அவர்களுக்கு துணைநிற்போம்!

சமூகத்தில் தற்பொழுது நடந்துக்கொண்டிருக்கும் சாதிய கொடுமைகள். அடுத்தடுத்து நடக்கும் சாதிய கொலைகள், காதல் திருமணத்தில் தொடங்கி பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வரையுமே சாதிய வன்கொடுமைகள் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.இதற்கான முற்றுப்புள்ளியை யார் தான் வைப்பது என்ற கேள்வி ஒவ்வொருவரின் மனதிலும் எழுந்துள்ளது. எனது பள்ளி பருவத்திலும் இப்படியான பிரச்சனைகள் அதிகம் இருந்தது.ஆனால் குரல் கொடுக்க என்னால் முடியாமல் பள்ளி நிறுவன்ங்களுக்கு பயந்து இருக்கும் நிலை ஏற்பட்டது.

சிறு வயதில் இருந்து என்னை என் உறவினர்களும் என் அக்கம் பக்கத்து வீட்டாரும் சாதியை வைத்து பழகுமாரு அறிவுரை வழங்குவார்கள்.அவர்களோடு பேசுவதற்கும், பழகுவதற்கும் தடுத்து வந்த சமூகம்.என் உறவினர்களும் சரி அக்கம் பக்கத்தினரும் சரி அவர்களோடு பேசுவதைக் கண்டாலே என்னை திட்டுவார்கள்.சிறு வயதில் எனக்கு அவர்கள் கூறிய சாதி மேல் இருந்த கோபம் அவர்களை மட்டும் ஏன் பிரித்து வைக்கிறார்கள் என்று நினைத்து அவர்களை மீறி நான் எல்லாரிடமும் சரிசமமாய் பழக ஆரம்பித்தேன்.

பள்ளியிலும் அப்படிப்பட்ட நிலை தான் இருந்தது. எனது அறிவியல் ஆசிரியை (ஜெஸிந்தா) அவர்கள் என் வகுப்பில் பயிலும் சகதோழி சற்று படிப்பில் பின்தங்கிய நிலையில் இருந்தால். அவளை அறிவியல் ஆசிரியை நீ தலித் என்றும் அதனால் தான் படிப்பில் சரியான கவனம் இல்லை என்றும் கூறி அவளை மிக்க்கடுமையான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்.எனக்கு கோபம் வரும் ஆனால் என்னால் எதையும் வெளிக்காட்ட முடியவில்லை. எல்லாவற்றிலும் என் தோழி ஒதுக்கப்பட்டாள். எங்களோடு அமர்ந்து சாப்பிட்டால் கூட என் அறிவியல் ஆசிரியைத் திட்டுவார். எங்களோடு எந்த வித போட்டிகளில் கூட கலந்து கொள்ளவிடமாட்டார்.100 க்கு மேற்பட்ட மாணவிகள் என் வகுப்பில் இருப்பர் அவர்களில் இவளை மட்டும் சொல்வதால் பாதி நாட்கள் வகுப்பிற்கு வரமாட்டால்.எதிலும் பங்கேற்கமாட்டால். எங்களால் மறைந்து தான் பழகமுடிந்தது. இதை எதிர்த்து குரல் கொடுக்க முடியாத கோழையாக திகழ்ந்திருந்தேன்.

பள்ளி பருவத்தைக் கடந்து சென்று கல்லூரிக்குள் நுழைந்தேன். கல்லூரி எனக்கு கற்றுக்கொடுத்தது சாதி, மதம் இல்லா சக மனிதனாய் மனித குலத்தோடு இணைந்து வாழும் ஓர் புதிய வாழ்க்கை. சாதியும் குறுக்கிடவில்லை, மதமும் குறுக்கிடவில்லை. அதற்கு மிக முக்கிய காரணம் இந்திய மாணவர் சங்கம். இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்ததும் எனக்கான பாதை எதுவாக இருக்க வேண்டுமென்று என்னை சிந்திக்க வைத்தது. சமூக பிரச்சனைகளில் குரல் கொடுக்கும் அமைப்பில் நானும் என் குரலைப் பதிவு செய்ய ஆரம்பித்தேன். அப்பொழுது நடைமுறைகளில் இருந்த பல பிரச்சனைகளைத் தெரிந்துக்கொண்டேன். அதில் ஒன்று தான் இப்பொழுது அதிகமாக நடந்துக்கொண்டிருக்கும் தலித்களுக்கான சமூகப் பிரச்சனைகள். நம் நாட்டில் அதனால் பல பேர் கொல்லப்பட்டனர்.எதுவும் புரியா நிலையில் இருந்தேன். மாற்றத்தைக் கொண்டு வர வேண்டி மாணவர் சங்கத்தோடு இணைந்தேன். என் தோழர்களான தலித்துக்களின் பிரச்சனைகளை திரும்பிப் பார்த்து குரல் கொடுக்க ஆரம்பித்தேன்.எல்லையற்ற சாதி வெறிக் கொலைகள். உயர் சாதிப் பெண்களை  திருமணம் செய்ததால் சாதிவெறியில் பலபேரை வெட்டிகொன்ற சம்பவம் எனக்குள்ளே மிகுந்த ஆழமான தேடல்களை எழுப்பியது. ஏன் சாதி வெறியும், மத வெறியும் நாட்டில் தலைவிரித்து ஆடுகின்றது. அடுத்தடுத்து நடந்த சாதி வெறிக்கொலைகள் உயர்சாதிப் பெண்களை திருமணம் செய்ததால் நடந்த கெளசல்யா-சங்கர், இளவரசன்-திவ்யா, கோகுல்ராஜ்-சுவாதி போன்ற சாதிய வன்கொடுமைகள். அதுமட்டுமில்லாமல் கல்லூரிகளில் நடந்துக் கொண்டிருந்த கொடுமைகள். ரோகித் விமுலா வில் தொடங்கி தற்போது முத்துக்கிருஷ்ணன் இப்படி நிறைய சாதியக் கொலைகள். காதல் திருமணங்களில் தலித் என்ற காரணத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டவர்களும், பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்களை தொந்தரவு செய்து தலித் என்ற காரணமே உன் சாவை தீர்மானிக்கும் படி கொல்லப்பட்ட மாணவர்களும் தலித்தாய் பிறந்தது என் தவறல்ல என்பதை சுட்டும் வகையில் இறந்துள்ளனர்.

சாதி எங்கிருந்து வந்தது அதை ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற கேள்வி இன்னும் என்னில் எழுந்துள்ளது. எல்லோரும் ஒரே மனிதகுலமாய் தானே பிறந்துள்ளோம். ஆண், பெண் என்ற உடலமைப்பால் மட்டும் தானே வேறுபட்டுள்ளோம். மற்ற அனைத்திலும் நம்மால் என்ன முடியுமோ அதை செய்யும் அனைத்து திறனும் இருவரிடமும் இருக்கிறது. ஆனால் சாதியின் பங்கு தான் அதிகமாக உள்ளது. ஒருபுறம் இப்படி வதைக்கப்படுகிறார்கள் மறுபுறம் துப்புரவுத் தொழிலாளர்கள் என்ற பெயரில் வதைக்கப்படுகிறார்கள். அவர்களின் நிலை தலித் என்ற ஒரே காரணத்தால் மலத்தை அல்லும் அவநிலைக்கு தள்ளப்பட்டுகொண்டு இருக்கிறார்கள். விவரம் தெரிந்த நாட்களில் இருந்து கேள்விப்படுகிறேன் துப்புரவுத் தொழிலாளர்கள் யார் என்றால் தலித் என்று தான் கூறுகிறார்கள். ஏன் அவர்கள் மட்டும் அதை செய்கிறார்கள் என்று கேள்வி கேட்டால் அதனால் தான் அவர்கள் தலித் இனம் என்று என் காதுபட பேசினர் பலர். மலம் அல்ல அவர்கள் மட்டும் ஏன் வர வேண்டும். ஒரு நாள் அவர்கள் அதை செய்யவில்லை என்றால் பொதுக் கழிப்பிடங்களின் நிலை என்ன என்று கேள்வி கேட்கும் சமூகம், ஏன் அவர்கள் மட்டும் அதை செய்ய வேண்டும் என்கிற கேள்வியை கேட்பதில்லை.

தோழர் திவ்ய பாரதி அவர்களின் கக்கூஸ் ஆவணப்படம் ஒரு சிறந்த தொகுப்பு.துப்புரவுத் தொழிலாளர்களின் உண்மை நிலையையும் அவர்களின் துயரங்களையும் மிக அருமையாக படைத்துள்ளார். இன்னும் அவர்கள் அரசாங்கத்தால் கொலைசெய்யப்படுகிறார்கள் என்பதை உணர்த்தும் அருமையான பாடல் வரிகள். பாதாளக் குழியில் இறங்கி சுத்தம் செய்து தான் அவர்களது குடும்பங்களைக் காக்க வேண்டியிருக்கிறது. மறைக்கப்பட்ட படுகொலைகளும், வெளிவராத சாதியக் கொலைகளும், அரசாங்கத்தால் தூண்டப்பட்டு பாதாளக் குழிகளில் இறக்கப்பட்டு படுகொலை செய்யப்படும் துப்புரவுத் தொழிலாளர்கள் ஆகியோரின் மரணங்களும் ஊடகங்களுக்கு கூட தெரியாமல் மறைக்கப்பட்டவை இன்னும் பல. கடந்த வாரத்தில் கடலூரில் விஷவாயு தாக்கி  3 பேர் இறந்துள்ளனர். அது மிகவும் தவறு அரசாங்கத்தால் அந்த மூவரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பாதாள குழியில் இறங்கி சுத்தம் செய்தால் விஷவாயு தாக்கும் என்று அரசாங்கத்திற்கு தெரியும் ஆனாலும் அவர்களை அந்த வேலை செய்ய சொல்லி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமல்ல அதை தொடர்ந்து திருச்சியில் பாலக்கரை என்ற பகுதியில் வயது முதியவரைக் கட்டாயம் பாதாளக் குழியில் இறங்க வைத்துள்ளது அரசாங்கம். கழுத்து வரை கழிவு இருக்கிறது. அவர் இறங்கும் காட்சியை என்னால் படமாக கூடப் பார்க்க முடியவில்லை. திவ்யபாரதியின் ஆவணப்படத்தில் உள்ள பாடலில் அழகாக கூறியிருப்பார். “ ஆள மட்டும் நீங்களா கொஞ்சம் சொல்லுங்கடா, செத்து மாள மட்டும் நாங்களா வந்து அல்லுங்கடா ” இதை விட யாரும் அருமையாக அரசாங்கத்திற்கு எடுத்து சொல்ல முடியாது.

நாம் அனைவரும் முன்னெடுத்து செல்ல வேண்டும் அவர்களின் பிரச்சனைகளை. எப்படி கொண்டு செல்வது நம் அரசியல் நிலைமையை நினைத்தாலே அதில் இந்த பிரச்சனைகள் பாதி மறைந்து விடும். சமூகப் பிரச்சனைகள் அதிகரித்து விட்டதால் தலித்திற்கான பிரச்சனைகள் மறைந்து கிடக்கிறது.

முத்துக்கிருஷ்ணன் மரணம் கூட ஒரு எடுத்துக்காட்டு. தொடர்ந்து ஒரு வாரம் மட்டுமே அவரின் மரணம் பெரிய அளவில் தெரிந்தது ஆனால் இப்பொழுது இடைத்தேர்தல் பற்றிய பிரச்சனைகளில் காணாமல் போனது.ஊடகங்களும் சரி அதன் பின் அவரைப் பற்றிய எந்த வித தகவலையும் தரவில்லை அதை பின்னுக்கு தள்ளிவிட்டனர்.எங்கு போனது ஓர் உயிர் என்று யாருக்கும் தெரியாது.

வளர்ந்து வரும் இளைய சமூகமே மாற்றம் கொண்டு வா ஆண், பெண் என்ற ஒன்று மட்டும் தான் நம்மைத் தனித்துக் கொட்ட வேண்டும். சாதியோ, மதமோ நம்மிடையே வரக்கூடாது என்று உறுதிக்கொள்வோம்.மாற்றுப் பாதையையும் மாற்றுக் கருத்தையும் கொண்டு செல்லுங்கள்,தலித் என்ற வார்த்தையை உடைத்தெரியுங்கள். கல்லூரிகளும் மாணவர்களை மாணவர்களாக மட்டும் பாருங்கள். இப்படி சாதி மதம் சார்ந்த பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் நமது அரசாங்கம் தான்.தனி மனிதரை நான் குறைக்கூற விரும்பவில்லை. இப்பொழுது இருக்கும் ஆட்சி முறை தான் காரணம் ஒரு மாணவனும் சரி,துப்புரவு பணியில் உள்ளவர்களும் சரி இறக்கும் போதே முறையான விசாரனைகளும், தண்டனைகளும் வழங்கப்பட வேண்டும். தலித் என்ற காரணத்தால் ஒரு மாணவனின் சாவு நடக்கக் கூடாது.அதேபோல் மலம் அல்லவும் கூடாது அவர்களின் சாவும் இனி நம் நாட்டில் நடக்கக் கூடாது.அதற்கான மாற்று வழி இருந்தும் அதை நடைமுறைப் படுத்தாத நம் அரசாங்கம்.இவையனைத்தும் மாற்றம் பெற வேண்டுமெனில் அரசாங்கம் மாற்றம் பெற வேண்டும்.இளையோர்கள் எடுப்போம் மாற்றம் நோக்கியப் புரட்சிப் பாதையை.
தோள் கொடுப்போம் நம் தோழனுக்கு, உடைத்தெரிவோம் சாதிய வார்த்தைகளை, தூக்கி விடுவோம் பாதாளத்திலிருந்து,களை எடுப்போம் மாற்றத்திற்கான அரசியலை, கைக்கோர்த்துக் கொண்டு செல்வோம் அவர்களையும் நம் பாதையில்.
மாற்றம் வேண்டி…

சமூகம்

மனசாட்சி அற்ற அவர்கள்....

திருவெற்றியூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் நடந்த சிறுமி ரித்திகாவின் மரணம் .மூன்று வயது சிறுமி கொல்லப்பட்டதை அறிந்த நான் பதறினேன் .எதனால் கொலை நடந்திருக்கும் என்று ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் நகைக்காக தான் கொலை நடந்தது என்று அந்த கேள்விப்பட்டதும் அந்த குடியிருப்புக்கு சென்றேன் . நகைக்காக கொன்றதாக கூறி என்னிடம் ரித்திகாவின் பெற்றோர்கள் புலம்பினார்கள் ஆனால் இன்று உடற்கூராய்வில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது .அந்த நிமிடம் என் மனநிலை மிகவும் பதறிப்போனது.இளம் பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை படிப்படியாய் வளர்ந்து சிறுமியிடம் தாவ ஆரம்பித்துள்ளது. பட்டியல் போடும் அளவிற்கு நீண்டுள்ளது. நிர்பயா வில் ஆரம்பம் ஆகி இன்று ரித்திகாவை நோக்கி காம வெறிபிடித்தவர்கள். அந்த நிமிடம் எழுந்த கோபத்திற்கு அளவே இல்லை. நான் கத்தினால் மட்டும் மாறிவிடுமா? இந்த சமூகம் என்ற கேள்விக்கு தள்ளப்பட்டேன். சிறுமிகள் சிதைக்கப்படுகிறார்கள் இந்த காம வெறியர்களால். யாருடா நீங்களெல்லாம் தாய்நாட்டில் உடன் பிறந்தவர்களாக தான் பார்க்கிறோம்.ஏன் காமவெறிக்காக பிறந்தது போல் உங்களின் எண்ணமும் இந்த மாறுதல்களும் உள்ளது.காமம் தான் உங்களின் கண்களை மறைக்கின்றதா ? உன் தாய், சகோதரி, மனைவி, உன் குழந்தை இவர்களும் பெண்கள் தானே? அப்போது எங்கே போனது உனது காம வெறி?மனமில்லாத மனிதனாய் வாழ்பவனே அறிவில்லாத மிருகமாய் ஏன் திரிகிறாய்.நீ செய்யும் அசிங்கத்தால் என் பெண் இனமே அச்சப்படுகிறது.குழந்தையில் தொடங்கி முதியவர் வரை பயம் எங்களை வாட்டுகிறதடா. முதலில் காதலிக்கவில்லை என்று கூறினால் ஆசிட் அடிப்பதில் தொடங்கி அரிவாள் வெட்டு வரை சென்றீர்கள். இப்பொது சுருமி ஏன்னு கூட பார்க்காமல் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு இனி இந்த உயிர் எதற்கு என்று கொன்றுவிடும் கொலைகாரனே! உனக்கு இன்னுமா புரியவில்லை நீ வாழும் நாட்டின் பெயர்கூட தாய் நாடு என்று பெண்மையால் சூட்டப்பட்டுள்ளது. இநத அரசாங்கமும் சரி, இந்த நாட்டு மக்களும் சரி எத்தனை நாள் தான் விழிப்புணர்வை நாடி இருப்பார்கள் என்று தெரியவில்லை.குற்றவாளிகளுக்கு தண்டனை தான் என்ன? படுத்து உறங்க அறை, நிம்மதியான அமைதியான இடம், வெகுநாள் சிறை மட்டுமா? மனித உரிமை ஆணையமே எங்கே சென்றாய்? இப்படி ஒரு கொடூரவாதிகளை வேரோடு களை எடுக்க முன்வரமாட்டாயா? பெண்களைக் காக்க வேண்டிய காவல் துறையே பேடிகளை நன்றாக சிறையில் பாதுகாத்து கொள்ளுங்கள்.பெண்களின் சுதந்திரம் எப்போது கிடைக்கும் என்று ஏங்கவைத்துவிட்டீர்களே?பாலியல் கொடுமையிலிருந்து எப்போது பெண் இனம் மீட்க்கப்படும்? பெண்கள் ஆடை அணியும் முறை சரியில்லாததால் தான் பாலியல் தொல்லை நடப்பதாக கூறினீர்கள்.இன்று மூன்று வயது சிறுமியின் எந்த ஆடையடா அணிந்திருந்தாள் உங்களின் காமவெறிப்பிடித்த மனதை ஈர்க்க . ஆணாக பிறந்த நீ ஏன் காம வெறிக்கு திரும்பிக் கொண்டிருக்கிறாய்? இதற்காகவே எத்தனையோ இடங்களில் அரசு அனுமதி வழங்கி நடத்தி கொண்டிருக்கிறது அங்கு சென்று உன் வெறியை சுகத்தை அடைந்துக்கொள்ளலாமே.பள்ளி செல்லும் மாணவியையும்,பச்சிளம் குழந்தையையும் ஏன் சுரண்டுகிறாய்.ஏன் பாலுணர்வு பெண்களுக்கு ஏற்படாதா? ஒரு பெண்ணும் ஆணும் விரும்பி சென்றால் அது அவர்களின் சுதந்திரம் .பாலியல் வன்கொடுமை என்பது அடுத்தவர்களின் சுதந்திரத்தை அழிப்பது உனக்கு தெரியவில்லையா? மனம் உடைந்து போய்விட்டது இதை விட உன்னை எந்த சொற்களால் வன்மையாக கண்டிப்பேனடா என் பெண் இனம் காக்க. ஆணினம் திருந்தினால் அனைத்தும் திருந்திவிடும் என்கிறேன் நான். உன்னால் என்னை பெற்றெடுத்த என் தகப்பனையும், என் தோழ் கொடுக்கும் தோழனையும், என்னுடன் வந்து என்னோடு பயணம் செய்யும் என் கணவனையும் பார்த்து நீயும் ஆணினம் தானடா என்று கேட்கும் நிலையை ஏற்படுத்திவிட்டாயே. பாலியல் கொடுமை செய்யும் கொடூரனை வன்மையாக கண்டிக்க வேண்டும். பிறப்பால் நானும் ஓர் பெண் என் இனத்திற்காக நானும் இன்னும் சற்று தினங்களில் களம் இறங்கிப் போராடுவேன்.ஒரு ரித்திகா இறந்தால் என்ன இன்னும் பல நூறு ரித்திகாக்கள் என்னை போல் உருவெடுப்பார்கள்.சீட்டுக்கு சண்டை போடும் ஊட்டு போட்டு எங்களுக்கு பாதுகாப்பாக இருக்க வைத்தால் உன் சீட்டிற்கு ஆசைப்பட்டு என் பெண் இனம் உருவாகும் முன்பே அழிவதை பார்த்துக்கொண்டு இருக்கிறாய்.சற்று திரும்பி பார் பெண் இனம் படும் இன்னல்களை. புதிய சட்டங்களை கொண்டு வந்தால் மட்டும் மாறாது ஆண்களின் காமவெறி.மாணவர்களுக்கு பள்ளிக்கூடத்தில் இருந்தே பாலியல் கல்வி முறையை கொண்டு சென்றால் தான் பாலியல் என்ற வார்த்தைக்கவது அர்த்தம் புரியும்.மாணவனாக வளரும் போதே அவன் பெண்ணை மதித்து பெண்ணியம் பேசினால் இளைஞனாய் வளர்ந்ததும் காமவெறியின் சுகம் அவன் கண்ணுக்கு தெரியாது. ஆணும் பெண்ணும் இங்கு சரிசமம்.பாலின சமூகத்தை பாதுகாப்போம்.நிர்பயா விலிருந்து ரித்திகா, இன்னும் ஏராளமான பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்காக ஒன்று சேர்ந்து கைக்கொடுப்போம்! தொடர்ந்து குரல் கொடுப்போம்! நியாயத்திற்கு துணைநிற்போம்!

சமூகம்

தூக்கம்

தூக்கம், நம் தினசரி வாழ்வில் தவிர்க்க முடியதா ஒரு இயற்கை நிகழ்வு. சரியான, அளவான தூக்கம் எல்லாருக்கும் அவசியம். தூக்கமின்மையே, உடல் பருமன், கோபம், வெறுப்பு, மன அழுத்தம் என்று பல நோய்களுக்கு காரணமாக அமைகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகிறன்றன.

நான் இருந்த குடியிருப்பில் தினந்தோறும் இரவு 11 மணிக்கு ஒரு கூர்க்கா விசில் ஊதிக்கொண்டு குடியிருப்பை வளம் வருவார். அந்த விசில் சப்தம் எதோ என் சிறு வயதில் ஒரு வித பயத்தை தந்திருக்கிறது. அந்த விசில் சப்தம் வரும் வரை என்றைக்காவது விழித்திருந்தால்(பள்ளி பருவங்களில் 3 அல்லது 4 முறை மட்டுமே) “கூர்க்காவே வந்துட்டாரு, இன்னும் தூங்கலை” என்று எங்கள் வீட்டில் சொல்வதுண்டு. மேல் வரியை நன்றாக கவனித்தல் நான் சொல்ல வருவது புரியும். “11 மணிக்கு ஒரு கூர்கா”. 11 மணி வரை விழித்திருக்க அனுமதி இல்லாத காலங்கள். காரணம் நல்ல தூக்கத்தின் அவசியம் வீட்டில் அம்மா அப்பாவிற்கு தெரிந்தது தான்.

அது 10, 12 வகுப்பு தேர்வு காலங்களில் கொஞ்சம் மாறுபட ஆரம்பிக்கிறது. நான் பொதுவாக அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கம் உள்ளவன். அதனால் எனக்கு பெரிதும் இது மாற்றப்பட வில்லை. ஆனால் கூர்கா சத்தம் சாதாரணமாக கேட்க துவங்கியது. அனால் பொதுவாக நிறைய நேரம், இரவில் கண் விழித்து படிக்கும் எனது நண்பர்கள் கல்லூரி ஹாஸ்டலில் கண்டதுண்டு. இது தேர்வு நாட்களை தவிர்த்து, பிறரிடம் அரட்டை அடிக்க, தொலைபேசியில் பிரயமானவர்களிடம் இரவில் பேச, லாப்டப்பில் சினிமா பார்க்க, இப்பொழுது ஜியோவில் இரவில் பதிவிறக்கம் செய்ய என்று வந்து நிற்கிறது.

செகண்ட் ஷிஃப்ட், கால் சென்டர் வேலை என்று பலர் சரியான தூக்கமில்லாமல் கஷ்ட்டப்படுகின்றனர். அதனால், அவர்களில் உடலில் ஏற்படும் மாற்றங்கள், மன அழுத்தம், சோர்வு என்று பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். இது அவர்களால் தவிர்க்க முடியாத ஒன்று தான். அனால், சாதாரணமாக காலை 9 டு 6 வேலை செய்பவர்களும், தாங்களாகவே இந்த கிணற்றில் குதிக்கின்றனர்.

இக்காலத்தில், இரவில் அதிக நேரம் விழித்து இருக்கிறேன் என்று சொல்வது ஒரு அலாதியான சுகமாக இளைஞர்கள் கருதுவதாக எனக்கு தோன்றுவதுண்டு. “10 மணிக்கு படுக்கைக்கு செல்வேன்” என்று யாராவது சொன்னால் அவனை அந்த குழுமத்தில் ஒரு குழந்தை போல பாவிக்கின்றனர். இதை நீங்கள் உங்கள் நடப்பு வட்டாரத்திலும் கண்காணிக்கக்கூடும். வாட்ஸாப் குழுமத்தின் பேச்சுக்கள் பெரும்பாலும் இரவு 12 மணிக்கு மேல் தான் ஆரம்பிக்கின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கைபேசியின் வெளிச்சத்தில் தான் இரவை கழிக்கின்றனர். மன அழுத்தங்களை தாண்டி, கண் பார்வை பிரச்சனையும் இதில் அடங்குகிறது. சமூக வலைத்தளங்களில் தேவை இல்லாத நிறைய விஷயங்களை வாசிக்கின்றனர். நிறைய புரளியை நம்புகின்றனர். அதை ஷேர் செய்கின்றனர். புத்தக வாசிப்பு குறைந்து வரும் நிலையில், இந்த கைப்பேசியால் ஒரு தொங்குபாலமாக தான் புத்தகம் ஆடிக்கொண்டு இருக்கிறது.

படுக்கைக்கு செல்லும் போது, நல்ல புத்தங்களை வாசிக்கும் பழக்கம், குழந்தைகளுக்கு கதை சொல்லி தூங்க வைக்கும் பழக்கம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்னாள் இதற்க்கு தொலைக்காட்சி பெரும் பங்கு வகித்து கொண்டு இருந்தது. வீட்டில் அனைவரும் படுக்கை அறையில் டிவி முன் படுத்து இருக்க, அது அலறும் சத்தத்தில், அதன் வெளிச்சத்தின் வலியில் கண் இமை மூட நித்திரை கொண்டனர். இப்பொழுது அந்த இடத்தை கைப்பேசி ஆக்கிரமித்துள்ளது.

சரியான தூக்கம், தேவை இல்லாத நோய்களை களையும். மன அமைதி பெரும். அடுத்த நாள் புத்துணர்வோடு உங்கள் நாளை தொடங்கலாம். ஆரோக்கியமான சாப்பாடு, வியர்வை சிந்த சில வேலை அல்லது விளையாட்டு, ஆனந்தமாக நல்ல புத்தகத்தின் 4 பக்கங்கள், குழந்தைகளுக்கு விக்ரமாதித்தன் கதைகள், இப்படி இன்முகத்தோடு சீக்கிரமாக படுக்கைக்கு செல்வோம். ஆரோக்கியமான வாழ்வை வாழ்வோம்.

அன்புடன்,
பிரதீப்

Social

அரசியலை ஆக்கப்பூர்வமாக விவாதிப்பது எப்படி?

“நான் வேற கேபினுக்கு மாறப்போறேன்” என்றார் நண்பர் ஒருவர். காரணம் கேட்டதற்கு அவருக்கு அடுத்த இருக்கையில் இருப்பவர் அதிமுக ஆதரவாளராம். “அவன் முகத்த கூட பாக்க புடிக்கல” என்கிறார்.

இன்னொரு நண்பர் பின்வருமாறு  ஃபேஸ்புக் பதிவொன்று இடுகிறார்.

“திமுக விற்கு வாக்கு செலுத்த விரும்புவோர் யாரேனும் நட்பு வட்டத்தில் இருந்தால் உடனே வெளியேறுங்கள். நீங்கள் கேவலமானவர்.”

இப்பதிவு உங்களை வசைபாடுவதற்கோ, உங்களது தரத்தைக் குறைக்கவோ, அரசியல் விவாதங்களை புறந்தள்ள உங்களைத் தூண்டுவதற்கோ அல்ல. இது போன்ற தவறுகள் நிகழ்வதற்கானச் சூழலைப் புரிந்துகொள்கிறேன். அத்தவறுகளை நானும் செய்திருக்கிறேன். அரசியலைப் பற்றி பேசியே தீரவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். காரணம் நம்மைச் சுற்றியுள்ள  அனைத்து விடயங்களிலும் அரசியல் புகுந்துவிட்டது. சில நேரங்களில்  விவாதங்களால் நட்பை, உறவை, மேலும் வணிக தொடர்புகளைக்கூட இழக்க நேரிடுகிறது.

அரசியல் பேச நாம் தயங்குவது ஏன் என்பதைப் புரிந்துகொண்ட இதே நேரத்தில்தான் தயங்குவதிலிருந்து வெளிவந்து வாய்திறக்க வேண்டும் என்பதையும் உணர்கிறேன். வாருங்கள் அக்கம்பக்கத்தைப் பார்ப்போம், நம் ஊரைப் பார்ப்போம், நம் நகரத்தைப் பார்ப்போம், நம் நாடடைப் பார்ப்போம், நமது இப்புவியைப் பார்ப்போம். அவ்வனைத்திற்கும் தேவையானவை என்னென்னவென்பதைப் பற்றி பேசுவோம். நாம் பேசினால் உலக பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்று சொல்லவில்லை, பிரச்சனைகள் மேலும் சிக்கலாகாது என்பதை முழுவதுமாக நம்புகிறேன். எனவே, நாம் பேசத்துவங்க வேண்டும், மிக முக்கியமாக, நமது கருத்துக்கு எதிரான கருத்துகளைக் கவனிக்கத் துவங்கவேண்டும். உரையாடல்களின் மூலமாகவே தீர்வை எட்டமுடியும்.

சண்டை சச்சரவுகளில் முடிந்திடாத அரசியல் விவாதங்களை நடத்துவது எப்படி என்று பார்ப்போம்.

  1. கற்பிக்க முயற்சிக்காதீர்

எதிரே உள்ளவர் சொல்வது தவறு என்று நிரூபிக்கவோ அல்லது அவரது எண்ணத்தை மாற்றவோ முயற்சிக்காதீர். நமது மனதை மாற்றிக்கொள்வதே கடினம் என்று நரம்பியல் ஆராய்ச்சிகளில் தெரியவரும்போது, பிறர் மனதை மாற்றுவது என்பது தேவையற்ற குழப்பங்களையே விளைவிக்கும். அவரது எண்ணங்களை மாற்றுவதுதான் உங்களது நோக்கம் என்றால் நீங்கள் ஏமாந்து போவீர்கள் அல்லது உங்களுடன் எதிர்வாதம் செய்பவருக்கு உங்களது செயல் எரிச்சலை உண்டாக்கும்.

  1. முன்முடிவு எடுக்காதீர்கள்

எதிரே உள்ளவர் சொல்வதைத் திறந்த மனதுடன் கவனியுங்கள்.  நீங்கள் வெறுக்கும் ஒரு அரசியல்வாதியை அவர் விரும்புகிறார் என்றால், அவர் சொல்வது அனைத்தையும் புறந்தள்ளவேண்டும் என்றோ இருவரும் ஒத்துப்போகும் கருத்துகள் இருக்காது என்றோ நினைக்காதீர்கள்.  எல்லோருக்குமே அவரவர் தலைவர்தான் நல்லவராகத் தெரிவார். உங்கள் எதிரணியில் இருப்பவரை வீழ்த்த நீங்கள் நேர்மையாகச் செய்யவேண்டியது ஒன்றேயொன்றுதான், அவர் பேசுவதை முழுவதும் கவனியுங்கள். அவர்கள் சொல்வதையெல்லாம் நீங்கள் ஏற்கவேண்டிய அவசியமில்லை. அவர்கள் அவர்களது தலைமையை ஏன் விரும்புகிறார்கள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். உங்களது கருத்துக்கு எதிராக வாதிடுபவரை கீழ்த்தரமாக நினைத்தால், அந்த உரையாடல் ஆரோக்கியமாக இருக்காது. கவனிக்கச் சொல்வதின் நோக்கம் புரிதலுக்காகவேயன்றி அவர்களது கருத்துகளை ஒப்புக்கொள்வதற்காக அல்ல.

  1. எதிராளியை மதியுங்கள்:

சகிப்புத்தன்மையைவிட மரியாதை மிக முக்கியமானது. ஒருவர் பேசும்போது அவர்களைப் பேசவிடாமல் குறுக்கிடுவது, குழப்பமுறச் செய்வது, அவர்களது கருத்துகளைப் புறந்தள்ளுவது போன்றவற்றிலிருந்து விலகியிருப்பதே அவருக்கான மரியாதையாகும். அவர்களது கருத்துகளைப் பேச போதிய நேரம் ஒதுக்குவது, உங்களது கேள்விகளுக்கு அவர்களைப் பதில் கூற விடுவது போன்றவையும் எதிராளியை மதிக்கும் செயல்களே. மரியாதை என்பது மற்றொருவர் தான் விரும்பும் தலைமையிடமுள்ள நல்ல விடையங்களைத்  தேர்வு செய்யவும் அவர்களது கருத்துகளைக் கூறவும்  உரிமை இருக்கிறது என்பதை ஏற்பதுதான். மக்களில் பெரும்பான்மையானவர்கள் அவர்கள் விரும்பும் அரசியல்வாதியை அல்லது அவரது கொள்கையை முழுதாய் நம்புகின்றனர். அவர்களது கொள்கை இந்நாட்டைச் சிறந்த நாடக மாற்றும் என்று நம்புகின்றனர். உங்களது கருத்துகளில் முரண்படுவோர் எம்மாதிரியான நேர் எண்ணங்களைக் கொண்டுள்ளனர், அவர்கள் விரும்பும் தீர்வு என்னவென்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதன் பிறகு தங்களது மாற்று கருத்துகளைப் பேசுங்கள்.

  1. விவாதத்தைத் தொடர்க:

ஒரு விவாதம் நடக்கும்போது அருவருக்கத்தக்க வகையிலோ அல்லது கடினமாகவோ அவ்விவாதம் திரும்பினால், விவாதத்தைத் தொடர்ந்து செய்யுங்கள். அருவருக்கத்தக்க விவாதத்தை நகைச்சுவையாகப் பேசியோ, அல்லது வேறு தலைப்பிற்கு திசைத்திருப்புவதோ  பயனும் அளிக்காது. பனிமூட்டத்தைக்  கடந்து சென்றால் மறுபுறம் ஒளி இருப்பது போல விவாதத்திற்கு தீர்வு கிடைக்கும். மக்கள் விரும்பக்கூடிய அல்லது உணர்ச்சிவசப்படக்கூடிய விவாதங்களே மிக முக்கியமானவை. அவை நையாண்டித்தனமாகவோ, வெறுப்பேற்றுபவையாகவோ, துன்பமுறச் செய்பவையாகவோ இருக்கலாம். ஆனால் தேவையான விவாதங்களாகவே அவை அமையும். மேலும் அவ்விவாதங்கள் பொதுக்கருத்துகளை கண்டறியவும், சமூக பிரச்சனைகளின் தீர்வை நோக்கிய துவக்கமாகவும் அமையக்கூடும்.

ஒருவர் வேண்டுமென்றே தவறான முறையில் வாதிட்டாலோ தரக்குறைவாகப் பேசினாலோ அவர் உங்களோடு நேர்மையான விவாதத்தை முன்வைக்க விரும்பவில்லை என்றே பொருள், நீங்கள் விலகிவிடலாம்.

ஆனால், ஒரு பிரச்னையை வேறொருவரது கோணத்திலிருந்து கேட்க விரும்பினாலோ அவரது அனுபவத்தைக் கற்க விரும்பினாலோ, எண்ணைக்குலைவை ஏற்றுக்கொள்ளுங்கள்.  வாய்ப்பிருந்தால் அவர்களுக்கு எதிரே இருப்பவரும் மனிதர்தான், அவரது கருத்துகளுக்கும் நீங்கள் மதிப்பளிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தோன்றச் செய்யுங்கள், அதற்கு  சிறிது காலமும்  உழைப்பும் தேவைப்படலாம்.

ஒருவேளை உங்களது விவாதம் தீர்வை எட்டாமலிருக்கலாம். உங்களது கொள்கையைப் பற்றிய  அவர்களுக்கு ஏற்படுத்தாமயிருக்கலாம். ஆனால் உங்களது கண்ணோட்டத்தில் அவர்களைச் சிந்திக்கத் தூண்டியுள்ளீர்கள் என்பதே போதுமானது.

கருத்து பகிர்வு சில நேரங்களில் மகிழ்ச்சியினைத் தரும். வேறொரு கண்ணோட்டத்தில் நம்மைச் சிந்திக்க வைக்கும். எனவே, மாற்றுக்கருத்துகளைக் கேட்கத் துவங்குவோம். ஒரு பிரச்சனையைப் பல்வேறு கோணங்களில் அணுகுவது நம் எண்ணங்களை வலிமை படுத்தும். வாருங்கள் ஆக்கப்பூர்வமாக விவாதிப்போம்.

சமூகம்

தமிழ்நாடே ! உனை நினைத்தாலே . . .

ஆறு மாதங்களுக்குள் மூன்றாவது முதல்வரைப் பார்க்கிறது தமிழ்நாடு. அதுவும் மூவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் ! வரவிருக்கும் வருடங்களில், தமிழர்களுக்காக இன்னும் என்னென்ன அவஸ்தைகள், அவமானங்கள் வரிசையில் காத்து நிற்கின்றனவோ ?

சமீபத்திய, எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்தின்போது, சட்டப்பேரவையில் நடந்த அநாகரீகங்கள், தமிழ்நாட்டை மட்டுமல்லாது தேசத்தையே அதிரவைத்தவை.

புனைவுகள்

இந்திய பண முதலைகள் சொத்து விபரம் 

​இந்தியாவின் 58 விழுக்காடு சொத்துக்களை இங்குள்ள பெரும்பணக்காரர்களில் ஒரு விழுக்காட்டினர் வைத்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. இஃது உலக சராசரியான 50 விழுக்காட்டையும் விட அதிகம். இந்தியாவின் முதல் 57 பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பும் 70 விழுக்காடு ஏழை இந்திய மக்களின் சொத்து மதிப்பும் ஒன்றுதான். அதாவது 14,47,200 கோடி ரூபாய் சொத்துக்களை 57 பேர்கள் வைத்திருக்கின்றனர். பெருகிவரும் இந்திய சமூக ஏற்றத்தாழ்வின் இழிநிலையை இந்த ஆய்வறிக்கை பறைசாற்றுகிறது.
130 கோடி இந்திய மக்களின் மொத்தச் சொத்துமதிப்பு 2,077 இலட்சம் கோடி ருபாய் என்கிறது ஆக்ஸ்பாமின் அறிக்கை. முகேஷ் அம்பானி, திலிப் ஷங்வி மற்றும் அசிம் பிரேம்ஜி உள்ளிட்ட 84 பெரும்பணக்காரர்களிடம் மட்டும் 16,61,600 கோடி ருபாய் சொத்து இருக்கிறது. உலகின் பெரும்பான்மையான ஏழை மக்களுக்கு இந்தச் சொத்துக்களை மட்டுமல்ல அவற்றின் பூஜ்ஜியங்களின் எண்ணிக்கையைக் கூட எண்ணுவதற்கு கடினமாக இருக்கும்.
உலகின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு 1,71,319 இலட்சம் கோடி ரூபாயாகும். அவற்றில் 4,355 இலட்சம் கோடி ருபாய் பெரும்பணக்காரர்களிடம் மட்டும் இருக்கிறது.
பில்கேட்சிடம் 5,02,500 கோடியும் ஸ்பெயினின் அமென்சியோ ஒர்தேகாவிடம் (Amancio Ortega) 4,48,900 கோடியும் வாரன் பஃபெட்டிடம் 4,07,360 கோடியும் இருக்கிறது. உலகின் 8 பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பும் உலகின் கடைக்கோடி 50 விழுக்காடு ஏழை மக்களின் சொத்துமதிப்பும் ஒரே அளவிலானதாக இருக்கிறது.


மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்சின் சொத்துமதிப்பின் அதிவேக வளர்ச்சி தொடருமாயின் இன்னும் 25 ஆண்டுகளில் உலகின் முதல் டிரில்லியனராக (670 இலட்சம் கோடி) அவர் இருப்பார் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் வெறும் 500 தனிநபர்களிடம் மட்டும் 1,407 இலட்சம் கோடி ருபாய் குவிந்துவிடும். 130 கோடி மக்கள் வாழும் இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட இது அதிகம் என்று அந்த அறிக்கை கூறுகிறது.

முதலாளிதுவம்

மன்னார்குடி மனோன்மணி !

ஜெயலலிதாவின் சமாதியில் கையால் மூன்றுமுறை அறைந்து (யாரை?) சபதம் ! எம்ஜிஆர் நினைவிடத்தில் தியானம் ! ஓபிஎஸ் எஃபெக்ட் ?

அடடா! பரப்பன அக்ரஹாரா ஜெயிலுக்குப் போகுமுன்னும் என்ன ஒரு பரபரப்பு.. என்ன ஒரு பக்தி, சிரத்தை, ஆவேசம்! சசிகலாஜி, மெய் சிலிர்க்கிறது. உங்களது வீரபராக்ரமங்களை, சபதங்களை, ஆவேச சூளுரைத்தல்களை டிவியில் கண்டு, கேட்டு களித்துக்கொண்டிருக்கும் எண்ணற்ற தமிழ்மக்கள், உங்களை என்னவென்று புரிந்துகொள்வார்கள்? யாரிடத்தில் யார்? வெறும் நாலே மாதத்தில் நாற அடித்துவிட்டீர்களே தமிழ்நாட்டை. இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்றைக் கூனிக் குறுகிப்போகும்படி செய்துவிட்டீர்களே அம்மணி!

மனதில் பெரும் ஆட்சிக்கனவோடு, பிரமாதத் திட்டங்கள், சூழ்ச்சிகளோடு திரைமறைவில் தீவிரமாக நீங்கள் இயங்கியவிதம்.. மக்களின் அபிமானம் பெற்றவரை, மாநிலத்தின் முதல்வரை, மறைத்துவைத்தே மாதங்கள் சில தள்ளி, மறைந்துவிட்டார் எனத் திடீரென மருத்துவர்களைவைத்தே குண்டுவீச வைத்து, வராத கண்ணீரை டிஷ்யூ காகிதத்தால் காமெராவுக்கு முன் நிதானமாகத் துடைத்துவிட்டுக்கொண்டீர்களே, ஆஹா! உங்களைத் தவிர வேறு யாருக்குக் கைவரும் இந்த அபரிமித நடிப்பு, சாகசம்?

உச்சநீதி மன்றத் தீர்வு வந்து உலுக்கிவிடுமுன் சிம்மாசனம் ஏறிவிட நீங்கள் செய்த சீரிய முயற்சிகளைப் பார்த்து, தமிழகம் மட்டுமா, மத்திய அரசும்கூட கொஞ்சம் ஆடித்தான்போய்விட்டது. கட்சித் தலைமையை தடாலெனக் கபளீகரம் செய்து, ஏற்கனவே பணியாற்றிவந்த முதல்வரை மிரட்டியேக் கழட்டிவிட்டு, தானே ஆட்சிபீடத்தில் சொகுசாக உட்கார்ந்துவிட பேராசைப்பட்ட உத்தமியே, தமிழ்நாட்டைப்பற்றித்தான் எப்படி சல்லீசாகக் கணக்குப்போட்டுவிட்டீர்கள்? மேலிருந்தும் சில கணக்குகள் போடப்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை மறந்தேபோய்விட்டீர்களே மங்கையர்க்கரசி! காசு சேர்த்தபின்னும் களி திங்கத்தான் விதி என்றிருந்தால் என்னதான் செய்வது?

வருஷக்கணக்காக வளர்த்துவிட்ட ஏடாகூட ஆசைகளும், அவற்றை சென்றடைய செயல்படுத்திய அசாத்திய சதிகளும், சூழ்ச்சிகளும் சேர்ந்து அல்லவா சம்பாதித்து வைத்திருக்கிறது உங்களுக்கேயான இந்த விதியை? மக்கள் ஆதரவுபெற்ற ஒரு அரசியல் ஆளுமையின் நிழலில் நின்றுகொண்டு, பாதுகாப்பில் இருந்துகொண்டு, கும்மியடிக்க குடும்பத்தையும் சேர்த்துக்கொண்டு ஒரே அடியாக ஆட்டம்போட்டீர்களே வருஷக்கணக்கில். அள்ளினீர்கள், அபகரித்தீர்கள். சுருட்டினீர்கள். அட்டூழியத்திற்கு ஒரு அளவில்லை என்கிற வகையில் சூழ்ச்சியின் உலகில் சுகமாய் உலவினீர்கள். மேலிருந்து நீளமான கயிறொன்று உங்களுக்காக விடப்பட்டிருப்பதுமட்டும் தெரியவில்லை. கண்ணுக்குத் தெரியும் கயிறுமல்ல அது. ’போதும் உன் ஆட்டம்!’ என அது நினைத்து கயிறைச் சுண்டி இழுத்ததுதான் தாமதம் ; உடனே பிடித்து உங்களையும், சார்ந்தவர்களையும் உள்ளே தள்ளிவிட்டார்கள்.

சட்டம் ஒரு இருட்டறை. எதுவும் செய்யலாம்; எதுவும் வெளியே தெரியாது, தெரிந்தாலும் யாராலும் எதுவும் புடுங்க முடியாது எனத் தப்புக்கணக்குப் போட்டுவிட்டீர்கள். இப்போது இருட்டில் தூக்கம் வராமல் கொசுவிரட்டி யோசனை செய்யுங்கள். உங்களது குடும்பத்தினரை மூலதனமாக வைத்துக்கொண்டு, மூதேவி வேலைசெய்து இன்னும் என்னென்ன கூத்தடிக்கலாம், யார் யாரைக் கவிழ்க்கலாம், மேலே தந்திரமாக அனுப்பலாம் என்று தீவிரமாக சிந்தியுங்கள். 3 ½ வருட காலம் முழித்துக்கொண்டு நிற்கின்றது உங்கள் முன்னே. இதமாக உங்கள்மேல் சாய்ந்துகொண்டு துர்ஆலோசனை சொல்ல இருக்கிறார் இளவரசியும் பக்கத்தில் !

ஜெயலலிதாவின் charisma, அவர்மீது மக்கள் கொண்டிருந்த அபிமானத்தைக்கொண்டு, கடந்த தேர்தலில் வென்றுவிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்களில் மெஜாரிட்டி தற்போது உங்கள் ’வசம்’ இருப்பதாகத்தான் தோன்றுகிறது. ஏழெட்டு நாட்களாக நீங்கள் போட்டுக்கொண்டிருக்கும் ’சாப்பாடு, சொகுசு’களுக்கு எம்.எல்.ஏ.-க்கள் கொஞ்ச நாட்களாவது விசுவாசம் காட்டாவிட்டால் எப்படி ! நீங்கள் பரப்பன அக்ரஹாரத்தில் உட்கார்ந்து ஊதுவத்தி சுற்றிக்கொண்டிருக்க, உங்களது சூழ்ச்சிகளின்படி, உத்திரவுகளின்படி உங்களது ’ஆட்கள்’ சென்னைக் கோட்டையில் அமர்ந்து ஆட்சிசெய்தால் – அதுதான் நடக்கும்போலிருக்கிறது, இப்போதிருக்கும் நிலைமையைப் பார்த்தால் – இன்னல்கள்தான் தொடரும் பாமரமக்களுக்கு. அவமானமும் வேதனையும்தான் மிஞ்சும் தமிழ்நாட்டுக்கு. முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, நல்லதொரு ஆட்சிவரும் வரையில், கத்தலாம், போராடலாம்; இருந்தும் ஆட்சி மாறும்வரை மக்கள் காத்திருக்கத்தான் வேண்டும் ஜனநாயகத்தில்.

சசிகலாஜி! முப்பது வருடங்களுக்கும் மேலாக திரைக்குப் பின்னால் நிழலாகப் பதுங்கிப் பதுங்கி உலவிய மர்மஉருவம் நீங்கள். திரைக்குவெளியே வந்து, அரசியல் வெளிச்சத்தில் நீங்கள் காட்சியளித்த சில மாதங்களிலேயே, உங்களது ஆத்திரமுகம், அசூயைமுகம், குரோதமுகம், கொடூரமுகம் தெரிந்துவிட்டது அப்பாவித் தமிழ்மக்களுக்கு. பார்த்துவிட்டார்கள். அவர்கள் கேள்விப்பட்டது சந்தேகப்பட்டது எல்லாம் உண்மைதான் எனத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. இதெல்லாம் உங்களுக்குப் புரியப்போவதில்லை. இருந்தும் சொல்லவேண்டியிருக்கிறது : தமிழ்நாட்டின் பொதுவாக ஒன்றுமறியாத பாமரமக்கள்கூட, அதிலும் குறிப்பாகப் பெண்கள், இளைஞர்கள் போன்றவர்கள் – கொஞ்சம் விழித்துக்கொண்டுவிட்ட காலம் இது. எந்தக் காரணத்தை முன்னிட்டும் உணர்ச்சிவசப்படும் மக்கள் கூட்டம் முன்னே, அதிலும் ஜெயலலிதாவை இன்னும் மனசார ’அம்மா’ என்றழைக்கும், போற்றும் கிராமத்துப்பெண்களின் முன்னே, போலீஸ் பாதுகாப்பின்றி போய் நின்றுவிடாதீர்கள். பின்னிவிடுவார்கள் பின்னி !

**

புனைவுகள்