குறிச்சொற்கள் » கவிதைகள்

இராணுவம்

வானமே எல்லையில்லா…

சிறகடித்து பறக்கும் பறவைகளோ…!!! – இங்கு

உலகத்தின் நாட்டின் எல்லைகளில்

ஆயுதம் ஏந்தி நிற்கும்

இராணுவமாம்…!!!🙁🙁

கவிதைகள்

தருணங்கள்

மகிழ்ச்சியான தருணங்கள் நிலைப்பதில்லை…

அலை போல,
நுரை போல,
தந்தையின் கோபம் போல,
தாயின் புறக்கணிப்பு போல,
உயிரானவளின் கொஞ்சலை போல,
இறுக்கி தழுவிய முத்தமொன்றை போல,
குழந்தையின் வாயில் பால் மணம் போல,
உண்மையான உறவுகளை போல,
கலப்பற்ற அன்பை போல,
புன்னகைகள் தாங்கிய அகிம்சை போல,
ஒலித்து தூரமாகும் ஒரு புல்லாங்குழலின் இசை போல,
மழை ஊட்டிவிடும் சிலிர்ப்பை போல,
புல்நுனி பனித்துளி போல,
விழியோரம் சேர்ந்துவிட்ட கண்ணீர் போல,
மாலையின் மயக்கம் போல,
பௌர்ணமியின் போதை போல,
இளமையின் பலம் போல,
முதுமையின் பயம் போல,
நேற்று கண்ட நாளை போல,
நாளை ஏங்கப்போகும் நேற்றைப்போல,
நாம் என்ற நிலையாத வட்டம் போல,

மகிழ்ச்சியான தருணங்கள் நிலைப்பதில்லை…

கவிதைகள்

ஆயிரம் தரு சூழ் தோப்பு

தங்கத்தகடென கிழக்கெழு ஆதவன்

தன்மானம் காத்திட பணிந்துதி நாளாம்!
வல்லோர் பிறந்து வரலாறு மாற்றிட்ட
வடமேற்கின் சாஹிரா எழுபத்தீர் அகவை!

தெங்குத்துவருப்புப்பின் சுண்ண வளங்கள் நிறை
தெளிய களப்புதனின் கடல்வள செழு
இரத்தின லங்கை முழங்கு புகழுடை
இத்தளப் பெருமை முத்து சாஹிரா!

தன்னலம் பாரா தனவந்தர் இல்லத்திடை
தவழ வெள்ளோட்டப் பவளக்குழந்தை நீ!
வித்தைகள் கற்றிட வித்துகள் நாடி வரு
விந்தைகள் படையுயர் பீடமதுவாய் நீ!

காலமுருள காட்சிகள் தனுமுருள
கல்விமடமதில் கட்டிடங்களெழுந்தருள
உயர உயர எழுந்திட்ட உன்புகழ்
உருகிப்பாடிட நீ உருதந்த சேயும் நான்!

இட்ட உப்பதே உள்ளளவும் நினை வேண்டின்
இமயம் நீயிட்ட பிச்சைகள் மறவேனே!
விம்மிய மார்தனில் நின் பால் குடி மாந்தரே
வினை சொல்லி வீணாய் நகைப்பதும் ஏனோ!

நெற்றிக்கண்ணதே வீழ்ந்தது மெய்யில்
நெறிகெட்ட மானிடர் தம் வாய்ச்சொல் நிலையோ
நீ ஆயிரம் தரு சூழ் மானுடத்தோப்பு
நின் எச்சமும் முளைத்தெழும் நிச்சயத்தீர்ப்பு!

கவிதைகள்

நீயாவது ..

நான்
உன்னிடம் சொன்னதில்லை
காதலுக்கு
வார்த்தைகள் விளக்கவுரை
சொல்வதில்லையே.

உன்னுடன் பேசும்போதெல்லாம்
எனக்குள்
அன்னியோன்யமாய்
ஓர்
அணில் கூட்டம் ஓடித்திரியும்.

உன் கண்களில்
படபடக்கும் பட்டாம் பூச்சிகளுக்காய்
என் மனம் முழுதும்
ஈரப் பூக்கள்
இறக்குமதியாகும்.

உன் புன்னகைத் தட்டுகளில்
என் இதயம்
கால் தடுக்கி விழுந்து கிடக்கும்.

பிடிவாதப் புயலாய்
என்
புலன்கள் கொந்தளிக்கும்.

விரலுக்கும் மூளைக்கும்
இடைவிடாமல்
ஓர்
இழுபறி நடக்கும்.

எனக்குள் நடக்கும்
பூகம்பங்களைப் புரியாமல்
நீ
தொடர்ந்து புன்னகைப்பாய்.
நான்
உடைந்துபோன உறுதியுடன்
இடிபாடுகளில் இறுகிக் கிடப்பேன்.

உன் கூந்தல்க்காட்டுக்குள்
சில
மின்னல் பூக்கள் நட்டு,
உன் கண்களுக்குள் அதை
அறுவடை செய்ய ஆசை வரும்.

உன் ஆடைகளுக்குள்
என் ஆசைகளை ஊற்றி வைக்க
சிறு
மோகச் சிந்தனை முளை விடும்.

விரல் அழகா
உன்
நகம் அழகா என்று,
பூக்களும் காற்றும்
நதிக்கரையில் பேசுதோ என்று
சங்கீதச் சிந்தனை சிரித்து வரும்.

நீ
அருகிலிருந்தால்
நான் கனவுகளில் விழுந்து
மௌனமாய் கலைகிறேன்.

நீ
விலகியிருந்தால்
நிஜத்துக்கு வந்து
உன்னுடன் பேசிப் பேசியே
சத்தத்தில் கரைகிறேன்.

கவிதைகளுக்கு சொன்னவற்றை
நான்
உனக்குச் சொல்லியிருக்கலாம்.
சொல்லியிருந்தால் ஒருவேளை
என் வீட்டுப் பூக்களுக்கு
நீ
வாசனை வகுப்பு எடுத்திருப்பாய்.

சொல்லவில்லையே..

காதலுக்கு
வார்த்தைகள் முக்கியமில்லை.
கல்யாணத்துக்கு
மௌனம் முக்கியமில்லை என்று
வார்த்தையில்லாமல் சொல்லிவிட்டுச்
செல்கிறாய் நீ..

இப்போதும் என்னிடமிருந்து
எழுத்துக்கள் கூட எழவில்லை.
உன் மொழி பெயர்ப்புக்காய்
ஒரு துளி
விழிநீர் மட்டும் விழுகிறது.

கவிதைகள்

காதல் புதிர்

நெஞ்சம் அறியா நம் காதலுக்கு.. – நீ

என் அறியா புதிர் ஆனாய்!!

என் அன்பு தோழி காதலியே!
!!

கவிதைகள்

வாழ்க்கை

வலியில்லா வாழ்க்கைக்கு… – இங்கு

வழியில்லையோ எனக்கு!

பதில்யில்லா பாதைக்கு… – அகம்

தெளியவில்லையை வாழ்க்கைக்கு.

கவிதைகள்

ஈரம் தொலைத்த இதயம்


பிரிவதற்குப் பிரியப்பட்ட
என் பிரியமானவனே.

வருவாயா என்று
திசைகள் மொத்தத்தையும்
வாசலாய் திறந்து
விழிவிதைத்துக் காத்திருக்கிறேன்

புரியவில்லை எனக்கு.

முல்லை இதழ்களின்
வெள்ளை சிதைய
ஏன்
முள்ளைச் சொருகினாய் ?

இதயம் என்னும்
என்னும் இலவங்காய்
உடையும் வரை விசிறிவிட்டு
உடைந்தபின்
ஏன் விதறிச் சென்றாய் ..

கானல் மட்டுமே
காட்சிக்குள் விழும்
பாலை மணல் வெளியாய்
இந்தப் பாவி மனம்.

துளித் துளியாய்
நேசம் வார்த்து
மொத்தமாய் நீ
உடைத்துச் சென்றதால்
கீறல்களில் உப்பைக் காய்ச்சியதாய்
வெம்மை விரிக்கிறது உயிர்.

உனது விரல்கள் பிடித்து
நடந்தபோது
தொடர்ந்த என் சுவடுகள்
இப்போது
கள்வனைக்கண்ட புள்ளிமானாய்
பதறி நிற்கிறது.

உன் பாதம் பார்த்துக் காத்திருக்கும்
என் பார்வைதேசத்தின் எல்லையில்
கண்­ர்க் குமிழிகள் உடைவதால்
மங்கலாய்க்
கன்னங்களில் கசியுது காதல்.

உனது எண்ணக் குவளைகளில்
குவளையாய் மலர்ந்த நான்
உன் பிரிவால்
ஓணான்கள் ஒளிந்துகொள்ளும்
கள்ளியாய்
உள்ளப்பரப்பில் முள்ளை விளைவிக்கிறேன்..

உன் மேல் விளைந்த காதலில்
மரத்துப் போகத் தெரிந்த மனசுக்கு
நீ விதைத்த காதலை
மறந்து போக மனமில்லாமல்
இறந்துகொண்டிருக்கிறது
உலையில் வீசப்பட்ட ஒற்றை ஆமையாய்.

கவிதைகள்