இரவு

விடியலைத் தந்து

பணிகளைச் செய்ய

அதிகாலையில் நம்மை

எழுப்பி விட்ட பனி

தனை மறையச் செய்து

பணியால் வந்த

களைப்பைப் போக்கிட

சந்திரன் மூலமாய்

தண்மை முகத்தைக் காட்ட

இனிய இரவு உதயமாகிறது!!

கவிதை

கர்ப்பம் களைந்து

பச்சை சேலை வேசியவள்

வீடு புகுந்த சீமை கருவேலமவள்

அவள் கிளைகள் இல்லாத ஊரில்லை

இரக்கமென்ற குணமும் அவளுக்கில்லை

என்ன மணத்தால் சுண்டுகிராலோ என்னவனை

அறளி விதையாயினும் சொல் கோலமிடுகிறேன் மேனியினை

இரவும் நானும் இமை காத்தோம் அவனுக்கு

கூச்சலிட்ட சேவல் கூப்பிட்டது விடியலுக்கு​

எம்பெருமானை வேண்டுவதில் அர்தமில்லை என்றுணர்ந்தால்

புடவை மடிப்பினை களைந்திட்டால் புதுப் போருக்கு புறப்பட்டாள்…

தமிழ்

பேருந்து வாழ்க்கை

இந்த
நடத்துனர் வாழ்க்கையின்
நடைபாதை
சாலையை விட ஆழமாய்
பள்ளமாய்க் கிடக்கிறது.

பருந்தாய் மாறி
பேருந்தினுள் பாவையரைக்
கொத்தும்
பாலியல் பரிகாசங்கள்,

சில்லறைச் சண்டைகளில்,
வடிகட்டியில் மிஞ்சிய
வார்த்தைகளால் வெட்டும்
பிரயாணிப் போர்கள்.

கேட்டுக் கேட்டும்
பார்த்துப் பார்த்தும்
போரிட இயலாத
பரிகாசப் புலியாய்
பதுங்கிச் செல்லும் நிலமை.

நசுங்கிக் கொண்டே
நகரும் நத்தையாய்,
சூரிய அடுப்புக்குள்
வெடிக்கும் சருகாய் தான்
தொடர்கிறது வாழ்க்கை.

நகரத்தின் வீதிகளில்
நகர மறுத்தால்
வாழ்க்கை வண்டியும்
நகர மறுக்கும் எனும்
நரக வாழ்க்கை.

மூச்சுத் திணறும்
கூட்டத்திலும்,
மூழ்கிச் சுவாசிக்கும்
புதுவகை நுரையீரல்,

விரைவாய் இருக்கும்
வினோத விரல்கள்,

என்று
எல்லாம் புதியன தான்.

அத்தனை கஷ்டங்களும்
அவ்வப்போது
காணாமல் போகும்,
வயதானவரை பிடித்தேற்றும்
வாய்ப்புகளிலும்,

இருக்கை கொடுத்து
இருக்க வைக்கும்
நேரங்களிலும்..

கவிதைகள்

கதகளி

இதொன்றும்
பிள்ளை விளையாட்டில்லை

சொரசொரப்புத் தூரிகைகள்
முகத்தைச் சுவராக்கி
பல மணிநேரம்
ஓவியம் வரையும்.

பிரத்யேக ஒப்பனை ஆடை
பிராணனை
பிழிந்தெடுக்கப் பிரியப்படும்.

செண்ட,
மத்தாளம், சிஞ்சில
என
இசைக்கருவிகளின்
அருவிக்குள் அரங்கேறும்
எங்கள் உதடுவிலகா
ஊமை நாடகம்.

கைகளையும்
கண்களையும் விட அதிகமாய்
தசைகள்
பேச வேண்டும் இங்கே,

இலக்கியம்
இசை, நடனம், நடிப்பு
ஓவியம் என,
அத்தனை நவரசக் கலவைகளையும்
ஒற்றை சீசாவில்
ஒளித்து வைத்த கலைதானே
இந்தக் கதகளி.

கண்களையும்
கைகளையும்
அபினயம் பிடித்துப் பிடித்து
நடித்தாலும்,
நான்கு பேருக்காக
ஓர்
நாட்டிய மேடை இருக்கும்.

எங்கள் வறுமையின்
சுருக்கங்களை
இந்த
அடர் சாயங்கள்
மறைத்துக் கொள்வதே பெரும்
ஆறுதல் எங்களுக்கு.

ஆனாலும்
எங்கள் கண்களை மீறி
குதிக்கும்
கண்ணீர்க் கவலைகள் எல்லாம்
சாயங்களின் மேல் சில
சாலைகளை
இட்டுச் செல்லும்.

எங்கள் வேர்கள் எல்லாம்
கலாச்சாரக் காடுகளில்
ஆழமாய் கிடந்தாலும்,

கிளைகள் எல்லாம்
வெளியூர்க் காற்றையே
சுவாசித்துக் கிடக்கும்
கவலை தான் எங்களுக்கு !

கவிதைகள்

வாசகன்

வாசகன்

கையிலெடுத்த புத்தகத்தை
எதோ கிறுக்கல்கள் என்று
ஒரு போதும் நினைக்காதே!
அது ஒருவரின் உயிருள்ள
உணர்வுகள் உணர்ச்சிகளின் ஊற்று!
சிந்தனைகளின் சிகரம்!
கற்பனைகளின் ஏற்றம்!
இப்படியான எண்ணத்துடன்
நேசிப்புடன் வாசித்துப்பார்!
நீயும் நல்ல வாசகனாகிவிடுவாய்!

கவிதை

கை

கரங்கள் இல்லாத மனுக்குலத்தை
கற்பனை செய்யவே முடியவில்லை.

கருவறை முதல்
கல்லறை வரை கரங்களை நம்பித்தான்
காலம் நடக்கிறது.

நடக்கப்பழகிய நாட்களிலெல்லாம்
தத்தித் தத்திக் கால்கள் நடக்க
மழலைவிரல்கள் தேடுகின்றன
அன்னையின் கைகள்.

முடிவு தேடும்
காத்திருத்தல் கணங்களில்
கடவுளே என்னைக் கை விடாதே
எனும்
ஆன்மீகத்தின் வார்த்தைகள்.

உடுக்கை இழந்தவன் கையென்று
நட்புக்கு உரையெழுதும்
நேசத்தின் வார்த்தைகள்

உயிரின் உணர்வுகளை
விரல்வழி உருளவிட்டு
கரம் கோர்க்கச் சொல்லும்
காதலின் வார்த்தைகள்.

ஒரு கை கொடு என்று
ஒத்துழைப்பை நாடும்
உழைப்பாளியின் வார்த்தைகள்.

இரு கை சேர்ந்தால் தானே
ஓசையின் பிரசவம் எனும்
ஒற்றுமையின் வார்த்தைகள்.

என் கையைத் தான்
நான் நம்புகிறேன் என்று
தன்னம்பிக்கையைத் தத்தெடுக்கும்
வலிமையின் வார்த்தைகள்.

கரங்களின் தேவைகள்
கலப்பைக் காலம் முதல்
கணிப்பொறிக்காலம் வரை
தலைமுறை தாண்டியும் நீள்கின்றன.

கரங்கள் இல்லையேல்
கண், காது, வாய் பொத்த
காந்தியின் குரங்குகளுக்கு
வழியில்லாமல் போயிருக்கும்.

பட்டம் விடும் பருவம் முதல்
பட்டம் பெறும் பருவம் வரை
விரல் தொடாத வினாத்தாள்கள் தான்
வினியோகிக்க வேண்டியிருக்கும்.

ஐம்புலனில் ஒன்று
திறக்கப்படாமலேயே
திருடு போயிருக்கும்.

கரங்கள் இல்லையேல்.
என்று
கரம் கொண்டு என்னால்
கவிதை எழுத முடியாமலும்.

கவிதைகள்

சூன்யம்

**

சொல்லிலே ஓவியமும்
கல்லிலே கவிதையும்
கடைந்தெடுத்திருப்பதாய்
உன் இறுமாப்பு என்றும்
உயர்த்துகிறாய் குரலை
ஆஹா என்கிறாய்
ஓஹோ என்கிறாய்
உனை நீயே புகழ்ந்து

அவனிடமிருந்தோ
எந்தச் சத்தமும் இல்லை
எவரும் கண்டுவிட
எதிர்ப்பட்டதுமில்லை
அவனிழைத்த சிற்பங்களோ
அவனியில் ஆடி மகிழ்கின்றன
வரைந்த ஓவியங்களால்
வானும் பூமியும் மிளிர்கின்றன
எழுதிய கவிதைகளோ
எழுந்துநின்று பேசுகின்றன
அவனுடைய அதீதக்
கைங்கரியங்களில் ஒன்றுதான்
நீயும்

**

புனைவுகள்