குறிச்சொற்கள் » கட்டுரைகள்

புத்தகத் தேடலும் படித்தலும்

     

     நாம் புத்தகங்களை தேடி வாங்கும் போது அந்த புத்தகத்தின் மீதான ஆர்வம் அதிகரிக்கின்றது. அந்த ஆர்வம் நம்மை படிக்கவும் தூண்டுகின்றது. இப்படி ஆர்வத்துடன் நாம் தேடி வாங்கிய புத்தகங்களை ஆர்வத்துடன் படிக்கும் போது அந்த புத்தகத்தில் உள்ள கருத்துக்களும் சிந்தனைகளும் நம்மை அறியாமலேயே நம்முள் புகுந்து, நற்சிந்தனைகளை நம்மில் விதைத்து நற்செயல்கள் செய்ய நம்மை தூண்டுகின்றது. நம்மை வளர்ச்சிப் பாதையில் அழைத்தும் செல்கின்றது. இதனைத்தான், புத்தகம் மனிதனை ஒருச் சிறந்த மனிதனாக மாற்றுகிறது என்றும், புத்தகத்தை நாம் மேலிருந்து கீழாக படிக்கின்றோம், ஆனால், புத்தகம் நம்மை கீழிருந்து மேலாக உயர்த்துகின்றது என்றெல்லாம் கூறுகின்றனர்.

     படித்தல் ஒரு மனிதனை மனிதனாக்குகின்றது. சாதாரண அளவில் இருக்கும் ஒரு புத்தகத்தை படிக்க 4 மணிநேரம் தேவைப்படும். 1 நிமிடத்தில் ஒரு மனிதனால் 120 முதல் 180 வார்த்தைகளை படிக்கலாம். அதில் 60 முதல் 80 விழுக்காடு கருத்துக்களை நினைவில் வைத்துக்கொள்ளலாம். மறைந்த அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி 1 நிமிடத்தில் 1200 வார்த்தைகள் வரை படிக்கின்ற பழக்கம் கொண்டவர். அதில் 50 முதல் 60 விழுக்காடு வரை நினைவில் வைத்துக்கொள்வார். நாம் படிக்கும் போது தேர்ந்தெடுத்தல், புறக்கணித்து மேலே செல்லுதல், கண்டறிதல் ஆகிய மூன்று நிலைகளையும் கையாள வேண்டும். அதாவது, சிறந்தவற்றை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். தேர்ந்தெடுத்து படிக்க தொடங்கும் புத்தகத்தில் நல்ல கருத்துக்கள் மட்டும் இருக்கும் என்று கூறமுடியாது. எனவே, தேர்ந்தெடுத்து படிக்கும் புத்தகத்தில் தேவையற்றவை இருப்பின் புறக்கணித்து மேலே செல்ல வேண்டும். படிக்கும் புத்தகத்தில் முக்கியமானதை கண்டறிந்து அதன் சிறப்பம்சங்களை மனதில் ஆழமாக பதிய வைத்து படிக்க வேண்டும்.

கட்டுரைகள்

வார்த்தை வலிமை

   

   நாக்கு வலிமையானது தான். ஆனால், நாவின் உதவியோடு உருவாகும் வார்த்தைகள் அதைவிட வலிமையானது. பேச்சாற்றல் என்பது, படைத்தவன் மனிதனுக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு. மற்ற உயிர்களிடமிருந்து இந்த பேச்சாற்றல் தான் நம்மை வேறுபடுத்திக் காட்டுகிறது. மனிதனால் பேசாமல் வாழ முடியாது. மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு பேச்சுதான் வடிவம் கொடுக்கிறது. 
     பேச்சு என்பது மிகப்பெரிய கலை. ஒருவர் படித்தவராய் இருந்தாலும் சரி, படிக்காதவராய் இருந்தாலும் சரி, பிறரைக் காயப்படுத்தாமல் மாற்றத்தை அதே வேளையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய பேச்சாயின் அந்த பேச்சு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்திழுக்கும்.

ஒவ்வொருவரின் நாவிலிருந்தும் புறப்படும் வார்த்தையானது மற்றவருக்கு

மகிழ்ச்சியை தரலாம்
மனதை உடைத்தெறியலாம்
நம்பிக்கையை உடைக்கலாம்
ஆறாத வடுவை ஏற்படுத்தலாம்
ஒருவனை சிந்தித்து வாழ வைக்கலாம்
மற்றொருவனை சாகத் தூண்டாலாம் 
ஒரு நொடிப்பொழுதில் நம்மை உயர்வடையச் செய்யலாம்
தாழ்வடையவும் செய்யலாம்.

இதனையே வள்ளுவர் தனது 129-வது குறட்பாவில்  இவ்வாறு குறிப்பிடுகிறார்.

தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு 

என்று

     நல்லது பேசினால் நிச்சம் நல்லது நடக்கும். நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் வலிமை உண்டு. இத்தகைய ஆற்றலும் சக்தியும் வாய்ந்த பேச்சு நம் நாவிலிருந்து வெளிப்படும் போது அது பிறரை மகிழ்ச்சிப்படுத்துவதாகவும், எந்த வகையிலும் பிறரை காயப்படுத்தாததாகவும் அமைய வேண்டும். பேசிவிட்டு சிந்தனை செய்வது என்பது எந்த வகையிலும் பயனற்றது. பேசும் போது சிந்தித்து கவனமுடன் பேசுவோம்.

கட்டுரைகள்

துன்பங்களும் துயரங்களும்

     

        நம்முடைய தலைக்கு மேல் பறவைகள் பறப்பதை யாராலும் தடுக்க முடியாது. அதுப்போல நம்முடைய வாழ்வில் துன்பங்களும் துயரங்களும் வந்து செல்வதையும் யாராலும் தடுக்க முடியாது. துன்பங்களும் துயரங்களும் நம் வாழ்க்கைக்கு உரமாக வருகின்றதே தவிர வாழ்க்கையை அழித்து விடுவதற்கு அல்ல.

     ஒரு மனிதனின் வாழ்க்கை என்பது எல்லாத் துன்பங்களையும், சோதனைகளையும் பிரச்னைகளையும் எதிர்த்து நின்று போராடி அதில் வெற்றி காண்பதில் தான் உள்ளது. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல; தடைகளை வெற்றிக்கொண்டு வாழும் வாழ்க்கை (ஹெலன் கெல்லர்).

   ஒரு கப்பலானது கடலில் தனது பயணத்தை மேற்கொள்ளும் போது சீறி எழும் அலைகளையும் வீசியடிக்கும் காற்றையும் எதிர்கொண்டு செல்வதால் தான் அதன் இலக்காகிய மறுக்கரையை சென்றடைகிறது. ஒருவேளை அங்கே பிரச்சனை என்றாலும் கூட அந்தக் கப்பலை கரை சேர்க்க மாற்றுவழி அங்கு செயல்படுத்தப்படுகிறது. எந்தக் கப்பலும் விபத்து என்றவுடனே அங்கே விட்டுவிட்டு வரப்படுவது இல்லை. அதன் இலக்காகிய கரையை சென்றடைய வழி கண்டுபிடிக்கப்படுகிறது, கரையை சென்றடையவும் செய்கிறது. அப்படியிருக்க நாம் ஏன் ஒருச் செயலைச் செய்யத் துவங்கும்போது பிரச்சனைகள் வந்தவுடன் அந்தச் செயலை விட்டுவிடுகிறோம். அந்தச் செயலைச் செய்வதனால் பிறரால் நமக்கு உருவாக்கப்பட்ட பிரச்சனைகளை சமாளிக்கத் தெரியாதவர்களாய் தற்கொலை முடிவுகளை எடுக்க வேண்டு்ம்?

         இன்னல்கள் வரும் போது இறக்க நினைத்தால் நாம் பிறந்ததில் அர்த்தம் இல்லை. இன்னல்கள் (துன்பம்) என்றதும் வேலையை பாதியில் விட்டுவிடுவதும், தற்கொலை முடிவுகளை எடுப்பதும் கோழைத்தனமே. பிரச்சனை என்ற ஒன்று இருப்பின் தீர்வு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். சாவி இல்லாமல் எந்தப் பூட்டும் தயாரிக்கப்படுவதில்லை. பிரச்சனைக்கு தீர்வு காண்பதே மனிதனின் அழகு.

      துன்பங்களைக் கண்டு எந்த உயிரினமும் சோர்ந்துப் போவதும் இல்லை. தற்கொலை செய்துக் கொள்வதும் இல்லை. வாழ்வில் வரும் துன்பங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் அனுபவத்தின் வாயிலாக பல பாடங்களை கற்றுத் தந்து மீண்டும் அந்தச் செயலை மாற்றுப்பாதையில் தொடர வழிகாட்டுகிறது. துன்பங்களையும், சோதனைகளையும் கண்டு ஓய்வதால் வாழ்க்கையில் எதையும் சாதித்துவிடப்போவதில்லை. சோதனைகளை எதிர்த்து துன்பங்களை விரட்டுவதில் தான் வாழ்க்கையின் சாதனை இருக்கிறது.

வாழ்க்கை என்பது பிரச்சனைகள் நிறைந்தது தான். பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை இல்லை. இதனை விவேகானந்தர் இவ்வாறு கூறுவார்.

           உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில்  நீ ஏந்தப் பிரச்சனையையும் சந்திக்காமல், நீ முன் செல்கிறாயோ அப்பொழுது நீ தவறான பாதையில் பயணிக்கிறாய் என்று அறிவாய்.

    ஆம், என்ன செய்தாலும் குறை கூறும் உலகு நல்லது செய்ய தடையாக பிரச்சனைகளை எழுப்பாதா என்ன?

     சோதனைகள் வளர்ச்சிக்கே. சோதனைகளும், துன்பங்களும் இல்லாத வாழ்வு நிச்சயம் வளர்ச்சியைத் தராது. இந்தத் துன்பங்களும், சோதனைகளும், தடைகளும், வாழ்வை பண்படுத்தவே.

        வருஷம் முழுவதும் பாடுபட்டும் பலன் கிடைக்காமல் பயிர்கள் திடீர் மழையாலும், புயலாலும், திடீர் வறட்சியாலும் பாதிக்கப்பட்டதால் மனம் வெறுத்துப்போன விவசாயி கடவுளிடம் கேட்டான், ஏன் கடவுளே உனக்கு கொஞ்சமாவது மூளை இருக்கா? மழையை அளவா பெய்யவச்சாத்தான் என்ன? ஏன் இப்படி காட்டாற்று வெள்ளமா பெருக வச்சு பயிர்களை எல்லாம் அழிக்கின்றாய்? அதே மாதிரி காற்று வீசினா பத்தாதா? புயலாத்தான் வீசணுமா? வெயில் அடிச்சா பரவாயில்ல… இப்படி ஒரேயடியா வறட்சியை வரவைக்கணுமா? பஞ்ச பூதங்களை எப்படி மேனேஜ் பண்றதுன்னு உனக்கு தெரியல்ல. எங்கிட்ட அந்த சக்தியை கொடு. உற்பத்தியை பெருக்கி நாட்டில் எப்படி வளர்ச்சியை உருவாக்குறேன்னு பாரு அப்டீன்று சவால் விட்டான். கடவுளும் சரி, இனி உன் இஷ்டம். இயற்கை உன் சொல்படி நடக்கும் அப்டீனு சொல்லி இயற்கையை கட்டுப்படுத்துற சக்தியை அந்த விவசாயிடம் கொடுத்தார். அன்றிருந்து விவசாயி போட்ட கட்டளைக்கு மழை, வெயில், ஆகாயம், வெப்பம், காற்று என இயற்கை அவனுக்கு கட்டுப்பட்டது. மழை அளவா பொழிஞ்சது. காற்று மிதமா வீசிச்சு, வெப்பம் போதுமான அளவோட இருந்தது. பயிர்கள் ஆமோகமாக விளைந்திருப்பதைப் பார்த்து அவனுக்கு பெரும் மகிழ்ச்சி. மகிழ்ச்சியை அடக்க முடியாதவனாய் கடவுளைக் கூப்பிட்டு, பாத்தீங்களா கடவுளே! நான் எப்படி விளைச்சலைப் பெருக்கி இருக்கேனு, பெருமிதத்தை அடக்க முடியாதவனாய் கடவுளிடம் கூறினான். கடவுளும் அவன் பேசியதைக் கேட்டுக்கொண்டே, சரி… அறுவடைச் செய், என்றுக் கூறிவிட்டு அவன் அவன் அறுவடைச் செய்வதை வேடிக்கைப் பார்த்தார். விவசாயி ஆறுவடைச் செய்துவிட்டு முற்றிய நெற்கதிர்களை உதிர்த்துப்பார்த்தான். நெல் சிதறியது. ஆனால், அதில் அரிசி இல்லை. எல்லாமே பதராக இருந்தது. அவன் திகைத்துப்போய் கடவுளை ஏறிட்டுப்பார்த்தான். கடவுள் அவனிடம் மகனே, இது தான் உனக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். நான் புயல் வீசச் செய்யும் போது பயிர் தனது வேர்களை பலப்படுத்தும், மழையை கொடுக்கும் போது பயிர் தன் வேரை நீரிலிருந்து அழுகாமல் பாதுகாக்கும், தன் வேர்க்கால்களை வலுவாக்கிக்கொள்ளும், வறட்சியை கொடுக்கும் போது பயிர் தன் வேரை நன்கு பரவவிட்டு வளரும். இப்படி அதன் வளர்ச்சி எல்லா பருவ நிலைகளுக்கும் ஏற்றப்படி மாறி நல்லதொரு பலன் கொடுக்கும் பயிராய் அது வளரும். இனால் நீ வளர்த்தப் பயிரைப் பார்த்தாயா? எல்லா வசதிகளும், தேவைப்பட்ட காலங்களில் கிடைத்தப்போதும் அவை சோம்பேறியாய் வளர்ந்து பலன் கொடுக்காமல் பதராய் மாறிவிட்டது.

          ஆம், இது ஓர் கற்பனை கதையாக இருந்தாலும் சோதனைகளும், துன்பங்களும் நம் வாழ்வை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்பதை உணர்த்துகிறது இல்லயா?.

கட்டுரைகள்

இறை பார்வை

இறை  என்பது ஒரு விதமான நம்பிக்கை. மனிதன்  துவண்டோ, நெகிழிழ்ந்தோ போகும் தருணங்களில் அவனுக்கு ஒரு பிடிப்பு தேவைப்படுகிறது. எதன்மீதாவது தன் உணர்வுகளின் தாக்கத்தை திணித்துவிட்டு இளைப்பாற வேண்டியுள்ளது. இக்கட்டான தருணங்களில்  ஒரு தொண்டன் தன் தலைவனிடம் அடைக்கலம் புகுவதைப்போல.

துவண்ட வேளையில் வேண்டுதலாகவும் , நெகிழிந்தபோது நன்றியாகவும்  அது அமைகிறது.

நம்பிக்கை வலுக்கவும், நிலைக்கவும் ஒரு வடிவம் தேவைப்படுகிறது. அந்த வடிவம் மதத்திற்கு மதம் வேறுபடுகிறது. சில மதங்களில் பல வடிவங்கள் படைக்கப்படுள்ளது. வாழ்வியல் முறைக்கேற்ப, சுற்றுசுழலுக்கேற்ப இது வேறுபடுகிறது. எதனை மனிதன் தன்னோடு தொடர்புபடுத்திக்கொண்டானோ அது வடிவமானது, இறையானது.

வடிவம் எதற்கு ? தொடர்புகொள்ள. தொடர்பின்றி பரிமாற்றம் இல்லை. பெயரும், வடிவமுமின்றி பிடிப்பில்லை.

பிடிப்பை கடந்து எது நிற்கிறது என்று ஆராய ஆத்திகர்கள் முயற்சிப்பதில்லை. உலகில் 80% மேற்பட்ட மக்கள் ஆத்திகர்களா உள்ளனர். முயற்சி தேவையும் இல்லை. இளைப்பாறியவுடன் இயல்பிற்கு சென்றுவிடுகிறது மனமும், புத்தியும். இயல்புநிலைக்கு சென்ற புத்தி நிதானமாய், ஆரோக்கியமாய் செயல்படுகிகறது.மீண்டும் பிடிப்பு வேண்டியிருக்கிறது. இது ஒருவிதமா சக்கரம்

வடிவம் கடந்து ஆராயும் போது வடிவம் கேள்வியாகிறது. காரணஅறிவு முதன்மை பெருகிறது, பல கேள்விகள் உருவாகிறது. விடை கிடைக்காவிடினும் வடிவத்தோடு சமரசம் செய்துகொள்ள புத்தி மறுக்கிறது. அறிவியலோடு சற்றே ஒத்துப்போகிறது, ஆயினும் கேள்வியோடு நிற்கிறது.

இந்த கேள்விகளும், பிராத்தனைகளும் தொடர்ந்துகொண்ட இருக்கிறது

இறை இங்கே இரண்டு விதமாய் பார்க்கப்படுகிறது, ஒன்று காதல்வயப்பட்டு கனிந்து கருணை வேண்டி கொண்டாடப்படுகிறது. மற்றொன்று காரணஅறிவோடு விவாதம்செய்தபடி தெளிவுவேண்டி நிற்கிறது .

கட்டுரைகள்

பயணச் சுற்றுலா

 நாம் அனைவருமே இறைவனால் படைக்கப்பட்டு இவ்வுலகிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சுற்றுலா பயணிகள். சுற்றுலா செல்லும் யாரும் சென்ற இடத்தில் தங்கி விடுவது இல்லையே. எங்கிருந்து திரும்பினோமோ அவ்விடத்திற்கே திரும்பிச் செல்வோம். அதுப்போலவே இவ்வுலக சுற்றுலா வாழ்க்கை முடிந்ததும் நம்மைப் படைத்து அனுப்பியவரிடமே திரும்பி செல்வோம். நாம் சுற்றுலா சென்ற இடத்தையும் அங்குள்ள பொருட்களையும் எப்படி உரிமைக் கொண்டாட முடியாதோ, அதுப்போலவே இவ்வுலக சுற்றுலா வாழ்க்கை முடித்து படைத்தவனிடம் திரும்பிச் செல்லும் போதும் எதையும் எடுத்துச் செல்ல முடியாது. கடவுள் நம்மை எவ்வாறு புதுப்பிறப்பாக, தூய்மையான உள்ளம் படைத்தவர்களாக இவ்வுலகிற்கு அனுப்பினாரோ அதேப் போன்ற புதுப்பொலிவுடன் தூய உள்ளத்தோராய் அவரைச் சென்றடைய வேண்டும். ஆனால், நாம் சுமந்து செல்வது என்னவோ பாவச்சுமைகளைத்தான்.

      நமக்கு முன் இவ்வுலகிற்கு கடவுளால் அனுப்பி வைக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் பலர் துன்பத்தினாலும், பலவிதமான சோதனைகளினாலும், நோய்களினாலும் பாதிக்கப்பட்டு தவறான பாதையில் செல்பவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு துன்பமான வேளையில் ஆறுதலாகவும், நோயால் வாடுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவும் தவறான பாதையில் செல்வோரை நல் அறிவாலும், நற் சிந்தனைகளாலும், நல்வழிப்படுத்தவும், நம்மைத் தொடர்ந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு முன்மாதிரியான வாழ்க்கை வாழவுமே கடவுள் நம்மை இவ்வுலகிற்கு அனுப்புகிறார்.

  ஆனால், நாம் பணம், பதவி, பட்டம், பெயர், புகழுக்காக இவ்வுலக முன்னாள் பயணிகளின் மனதையும், நம்மைத் தொடர்ந்து வரும் சுற்றுலா பயணிகளின் நற்சிந்தனைகளையும் உடைத்து அவர்களது மனதில் ஆறாத வடுவையும், தீய எண்ணங்களையும் விதைக்கின்றோம்.

    இந்த உலகில் உள்ள எதுவும் நமக்கு சொந்தமில்லை என்பது நாம் மண்ணுடன் போகும் போது மட்டுமே நமக்கு தெரிகிறது. அதற்கு முன் நம் அறிவுக்கு தெரிந்தாலும் நம் மனம் அதை ஏற்றுக்கொள்வதில்லை. ஏனெனில் நாம் வாழும் போது, இது எனக்கு சொந்தம், அது எனக்கு சொந்தம், அவை எனக்குரியவை, இவை எனக்குரியவை என அனைத்தின் மீதும் உரிமைக் கொண்டாடுகின்றோம். ஆனால், இது எதுவும் இறுதியில் நம்முடன் வருவதும் இல்லை, நம்மால் அவற்றை எடுத்துச் செல்லவும் இயலாது. நாம் வாழும் இவ்வுலக வாழ்க்கையில் அன்புடன் ஒருவர் மற்றவருக்கு உதவிகள் செய்து வாழலாம். ஆனால், நாம் யாருக்கும் எந்த உதவியும் செய்யாதவர்களாய் ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம் என்று இருக்கின்றோம். இதை மாற்றி நாம் பிறந்ததற்கான நோக்கத்தை அறிந்துச் செயல்பட வேண்டும்.

  உன்னைப் படைத்தவர் உன்னைப் படைத்தப் பொழுதே உன் வாழ்வுக்கான நோக்கத்தை உருவாக்கியிருப்பார். ஆம், ஒவ்வொரு மனிதனின் பிறப்பிற்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கத்தை அவனவன் அறிந்து அவனவனே நிறைவேற்ற வேண்டும். அதற்காகவே நாம் படைக்கப்பட்டோம். நம் இடத்தை நம்மால் மட்டுமே நிறைவு செய்ய முடியும். வேறு எவராலும் நம் இடத்தை நிறைவு செய்ய இயலாது.

    பிறப்பு என்பது பலருக்கும் வரலாற்றில் ஒரு நிகழ்வு. ஒரு சிலருக்கோ பிறப்பே வரலாறுத்தான். நிரந்தரமாக நாம் யாருக்கும் எதையும் கொடுக்க முடியாது. நமக்கும் நிரந்தரமாக யாரும் எதையும் தர முடியாது. எல்லாமே தற்காலிகமானதுதான். இந்தத் தற்காலிகமான உலகில் நாம் மற்றவர்களுக்கு உதவுவதால் எதையும் இழந்து விடப்போவது இல்லை. ஏனெனில் எல்லாம் எல்லாருக்கும் உரியது.  பிறக்கும் போது எதையும் கொண்டு வருவது இல்லை. மற்றவருக்கு உதவுவதால் எதையும் இழந்துவிடப் போவதும் இல்லை.

கட்டுரைகள்

மன்னிக்காதவன் ஆன்மீக ஏழை !

`ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்’ என்கிறது பகவத் கீதை. இஸ்லாம் கடவுளை ‘அல் கபிர்’ என்கிறது, “முழுமையாய் மன்னிப்பவர்” என்பது அதன் அர்த்தம். ‘மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்லவே முடியாது’ என்கிறது கிறிஸ்தவம்.

இயேசு

காதல் என்பது எதுவரை

“அவன் யார் கூட எப்படிப் பழகறான்னு தெரியாது. ஆனா என் கூட ரொம்ப அன்பா இருப்பான். எனக்காக உயிரையே குடுப்பான்” என காதலில் கசிந்துருகும் காதலியர் சொல்வதுண்டு.

“மச்சி, அவளோட லவ் சின்சியர்டா. அடுத்தவங்க அவளைப்பற்றி என்ன சொன்னாலும் கவலையில்லை. என்னைப் பொறுத்தவரை அவ அன்பானவடா” என கசிந்துருகும் காதலன் சொல்வதுண்டு.

இத்தகைய அதீத நம்பிக்கைகளும், மனப்பான்மைகளும் தான் காதல் தோல்விகளுக்கும், காதலின் வெளிப்பாடாய் விளையும் திருமணத் தோல்விகளுக்கும் காரணம்.

காதலில் திளைத்திருத்தல் என்பது பூவில் புரளும் வண்டின் ஆனந்தத்துக்கு ஒப்பானது. உலகமே பூக்களின் கூடாரம் என வண்டு கற்ப‌னை செய்து கொள்ளும் கொள்ளும். வண்டு எப்போதுமே கொஞ்சிக் குலவும் என பூக்கள் புரிந்து கொள்ளும். இரண்டுமே தவறென தெரியவரும் போது எதிர்பார்ப்புகளின் ஆணிவேர் ஏமாற்றக் கோடரியால் வெட்டிச் சாய்க்கப்படும். அவ்ளோ தான்பா அவங்க‌ காதல் ! காதல் எவ்ளோ தூரம் போகும்ன்னு நமக்குத் தெரியாதா ? என ஊர் பேசத் தொடங்கும்.

தவறு காதலர்களிடம் தான் இருக்கிறது. தனது காதலன் தவறே இல்லாதவன் என காதலியும், தனது காதலி பிழையற்றவள் என காதலனும் கருதிக் கொள்வதில் பிரச்சினை யின் முதல் முளை துவங்குகிறது. உண்மையோ வித்தியாசமானது !

ஆலயத்துக்குள் பக்திப் பழமாய் நுழையும் மனிதனைப் பார்த்தால் அவன் கழுவி வைத்த கடவுளைப் போல இருப்பான். கூப்பிய கைகளோடும், வெற்றுக் கால்களோடும் அவன் ஆலயத்தின் தாழ்வாரங்களில் அமைதியாய் அலைந்து திரிவான். ஆலயத்தை விட்டு வெளியே வந்ததும், லஞ்சப் பணத்தை எண்ணத் தொடங்குவான். அல்லது தனது ஆன்மீக இதயத்தைக் கழற்றி விட்டு அழுக்கான இதயத்தை அணிந்து கொள்வான். கோயிலுக்குள் ஒருவன் எப்படி இருக்கிறான் என்பதை வைத்து அவன் எப்படிப்பட்டவன் என்பதை அளவிட முடியாது.

அதே போல தான் காதலும் ! காதலில் திளைத்திருக்கும் போது அடுத்த நபருக்காக உயிரை கைகளில் ஊற்றி ஊட்டி விடுவார்கள். இதழ்களில் இதயத்தை இறக்கி வார்த்தைகளாலே வானவில் கட்டுவார்கள். ஆனால் வாழ்வின் எதார்த்தம் எப்போதும் படகு சந்திப்போடு முடிந்து போவதில்லை.

ஒரு மனிதனின் இயல்பு எப்படி என்பதை வைத்தே அவனது காதல் வாழ்க்கையையும் அளவிட வேண்டும். அவன் தனது தாயை நேசிக்கிறானா ? தனது தந்தையை மதிக்கிறானா ? தனது சகோதர சகோதரிகளிடம் பாசமாய் இருக்கிறானா ? நண்பர்களோடு நட்பு பாராட்டுகிறானா ? வீதியில் திரியும் ஒரு ஏழை சகோதரனைக் கூட கருணையோடும், சக மனித மரியாதையோடும் நடத்துகிறானா ? இவையெல்லாம் ஒருவனுடைய காதல் வாழ்க்கையிலும் வெளிப்படும்.

ஒருவனுடைய இயல்பு எதுவோ, அதுவே காதலிலும் பிரதிபலிக்கும். அதைத் தாண்டிய வெளிப்பாடுகள் எல்லாம் போலியே. அம்மாவை அவமதிப்பவன், அப்பாவை நிராகரிப்பவன், சகோதர சகோதரிகளுக்கு இரங்காதவன் காதலிக்கு மட்டும் காற்றில் தாஜ்மஹால் கட்டினால் நம்பாதீர்கள். அந்த மிகைப்படுத்தும் நடிப்பு நிலைப்பதில்லை. அது பனிக்கட்டியின் மீது செய்யும் தூரிகை வண்ணம் போல காலம் கடக்கையில் கரைந்தே மறையும்.

அரளிச் செடியின் கிளைகளில் ரோஜாப் பூக்களை ஒட்டி வைக்கலாம். மாமரத்தின் கிளைகளில் மாதுளம் பழத்தைக் கட்டி வைக்கலாம். ஆனால் நிலைக்குமா ? நிலைப்பதில்லை ! மரத்தின் இயல்பு எதுவோ, அது தான் கனிகளில் வெளிப்படும். செடியின் இயல்பே பூக்களில் வெளிப்படும். அதைத் தாண்டிய மாயாஜாலங்களெல்லாம் காதலர்களின் கண்கட்டு வித்தைகளே.

ஒருவன் காதலில் சிறக்க வேண்டுமெனில் அவனுடைய குணாதிசயம் சரியாக இருக்க வேண்டும். என்னதான் விஷத்தண்ணீர் ஊற்றினாலும் ரோஜாப்பூ கருப்பாய் பூக்காது. நிலத்தை மாற்றி நட்டாலும் அல்லிக் கொடியில் அரளிப் பூ பூக்காது. உங்கள் குணாதிசயம் உங்களது உதிரத்தோடு கலந்தது. உதிர்ந்து விடுவதில்லை. அந்த குணாதிசயம் மிக முக்கியம். மனிதத்திலும், மனித நேயத்திலும் கலந்த குணாதிசயம் உங்கள் காதலருக்கு இருந்தால் உங்கள் காதல் என்பது ஆயுள் உள்ளவரை என்பதில் சந்தேகமில்லை.

தெய்வீகக் காதலென்பது கடற்கரையில் கைகோப்பதோ, மாலை நேரத்தில் மயங்கிக் கிடப்பதோ, வாட்ஸப் வாசலில் தோரணம் கட்டுவதோ, தொலைபேசிக் குரலுக்குள் தேன் தடவி அனுப்புவதோ அல்ல. அது ஒரு நீண்டகால பயணத்துக்கான வழித்துணையை பெற்றுக் கொள்வது.

இங்கே கவிதைகள் வரைவது எவ்வளவு அழகானதோ, கவிதையாய் வாழ்வது அதை விட அவசியமானது. காமத்தின் இழைகளில் சிலிர்ப்புகளை நெய்வது எவ்வளவு முக்கியமோ, மௌனத்தின் கரைகளில் மகிழ்ச்சியை நெய்வது அதை விட முக்கியமானது. அதற்கு காதலர்களின் குணாதிசயமும், இயல்பும் முக்கியமாகிறது.

அன்று

சங்கக் காதலில் தமிழன் சிலிர்ப்பூட்டினான்

இன்று

அங்கக் காதலில் சலிப்பூட்டுகிறான் !

காதலைக் கொண்டாடிய தமிழன் இன்று ஏன் காதலைக் கொன்றாடுகிறான் ? காரணம் இருக்கிறது. அன்றைய காதல் தற்காலிகக் கனவுகளில் தனது மாளிகையை அமைக்கவில்லை. நிஜங்களில் பாய் முடைந்து படுத்துக் கிடந்தது. தூரதேசம் செல்லும் காதலனுக்காக ஆண்டுக் கணக்கில் காத்திருந்தது அன்றைய காதல். நெட்வர்க் நாலு நாள் வேலை செய்யாவிட்டாலே காதல் முறிந்து போகிறது இன்று.

காதல் எதுவரை என்பதை காதலர்களே முடிவு செய்கிறார்கள். பாதி வழியில் இறங்கவேண்டுமே என பயணிப்பவர்களும் உண்டு. இறுதிவரை நிலைத்திருப்பவர்களும் உண்டு. காதலில் வெற்றியடைந்தவர்களின் வாழ்க்கையை ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்துக்கு உட்படுத்தினால் அவர்களிடம் சில குணாதிசயங்கள் இருப்பதைக் காணலாம்.

ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பு, ஒருவரை அவரது இயல்புகளோடே ஏற்றுக் கொள்ளும் மனம், சுயநல சிந்தனைகளற்ற குணம், சந்தேகம் விலக்கிய நம்பிக்கை, பதட்டம் தரா பாதுகாப்பு உணர்வு, கள்ளமற்ற உரையாடல், யதார்த்தத்தை பார்க்கும் பக்குவம் போன்றவற்றை அவற்றில் முக்கியமானவையாய் சொல்லலாம்.

இதோ மீண்டும் ஒரு காதலர் தினம் வந்திருக்கிறது.

காதலை மீண்டெடுப்போம். மீண்டும் எடுப்போம். சிற்றின்பத்தின் கரைகளில் ஒதுங்கும் நுரைகளாய் அல்ல, பேரின்பத்தின் பிரவாகத்தில் கலந்துவிடும் புத்துணர்ச்சியுடன்.

காதல், வாழ்வின் பாகமல்ல.

வாழ்வே காதலின் பாகம்.

காதலாகவே இருக்கிறது இப் பிரபஞ்சம், கறைபடியாமல் காப்பது மட்டுமே நமது வேலை. காதல் என்பது எதுவரை ? வாழ்க்கை எனும் வட்டத்தின் கடைசி முனை வரை !

Vettimani, London & Germany.

இலக்கியம்