்களும் உண்டு. அவ்வாறு கைபேசியில் விரல்களால் நிரவிய வண்ணம் உண்ணுவது, நடப்பது, கணிப்பொறியில் வேலை செய்வது என கவனச் சிதறல்களுடனேயே வாழும் தலைமுறை, வாழப் போகும் தலைமுறைகளுக்கு கிளர்ச்சிக்கும், மகிழ்ச்சிக்குமான வேறுபாடு புரிய வேண்டுமானால், இத்தகைய ஒரு சமயம்-ஒரு வேலை முறையிலான கவனக்குவிப்பை நடைமுறைப்படுத்தாமல் சாத்தியமில்லை.இன்னும் எழுதலாம். ஆனால் இந்நூலை இன்னொரு முறை ஆங்கிலத்தில் வாசிக்க விரும்புகிறேன். அதன் பிறகு ஒரு வேளை எழுதத் தோன்றினால், மதிப்புரையாக எழுதுகிறேன். வாசித்து முடித்த பின்னால், ஓஷோவை வரைந்து பார்த்தேன். ஓஷோ குறித்த அறிமுகம் இல்லாமலிருந்த போதிலும், ஓஷோவின் வசீகரமான, சிறிய, ஒளிரும் கண்கள் மீது எனக்கு எப்பொழுதும் ஈர்ப்பு உண்டு. ஓவியம் சரியாக வந்திருக்கிறதா, இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். இந்த ஓவியத்தை எனது சக பயணி ஹா-விற்கு சமர்ப்பிக்கிறேன்.

தமிழ்

கூதிர்காலக் குறிப்புகள் #1

ஏதோவொரு
சிறு புள்ளியில் மெல்லத் துவங்கி
அசைந்தாடி
வெளி பயின்று
தயங்கி நின்றும்
தடையற்று சென்ற வண்ணமுமாய்
உருவாகி நிற்கின்றன,
செந்நிறம் பரவியோடும்
தைல வண்ண ஓவியங்கள்.
மொழி கொண்டு
கோடுகள் இடுவதால் மாத்திரம்
பொருள் விளங்குமா என்ன?

தமிழ்

ஓர்  மௌனி...

உயிர் பிழையின்

ஒலியில்லா வடிவம் நான்,

உடலினை ஊனப்படுத்தி

என்னுள் ஓலமிடும்

உண்மைகளின் சுவாசத்தை

காத்தெடுக்கும் முயற்சியின்

உந்துதலே என் வேடம்

ஆம் , நான் ஊமையல்ல

எரிமலைகளை உள்ளடக்கிய

ஓர் மௌனி…

தமிழ்

காலம் - சில எண்ணங்கள்

காலத்தைக் கடிகாரம் கொண்டு அளவிட முடியுமா?

கடிகார முள் வினாடிக்கு ஒரூ முறை என்று துடிக்கிறதே, அப்படித்தான் காலமும் நகர்கிறதா? அது ஏன் வினாடிக்கு ஒன்று என்று துடிக்க வேண்டும்? 1-24 வரை தான் காலம் என்று எப்படி எடுத்துக் கொள்வது? நம்முடைய ஒரு நாள் என்று உறங்கி எழுவதில் இருந்து மீண்டும் உறங்கும் வரை இருக்கும் நேரத்தைக் குறிக்க நாம் பயன் படுத்தும் ஒரு கருவியைக் கொண்டு காலத்தை அளவிடுவது எப்படி?

சரி. விஷயத்திற்கு வருவோம்.

நம்மால் அளவிட முடியாதது, அறிந்துகொள்ள முடியாதது காலம். ஆனால் நமது புலன்களுக்கு ஏற்பக் காலத்தை அனுமானிக்க நாம் பயன்படுத்தும் கருவி கடிகாரம். மணல் கடிகாரம், முள் கடிகாரம், சாவி கொடுக்கும் கடிகாரம், டிஜிட்டல் கடிகாரம், அட்டாமிக் கடிகாரம் என்று பலதையும் நாம் உருவாக்கி வைத்துள்ளோம். எதற்கு? நம்மால் அளவிட, அனுமானிக்க, அறிந்துகொள்ள முடியாத காலத்தை, நம்மால் அனுமானிக்கக்கூடிய, புரிந்துகொள்ளக்கூடிய வடிவங்களின் மூலமாக அறிந்துகொள்ள, அளவிட முயல்வதற்காக.

இப்போது கடிகாரம் என்பதற்குப் பதில் விக்ரஹம், சிலை என்று வைத்துப் பாருங்கள்.

நம்மால் அளவிட முடியாத, அறிந்துகொள்ளத் திராணியற்ற மனித மூளைக்கு ஏற்றாற்போல், அந்த மூளையால், மனத்தால் புரிந்துகொள்ளக்கூடிய வடிவம் இறை உருக்கள். சாவி கொடுக்கும் கடிகாரம், ஆட்டொமாட்டிக் கடிகாரம், குவார்ட்ஸ் கடிகாரம், அட்டாமிக் கடிகாரம் என்பவை போல் சிவன், விஷ்ணு, தேவி, இன்னபிற தெய்வங்கள் என்று அவைகளுக்கான உருவங்கள். அவ்வளவு தான் ஆன்மிகம்.

மூலம் முக்கியமே தவிர, மூலத்தை அறிந்துகொள்ளப் பயன்படும் கருவியில் வேற்றுமைகள், உயர்வு தாழ்வுகள் தேவையில்லை.

பி.கு.: இல்லை, அப்ரைசல் நேரமெல்லாம் இல்லை. மனதில் தோன்றியது. அவ்வளவுதான். செய்தி உபவாசம் + நெடுநேரம் தனியான நடைப்பயிற்சி + வாரத்திற்கு 3 நூல்கள் வாசிப்பு = மேற்காணும் எண்ணங்கள்.

Writers

நினைவுகள்

விடியலை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் தருணத்தில்

உன்னை கண்டதும் ஓர் பெரும் பள்ளத்தில் வீழ்ந்ததும்

என் துர்திஷ்டம்!

அமைதியான வாழ்வில் ஆர்ப்பாட்டமாய் வந்த உன் அன்பை

முந்திக்கொண்டு எனை சூழ்ந்தது இருள்..

பெரும் போராட்டத்திலிருந்து சிறிது விடுதலையாகி

தயக்கத்துடன் உனை வந்தடையும் இச்சமயம்

என்னை ஆட்டுவித்துக்கொண்டு பின்னிழுக்கின்றது ஒன்று..

வாழ்க்கை எனும் சக்கரத்தின் அடியிலிருந்து

மீண்டு வருவதை விட கடினமானது இது..

கண்ணாளனே!

ஆழிப் பேரலையாய் உயர்ந்து நிற்க்கும் இருள் சூழ்ந்த நினைவுகள்

எனை அழிக்கும் முன் ஒரு முறை காதலித்துவிடு..