சிலுவை மொழிகள் 7

“தந்தையே, உம்கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன் ( லூக்கா 23:47) !

இயேசு சிலுவையில் மொழிந்த கடைசி வாக்கியம் இது தான். மனிதனாய் மண்ணில் வந்து, தந்தையின் விருப்பப்படி வாழ்ந்து, அவரது விருப்பப்படி மரணித்த இயேசு, கடைசியில் தனது ஆவியையும் தந்தையின் கரங்களில் ஒப்படைக்கிறார்.

ஊருக்கு திரும்பும் ஒரு தொலைதூரப் பயணியின் ஆறுதலாய், தாயின் தோள்களில் தாவி ஏறும் ஒரு மழலையின் குதூகல மனநிலையாய், இயேசு தனது மண் வாழ்வை முடித்து வைக்கிறார்.

நமது உயிர் இறைவனின் உயிர் மூச்சினால் உருவானது. அந்த உயிர்மூச்சு இறைவனிடமே திரும்பிச் செல்லும் எனும் உத்தரவாதமே இவ்வுலக வாழ்வை மகிழ்ச்சியாக்கும். உயிரின் பிறப்பிடமும், உயிரின் புகலிடமும் இறைவனின் கரங்களே

“உமது கையில் என் உயிரை ஒப்படைகின்றேன்” (சங் 31:5) எனும் இறைவாக்கின் நிறைவேறுதல் இது. இயேசு இங்கே, தந்தையே என்பதை சேர்த்துக் கொள்கிறார். உலகின் பாவத்தைச் சுமந்ததால் இறைவனின் அருகாமையை விட்டு விலகிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் விழுந்தவர் இயேசு. அப்போது, “இறைவா, ஏன் என்னை கைவிட்டீர்” என கதறினா.

இப்போது எல்லாம் நிறைவேறியபின் மீண்டும் தந்தையே என அழைத்து தன் உறவை உறுதி செய்து கொள்கிறார்.

சிலுவையில் இயேசு ஏழு வார்த்தைகளைச் சொன்னார். ஏழு என்பது முழுமையைக் குறிப்பது.தனது வாழ்வின் முழுமையை இயேசு வெளிப்படுத்துகிறார்.

முதல் வாசகம் மன்னிப்பைப் பேசியது, இரண்டாவது வாசகம் மீட்பைப் பேசியது, மூன்றாவது வாசகம் பரிவைப் பேசியது, நான்காவது வாசகம் துயரத்தைப் பேசியது, ஐந்தாவது வாசகம் ஏக்கத்தைப் பேசியது, ஆறாவது வாசகம் வெற்றியைப் பேசியது, ஏழாவது வாசகம் ஆறுதலைப் பேசியது !

ஆன்மீகத்தின் முழுமையும், செழுமையும் இயேசு பேசிய வார்த்தைகளுக்குள் அடங்கி விட்டன எனலாம்.

‘தந்தையே உம் கைகளின் என் உயிரை ஒப்படைக்கிறேன்’ எனும் வார்த்தையில் நம்பிக்கை வெளிப்படுகிறது. தந்தை தன்னை கைவிடமாட்டார் என முழுமையாய் நம்பும் மழலையின் மனநிலை அது. “நீங்கள் குழந்தையாய் மாறவேண்டும்” என இயேசு குறிப்பிட்டது தந்தை மீது கொள்ளவேண்டிய முழுமையான நம்பிக்கையையும் குறிக்கும்.

தந்தையின் கரங்கள் ஆறுதலின் கரங்கள். தந்தையின் தோள்களில் துயிலும் மழலை எத்தனை சத்தங்களுக்கு இடையே வாழ்ந்தாலும் நிம்மதியாய் உறங்கும். பெற்றோரின் அருகாமை இல்லையேல் நிசப்தமான பஞ்சு மெத்தை கூட அவர்களை கலங்கடிக்கும். தூங்க விடாமல் செய்யும். இறைவனின் கரங்களில் நமக்கு ஆறுதல் கிடைக்கிறதா ?

தந்தையின் கரங்களில் கிடைப்பது முழுமையான பாதுகாப்பு. தந்தையின் விரலைப் பிடித்துக் கொண்டு செல்லும் மழலையின் முகத்தைப் பார்த்திருக்கிறீர்களா ? உலகின் எந்த பெரிய வீரன் வந்தாலும் தந்தை தன்னைப் பார்த்துக் கொள்வார் எனும் அதிகபட்ச நம்பிக்கை அந்த கண்களில் மின்னும். இதைவிடப் பெரிய பாதுகாப்பு இனிமேல் இல்லை எனும் நிம்மதி அந்த முகத்தில் தெரியும்

நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை இந்த வாசகம் கேட்கிறது. இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுபவர்களுக்கு மட்டுமே தந்தையின் கரம் கிடைக்கும் ! தந்தையின் விருப்பத்தை நிராகரித்து நடப்பவர்கள் எப்போதுமே அந்த கரங்களுக்குள் அடைக்கலம் புகுவதில்லை.

அந்த நம்பிக்கையைப் பெறுவதற்குரிய வகையில் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

தந்தையின் கரத்தோடு இணைந்து இருப்பவர்களுக்கே ஆறுதல் கிடைக்கும். நமது வாழ்க்கை எதில் ஆறுதல் அடைகிறது . உலகத்தின் கரங்களிலா ? அல்லது உன்னதரின் கரங்களிலா ?

தந்தையோடு இருப்பதே உண்மையான பாதுகாப்பு. நமது வங்கிக் கணக்குகளும், நில புலன்களும் நமக்கான பாதுகாப்பல்ல. களஞ்சியத்தை எவ்வளவு தான் இடித்துக் கட்டினாலும் ஆன்மா இழந்து போனால் என்ன பயன் ?

நமது நம்பிக்கையை அழிந்து போகும் செல்வங்களிலிருந்து மாற்றி, இறைவனின் அருகாமையில் வைப்போம்.

“என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன்..” என யோவான் 10:27 -28 ல் இயேசு கூறினார்.

இயேசுவின் கரங்கள் ஆயனின் கரங்கள். அவை நம்மைப் பற்றிக் கொள்ள ஆயத்தமாய் இருக்கின்றன. பற்றிக் கொண்டால் விட்டு விடாமல் பாதுகாக்கவும், ஆறுதலை அளிக்கவும், நம்பிக்கை அளிக்கவும் அவை தயாராக இருக்கின்றன !

நமது இதயம் எங்கே இருக்கிறது ? இறைவனின் கரங்களிலா ? உலகத்தின் கரங்களிலா ?

“நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம்.

“அவர் தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார்” எனும் எபிரேயர் 12:2 வசனத்தில் நம்பிக்கை வைப்போம் !

இயேசு

சிலுவை மொழிகள் 6

“எல்லாம் நிறைவேறிற்று” யோவான் 9:30.

இறைமகன் இயேசு சிலுவையில் கூறிய ஆறாவது வாக்கியம் “எல்லாம் நிறைவேறிற்று” என்பது. ஆறாத மனதின் தாகத்தை நிறைவேற்றிய நிம்மதி அந்த வார்த்தையில் எதிரொலிக்கிறது.

இயேசு மனிதனாக மண்ணில் வந்தார், அதன் நோக்கம் மண்ணுலகின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, உயிர்விட வேண்டும் என்பதே. அந்த நோக்கம் இதோ நிறைவேறிவிட்டது !

சுற்றியிருந்த மக்கள் நினைத்தது போலவோ, ஆளும் வர்க்கம் நிறைவேறியது போலவோ இது அவர்களுடைய வெற்றியல்ல. ‘எல்லாம் முடிந்தது’ என அவர்கள் நினைத்தார்கள். ஆனால் “எல்லாம் நிறைவேறியது” என இயேசு அதை தனது வெற்றியாய் மாற்றி எழுதினார்.

தந்தை தனக்கு இட்ட பணியை இயேசு நிறைவேற்றி முடித்தார் என்பதே அந்த வாக்கியத்தின் சுருக்கமான விளக்கம்.

இதன் எபிரேய வார்த்தை டிடிலெஸ்தாய் என்பது. அதன் பொருள் ‘கடனை எல்லாம் செலுத்தி முடித்தாயிற்று’ என்பதே. இயேசுவும் பாவங்களுக்கு விலையாகக் கொடுக்க வேண்டிய தன்னுடைய உயிரைக் கொடுத்து இதோ முடித்து விட்டார்.

எல்லாம் நிறைவேறியது எனும் இந்த வாக்கியம் நமது வாழ்வில் புதிய நம்பிக்கைகளை விதைக்கின்ற ஒரு விஷயமாக இருக்கிறது.

முதலாவது, நமது பாவங்களிலிருந்து நாம் விடுதலையாகி விட்டோம். “கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள்வளத்திற்கு ஏற்ப நமக்கு மீட்பு அளித்துள்ளார்; இம்மீட்பால் குற்றங்களிலிருந்து நாம் மன்னிப்புப் பெறுகிறோம் (எபேசியர் 1:7)” எனும் இறைவார்த்தை இதை உறுதி செய்கிறது.

பழைய ஏற்பாட்டில் பாவங்களுக்கு ஏற்பவும், பாவம் செய்யும் நபருக்கு ஏற்பவும், பலிகள் செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் அந்த பலிகளையெல்லாம் இறைமகன் இயேசுவின் ஒற்றைப் பலி தேவையற்றதாகிவிட்டது. இப்போது நாம் செய்யவேண்டிய பலி விலங்குகளை வெட்டுவதல்ல, நம்மை நாமே வெறுத்து இறைவனிடம் சரணடைவது.

இரண்டாவது, அவர் சாவை வென்று விட்டார். “நாம் காண்பதோ சிறிது காலம் வானதூதரைவிடச் சற்றுத் தாழ்ந்தவராக்கப்பட்ட இயேசுவையே. இவர் துன்புற்று இறந்ததால், மாட்சியும் மாண்பும் இவருக்கு முடியாகச் சூட்டப்பட்டதைக் காண்கிறோம். (எபி 2:9) என்கிறது விவிலியம்.

வான தூதர்களுக்கு மரணம் இல்லை. கடவுளுக்கும் மரணம் என்பதில்லை. மரணம் இல்லாமல் மீட்பு இல்லை. அதனாலேயே இறைமகன் இயேசு மனிதனாய் பூமியில் வரவேண்டியிருந்தது. அவர் பூமியில் வந்து நிராகரிப்பையும், வலியையும், மரணத்தையும் ஏந்தினார். ‘எல்லாம் நிறைவேறியது’ எனும் இயேசுவின் வார்த்தை மரணத்தை வென்ற வார்த்தை. நம்முடைய ஆன்மீக மரணத்துக்கு முடிவு கட்டும் நம்பிக்கையை விதைக்கும் வார்த்தை.

அவரது மரணத்தையும், உயிர்ப்பையும் நம்பி அவரை ஏற்றுக்கொள்பவர்கள் இதன் மூலம் விண்ணக வாழ்வின் அனுமதிச்சீட்டைப் பெற்றுக் கொள்கின்றனர்.

மூன்றாவதாக, இறைவனுக்கும் நமக்கும் இடையேயான நேரடி உறவுக்கான கதவைத் திறந்து வைத்திருக்கிறது இயேசுவின் சிலுவை மரணம். பழைய ஏற்பாட்டில் ஆலயத்தின் மஹா பரிசுத்த ஸ்தலம் மனிதர்களுக்கு அனுமதியற்ற ஒன்றாகவே இருந்தது. அதன் திரைச்சீலையைக் கடந்து செல்ல தலைமைக்குருவுக்கு அதுவும் ஆண்டுக்கு ஒரே ஒரு முறைமட்டுமே அனுமதி உண்டு. அதை மாற்றி நேரடி உறவை உருவாக்கியது, “எல்லாம் நிறைவேறியது” எனும் இயேசுவின் பணியே.

“இயேசுவின் உடலைக் கோவிலின் திரைச்சீலைக்கு ஒப்பிடலாம். இத்திரைச்சீலை வழியாகத் திருத்தூயகத்துக்குள் நுழைய நமக்குத் துணிவு உண்டு. ஏனெனில் அவர் இரத்தம் சிந்தி நமக்கெனப் புதியதொரு வழியைத் திறந்து வைத்துள்ளார். இதுவே வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் வழி” என்கிறது எபிரேயர் 10:19 !

இறைவனின் மரணம் நம்மை இறைவனின் அருகில் நெருங்குவதற்கு மட்டுமல்ல, நம்மை அவருக்கு ஏற்புடையவராக மாற்றவும் செய்கிறது.

“தாம் தூயவராக்கியவர்களை ஒரே பலியினால் என்றென்றைக்கும் நிறைவுள்ளவராக்கினார் ( எபி10:14) எனும் வசனம் நமக்கு முழுமையான மீட்பின் நம்பிக்கையாய் இருக்கிறது.

“மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என இறைமகனின் வருகையின் நோக்கத்தை மிகத் துல்லியமாக மார்க் 10:45 விளக்குகிறது.

நமது வாழ்க்கையை நாம் ஒரு அலசலுக்கு உட்படுத்த இந்த சிலுவை வார்த்தை அழைப்பு விடுக்கிறது.

“எல்லாம் நிறைவேறிற்று” என மகிழ்ச்சியாக சொல்லும் நிலையில் நாம் இருக்கிறோமா ? முழுமையாக இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுபவர்களாக இருக்கிறோமா ? இந்த நேரம் நமது வாழ்க்கை முடிந்தால், என்னிடம் தரப்பட்ட பணிகள் “எல்லாம் நிறைவேறிற்று” என சொல்ல முடியுமா ? இல்லை, “ஐயோ இன்னும் நான் தொடங்கவே இல்லையே என பதறுவோமா

இறை சித்தத்தை நிறைவேற்ற கீழ்ப்படிதலும், சோதனைகளைத் தாங்கும் மனமும் உள்ளவர்களாக இருக்கிறோமா ?

எல்லாம் நிறைவேறியது என்று சொன்ன இயேசுவின் வார்த்தையில் இணைவோம். ‘எல்லாம் புதிதாகும்’ அனுபவத்தைப் பெறுவோம்.

இயேசு

இரண்டாம் வருகை !


காற்றின் முதல்
சுவடு
எங்கே இருக்கிறது ?

மழையின் முதல்
துளி
எங்கே கிடக்கிறது ?

கடலின் முதல்
அலை
எங்கே அடித்தது ?

நம்மோடு இணைந்திருக்கும்
இயற்கை
விடைதெரியா கேள்விகளை
விழிகளில்
எழுதிச் செல்கிறது !

இயற்கையின்
முதல் வருகையே
தெரியாத மனிதர்களுக்கு,
எப்படித் தெரியும்
இறைவனின்
இரண்டாம் வருகை !

இயேசுவின்
முதல் வருகை
தொழுவத்தில் தவழ்ந்தது !

வைக்கோல் கூட்டில்
வைரமாய் விளைந்தது !

ஆவின் அருகிலே
ஆதவனாய் அமர்ந்தது !

அது
தாழ்மையின் விழா !
வானம் தரையில் வந்ததால்
புழுதியில் புரண்ட‌
பிதாவின் நிலா !

இரண்டாம் வருகை
தாழ்மையின் வருகையல்ல !
மேகத்தில் வருகை
மேன்மையின் வருகை !
தலை நிமிர் வருகை
தலைவனின் வருகை !

அது
மண்மகன் வரவல்ல‌
விண்மகன் வரவு !

மரியின்
உதிரத்தைக் கடன்வாங்கி
மனிதனின்
உடலுக்குள் நடமாடும்
வருகையல்ல !

அரசர்களின் அரசராய்
உச்சாணிக் கடவுளாய்
படைகள் புடை சூழ‌
வானத்தின் சாலைகளில்
விரைந்து வரும் வருகை !

வரலாற்றின்
தொழுவத்திலல்ல‌
வரலாறே
தொழுவதற்கான வருகை !

வீதிகளில்
விழுவதற்கானதல்ல‌
நீதிதனை
எழுதுவதற்கான வருகை !

இந்த வருகை !

அமைதிதனை
அகிலத்தில் நிரப்பும் !
ஆட்சிதனை
நில உலகில் நடத்தும் !

நீதிதனை
மனிதருக்கு வழங்கும் !
மீதியரை
நெருப்புக்குள் அனுப்பும் !

எதிரிகளே
இல்லையென நிலைக்கும் !
குதிரையிலே
அவர் வருகை இருக்கும் !

இறைவார்த்தை
தவறாமல் நடக்கும் !
விசுவாசம்
கொண்டோக்கு இனிக்கும் !

இரண்டாம் வருகை
முதல் வருகையின் நீட்சி !
சிந்தனைக்கு எட்டாத
ஆயிரம் கால ஆட்சி !

முதல் வருகையை
நம்பு !
வரும்,
இரண்டாம் வருகைக்கான தெம்பு !

இது
சிலுவையை நோக்கிய‌
பயணமல்ல !
சிலுவையை நீக்கிய‌
பயணம் !

இயேசு

சிலுவை மொழிகள் 5

“தாகமாய் இருக்கிறது” யோவான் 19:28

இயேசு சிலுவையில் பேசிய மொழிகளிலேயே சுருக்கமான வாக்கியம் இது தான். அந்த ஒற்றை வார்த்தை பல்வேறு ஆன்மீகப் புரிதல்களின் துவக்கப் புள்ளியாய் இருக்கிறது.

இயேசுவை சிலுவையில் அறைந்தது காலை 9 மணி ! வெயில் உடலை வறுக்க, இரத்தம் வெளியேற, வலியும் துயரமுமாய் முதல் மூன்றுமணி நேரம் கடக்கிறது. இப்போது உலகை இருள் சூழ்கிறது. மூன்று மணிநேர இருளின் முடிவில் இயேசு “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என கதறினார். பின்னர் தாகமாய் இருக்கிறது என கூறுகிறார். அப்போது அவர்கள் காடியை கடற்பஞ்சில் தோய்த்து குடிக்கக் கொடுத்தனர்.

“தாகமாய் இருக்கிறேன்” எனும் வார்த்தை இறைமகன் இயேசுவின் மனிதத் தன்மையை உறுதிப்படுத்தும் வார்த்தை. விண்ணின் மகனாக இருந்தாலும், மண்ணில் வருகையில் அந்த விண்ணக மனிதனாக வராமல் மானிட மகனாகவே வந்தார் என்பதன் சான்று. நம்மைப் போலவே வலிகளோடும், சோதனைகளோடும் வாழ்ந்தார் என்பதன் சான்று.

‘தாகமாய் இருக்கிறேன்’ எனும் வார்த்தை இறைவாக்கை நிறைவேற்றுதல். “என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள் ( சங்கீதம் 69:21 ) எனும் இறைவார்த்தை இதன் மூலம் நிறைவேறியது. “என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது ( சங்கீதம் 22:5 ) எனும் வார்த்தையும் அவரது தாகத்தின் நிலையை முன்குறித்த இறைவார்த்தையே.

பழைய ஏற்பாட்டில் இறைமகன் இயேசுவைக் குறித்து 332 தீர்க்கத் தரிசனங்கள் இருப்பதாக விவிலிய ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இயேசு எங்கே பிறப்பார், எப்படி பிறப்பார், எப்படி இறப்பார் எனும் அத்தனை விஷயங்களும் துல்லியமாக பழைய ஏற்பாட்டில் உள்ளன. பழைய ஏற்பாட்டின் முழுமை இயேசுவில் தான் என்பதன் மிகத் தெளிவான விளக்கமே இது.

“தாகமாய் இருக்கிறேன்” என்பதற்கு மனுக்குலத்தை மீட்க ஆவலாய் உள்ளேன் என்றும் பொருள் உண்டு. நமது பாவங்களை சுமந்தார் இயேசு. அந்த பணி இதோ முடிவடையப் போகிறது. தனக்கு இடப்பட்ட பணியை செய்து முடிக்க தாகமாய் இருக்கிறேன் என இயேசு சொல்கிறார் என்றும் புரிந்து கொள்ளலாம்.

இயேசு சிலுவையில் நரக வேதனையை அனுபவித்தார் என்பதன் வெளிப்பாடு ‘தாகமாய் இருக்கிறேன்’ !. நரகம் தாகத்தின் இடம். “இலாசர் தமது விரல் நுனியைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச்செய்ய அவரை அனுப்பும் (லூக்கா 16:24)’ என நரகத்திலிருந்து செல்வந்தர் எழுப்பும் குரல் இதை நமக்கு புரிய வைக்கிறது. உண்மையிலேயே இயேசு சிலுவையில் நரக வலியை அடைந்தார் என்பதை இதனால் புரிந்து கொள்ளலாம். சொர்க்கத்தில் ‘பசியோ தாகமோ இரா’ என்கிறது திருவெளிப்பாடு 7:16.

‘தாகமாய் இருக்கிறேன்’ என்பது இறைமகன் இயேசுவின் கீழ்ப்படிதலின் வெளிப்பாடு. தந்தையின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என முடிவெடுத்த மகனின் தாழ்மையின் வெளிப்பாடு. “சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார் ( பிலிப்பியர் 2:8) என்கிறது விவிலியம்.

மரணத்தை மட்டுமல்ல, தந்தையிடமிருந்த பிரிவை மட்டுமல்ல, வலியையும் அவர் விரும்பியே ஏற்றுக் கொண்டார். சிலுவை சுமந்து வருகையில் வீரர்கள் அவருக்கு “திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை” (மார்க் 15:23). வலிகளையும் சுமந்தார் எனும் எசாயாவின் இறைவாக்கு இதனால் நிறைவேறியது.

‘நீதியின் பால் பசி தாகம் உடையோர் பேறுபெற்றோர்’ என மலைப்பொழிவில் பேசினார் இயேசு. இப்போது அவர் மீட்புக்காக தாகம் கொண்டார். என்பொருட்டு நீங்கள் பிறருக்குக் கொடுக்கும் ஒரு குவளை தண்ணீருக்கான பிரதிபலன் கூட உங்களுக்குக் கிடைக்கும் என இயேசு பகிர்தலை ஊக்கப்படுத்தினார். இப்போது தனது உயிரை நமக்காக கொடுக்கிறார்.

இயேசுவின் தாகம், மனுக்குலம் மீட்கப்பட வேண்டும் எனும் தாகம் !. நமது தாகம் எதில் இருக்கிறது ? இவ்வுலக வாழ்க்கைக்கான தேடல்களுக்கா ? இல்லை விண்ணக வாழ்வுக்கான தயாரிப்புக்கா ?

கண்கள் கொண்டுவரும் சோதனைகள், மாம்சம் கொண்டு வரும் சோதனைகள், பெருமை கொண்டு வரும் சோதனைகள். என அத்தனை சோதனைகளையும் இயேசு தாண்டினார். காரணம் நம்மேல் அவர் கொண்டிருந்த தாகம் ! பழுதற்ற ஆட்டுக்குட்டியே பலியாக முடியும் என்பதால் பாவத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை அவர். நாம் எதில் தாகம் கொண்டிருக்கிறோம் ? பாவத்தில் பயணிக்கவா ? இறைவனில் பயணிக்கவா ?

“நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது” (யோவான் 4:14) என இயேசு சமாரியப் பெண்ணிடம் சொன்னார். இறைமகன் இயேசு அளிக்கின்ற அந்த வாழ்வின் நீரை நாம் பருகும் போது தாகம் தணிகிறது.

இயேசு

சிலுவை மொழிகள் 4

இயேசு, “ஏலி, ஏலி லெமா சபக்தானி?” அதாவது, “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் கத்தினார் ( மத்தேயு 27 :45 )

இயேசு சிலுவையில் மொழிந்த நான்காவது வார்த்தை இது. வலியின் வார்த்தை ! நிராகரிப்பின் வார்த்தை ! வலிகளிலேயே மிகப்பெரிய வலி நிராகரிக்கப்படும் வலி தான். இயேசு இப்போது நிராகரிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்.

மக்களின் பாவங்களைப் போக்கவேண்டுமெனும் மாபெரும் இலட்சியத்தின் வருகை அவர். விண்ணின் மகிமையைத் துறந்து, மண்ணின் புழுதியில் புரண்டு, வேர்வைக் கரையில் நடந்து, இறையரசை அறித்துத் திரிந்தவர் இயேசு. கடைசியில் மதவாதிகளாலும், அதிகாரிகளாலும், ஆளும் வர்க்கத்தாலும், ஏன் கூட இருந்த நண்பராலுமே நிராகரிக்கப்பட்டார்.

நிராகரிப்பின் வலி அவருக்குப் புதியதல்ல. இப்போதைய இயேசுவின் கதறல் மக்கள் அவரை நிராகரித்ததால் வந்ததல்ல. அவரது தந்தையாம் கடவுள் அவரை நிராகரித்ததால்.

நாம் நினைப்பது போல ஆணியின் கூர்மை கைகளைத் துளைத்ததாலோ, சாட்டையின் நுனி முதுகைக் கிழித்ததாலோ எழுந்த வலியல்ல இது ! அத்தகைய உடல்வலியை இயேசுவின் மன வலிமை தாங்கி விடும். ஆனால் இப்போதைய கதறல் ஒலி உடல் வலி அல்ல ! இதயத்தின் வலி !

உலகின் பாவங்களைப் போக்கவேண்டுமெனில் மானிடரின் பாவங்களையெல்லாம் தோளில் சுமக்க வேண்டும். மானிடருடைய பாவங்களைச் சுமந்து ஒரு பாவியாகவே உருமாறி, பாவியின் கோலம் கொண்டு சிலுவையில் மரிக்கிறார் இயேசு. “அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்” என ஏசாயா 53:5 அதை தீர்க்க தரிசனமாய் சொன்னது.

இருளும் ஒளியும் ஒரே இருக்கையில் அமரமுடியாது. பாவமும் புனிதமும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. இயேசு புனிதத்தின் வடிவமாய் இருந்தபோது எப்போதும் தந்தையின் அருகாமையில் இருந்தார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் செபத்தில் தந்தையோடு தனித்திருந்தார்.

இப்போதோ அவர் புனிதத்தின் நிலையை இழந்து பாவத்தின் சுமையை ஏற்றிருக்கிறார். இந்தக் கணத்திலிருந்து அவரால் தந்தையின் அருகில் இருக்க முடியாது. புனிதம் எனும் தந்தையும், பாவம் எனும் மகனும் இப்போது எதிரெதிர் துருவங்கள் போல மாறிப் போகின்றனர்.

பாவம் இறைவனிடமிருந்து நம்மைப் பிரிக்கும் என்பதை “உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன” (ஏசாயா 59:2) எனும் வசனம் விளக்குகிறது.

இந்த வலியை முன்கூட்டியே உணர்ந்த இயேசு தான், “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும் ( மத் 26:39) ” என தந்தையிடம் வேண்டினார்.

எப்போதும் ‘அப்பா’ என கடவுளை அழைத்து வந்த இயேசு இப்போது, ‘இறைவா’ என அழைக்கிறார். பாவம், தந்தை மகன் உறவை உடைக்கிறது. இப்போது பாவிக்கும் இறைவனுக்கும் இடையேயான உறவு நிலையே இருவருக்கும் இடையே இருக்கிறது.

உலகம் துவங்கும் முன்னமே தந்தையோடு இணைந்திருந்தவர் இயேசு. விண்ணின் மகிமை எப்படிப்பட்டது என்பது அவருக்குத் தெரியும். அதனால் தான் சோதனைகளை அவர் எளிதாய்த் தாண்டினார். எந்த சோதனை தரும் மகிழ்ச்சியையும் விடப்பெரியது விண்ணக வாழ்க்கை என்பது அவருக்கு மிகத்தெளிவாய் தெரியும்.

“என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்” ( சங் 22 ) என்பது அந்தக் கால பிரபலமான ஒரு பாடலின் துவக்கம். இயேசு அந்தப் பாடலின் வரியைத் துவங்கிவைத்தார். அதைக் கேட்டவர்களின் மனதில் அந்தப் பாடல் முழுமையாய் ஒலிபரப்பாகியிருக்க வேண்டும். “உண்மையாகவே இவர் கடவுளுடைய மகன்” என சிலர் நம்பிக்கை கொள்ள அதுவும் காரணமாய் இருந்திருக்கலாம்.

அந்தப் பாடல் இயேசுவுக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தாவீது மன்னனால் எழுதப்பட்டது. மெசியா பற்றிய பாடல். இயேசுவைப் பற்றிய பாடல். “மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்; மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன். என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்… ” என இயேசுவின் சிலுவை நிலையை பாடல் விவரிக்கிறது.

சிலுவை மரணம் வழக்கத்தில் இல்லாத அந்த காலத்திலேயே, ‘என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள்’ என இந்த சங்கீதம் தீர்க்கத்தரிசனமாய் பேசுகிறது. “என் ஆடைகளைத் தங்களிடையே
பங்கிட்டுக் கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்” என்றெல்லாம் சிலுவைக் காட்சியை பதிவு செய்திருக்கிறது.

இயேசு அந்த பாடலின் முதல் வரியை வலியின் ஒலியாய் ஒலிக்கச் செய்து, தான் மெசியா என்பதை குறிப்பால் உணர்த்தினார். நமது பாவங்களை அவர் சுமந்து தீர்த்தார். உயிர்ப்பில் நம்பிக்கை கொண்டு அவரோடு சரணடைவோருக்கு, அவரது அரசில் நிச்சயம் இடம் உண்டு.

இயேசு

சிலுவை மொழிகள்  3

இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார்  ( யோவான் 19 : 26 & 27 )

உலகின் மிகப்பெரிய அன்பு என்பது இயேசு சிலுவையில் காட்டியது தான். தனது நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட மேலான அன்பு எதுவும் இல்லை என்றவர் அதை செயல்படுத்திக் காட்டினார்.

“தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்”. தந்தையின் அந்த விருப்பத்தை மனதில் கொண்டு இயேசு சிலுவையில் கரங்களை விரித்து மீட்பின் வரத்தைக் கொடுத்தார்.

இயேசு சிலுவையின் உச்சியிலிருந்து உற்றுப் பார்த்தபோது அவரது கண்களுக்குத் தெரிந்தார் அன்னை மரியாள். “உனது உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்ற தீர்க்கத் தரிசனம் அவரது காதுகளில் ஒலித்திருக்க வேண்டும். ஒன்றல்ல, ஓராயிரம் வாள்கள் பாய்ந்த வலியில் இருந்த அன்னையை இயேசு தேற்றுகிறார்.

தான் தேற்றப்பட வேண்டிய, ஆனால் தன்னால் தேற்றப்படாத ஒருவரும் இருக்கக் கூடாது என்பதே இயேசுவின் விருப்பம். இயேசு, “அம்மா இனிமேல் இவரே உன் மகன்” என சிலுவை அடியில் நின்ற தனது அன்புச் சீடரிடம் மரியாளை ஒப்படைக்கிறார். பிறர் மீது கொண்ட கரிசனை இயேசுவுக்கு சிலுவை உச்சியிலும் தீரவில்லை.

வலியோடு இருப்பவருக்கு ஆறுதல் சொல்வது தான் உலக வழக்கம், வலியோடு இருப்பவரே ஆறுதல் சொல்வது தான் இறைமகன் இயேசுவின் விளக்கம்.
சிலுவை வரைத் தன்னை பிந்தொடர்ந்து வந்த ஒரே சீடர் யோவானிடம் அன்னையை ஒப்படைக்கிறார். அவரும் உடனடியாக அன்னையைத் தனது வீட்டில் அழைத்துச் செல்கிறார்.

தொழுவத்தில் மெல்லிய வெளிச்சத்தில் அன்னையின் முகத்தை முதல் முதலாகப் பார்த்த இயேசு, பன்னிரண்டு வயதில் பரிதவிக்கும் அன்னையின் தவிப்பைப் பார்த்த இயேசு, சிலுவையின் அடியில் கடைசியாய் அன்னையின் முகத்தையும் பார்க்கிறார்.

வியாகுல அன்னை என அன்னை மரியாளுக்கு ஒரு பெயர் உண்டு. இத்தனை துயரத்தையும், வலியையும் தாங்கி சிலுவை அடியில் நின்று கொண்டிருப்பது அதன் ஒரு உதாரணம் என்று சொல்லலாம். ஒரு சின்ன கைக்குட்டையால் மகனின் இரத்தத்தைத் துடைக்க அனுமதியில்லை. ஒரு சொட்டு தண்ணீரை மகனின் உதடுகளில் வைக்க அனுமதியில்லை. மகனின் துயரத்தின் ஒரு அணுவளவைக் குறைக்கவும் அவருக்கு அனுமதியில்லை. மகன் கொஞ்சம் கொஞ்சமாய் இறப்பதைப் பார்க்கும் அனுமதி மட்டுமே உண்டு.

எல்லோரும் ஓடி விட்டார்கள். அன்னை ஓடிவிட விரும்பவில்லை. சிலுவை அடியில் நின்று கொண்டிருக்கிறார். வலியிலேயே அதிக வலி நமது பிரியத்துக்குரியவர்களின் மரணம் தான். அன்னை மரி அதனால் தான் வியாகுல அன்னை என அழைக்கப்படுகிறார்.

“அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என கானாவூர் திருமணத்தில் மக்களிடம் சொன்ன அன்னை மரியாள், இப்போது இயேசுவை வழியனுப்பி வைக்கிறார்.

“என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்? விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்” என்ற இயேசு தனது அன்னையை தவிக்க விடவில்லை. விண்ணகத்திலுள்ள தந்தையின் திருவுளத்தை அன்னை நிறைவேற்றியிருந்தார். இயேசுவை பூமிக்கு அறிமுகம் செய்திருந்தார்.

மரியாளுக்கு வேறு பிள்ளைகள் இல்லை என்றும் உண்டு என்றும் நிகழ்ந்த வாதங்கள் கிறிஸ்தவத்தை இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்திருக்கின்றன. எது எப்படியென்பது இறைவனுக்கே தெரியும். இயேசுவின் கரிசனை அன்னை மரியாளை ஒரு “ஆன்மீக மகனிடம்” ஒப்புக் கொடுக்க வேண்டும் என்பதாகவே இருந்தது என்பதே கவனிக்க வேண்டிய விஷயம். எனவே தான் தனது அன்பு சீடரிடம் அவரை ஒப்புக் கொடுக்கிறார்.

தம் மீது அன்பு கொண்ட சீடருக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம், இயேசுவின் அன்னையை தனது அன்னையாக ஏற்றுக் கொள்வது. அன்னை இறக்கும் வரை யோவான் எருசலேமை விட்டு வெளியே செல்லவில்லை என்கிறது மரபுச் செய்தி.

இயேசு, தனது தாய் மீது கொண்ட கரிசனை “தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றும்” ஒவ்வொருவர் மேலும் இருக்கும். இந்த நிகழ்வு இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதன் தேவையையும், அப்போது கிடைக்கின்ற மீட்பின் நிச்சயத்தையும் உணர்த்துகிறது.

உலகத் தாயை உதாசீனம் செய்வது எவ்வளவு பெரிய பாவம் என்பதை விளக்குகிறது.சிலுவை அடியில் நின்ற கூட்டத்தினரில் இயேசு தனது தாய்க்கு நிறைவேற்ற வேண்டிய கடமையை துல்லியமாக நிறைவேற்றுகிறார்.

இந்த சிந்தனைகளை மனதில் கொள்வோம்

இயேசு

சிலுவை மொழிகள் – 2 ( தினத்தந்தி)

சிலுவை மொழிகள் – 2

நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்

( லூக்கா 23 : 43 )

இயேசுவைச் சிலுவைச் சாவுக்குத் தீர்ப்பளித்த அரசு, அவரை அடித்து, துன்புறுத்தி, அவமானப்படுத்தி, சிலுவை சுமக்க வைத்து கொல்கொதா மலையில் சிலுவையில் அறைந்தது. அத்துடன் நிற்கவில்லை. அவருடைய வலப்புறம் ஒருவனும், இடப்புறம் இன்னொருவனுமாக இரண்டு கள்வர்களையும் சிலுவையில் அறைந்தது.

“யூதர்களின் அரசன்” என நக்கல் தொனியுடன் ஒரு வாசகத்தையும் இயேசுவின் சிலுவையின் உச்சியில் வைத்தார்கள். அங்கே அவர் அருகிலிருந்த ஒரு கள்ளனிடம் சொன்னதே இந்த வாக்கியம்.

  1. கேட்கத் தயாராக இருக்கிறார்.

இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்த அந்த வலி மிகுந்த தருணத்திலும், அருகில் இருந்தவர்களின் உரையாடல்களை செவிகொடுத்துக் கேட்கிறார்.

சிலுவையில் உச்சியில் தொங்கிய இயேசுவைப் போன்ற வலியோ, துயரமோ நம்மைச் சந்திப்பதில்லை. அப்படியே சந்தித்தாலும், பிறருக்காய் காதுகளைத் திறந்தே வைத்திருங்கள், என்பதே இயேசுவின் செயல் சொல்லும் செய்தி.

  1. அவமானங்கள் மன்னிக்கப்படும்

இயேசுவின் ஒரு புறம் இருந்த கள்வன் இயேசுவை நோக்கி பேசினான். அவனுடைய குரலில் கேலியும், பழியும் இருந்தது.

“நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று”

இயேசு எரிச்சலடையவில்லை. கோபமடையவில்லை. மௌனமாய் இருந்தார். இயேசுவின் மௌனம் அவருடைய பேரன்பின் வெளிப்பாடு. மரணத்தின் நுனியிலும், அவமானங்களைத் தாங்கிக் கொள்ளும் மனமும், பலமும் வேண்டும் என்பதை இயேசு சிலுவையில் நிகழ்த்திக் காட்டினார்.

  1. சுய பரிசோதனை வாழ்வளிக்கும்

ம‌ற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா நாம் தண்டிக்கப்படுவது முறையே. இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!” என்று பதிலுரைத்தான்.

இருவருமே திருடர்கள் தான். இருவருமே சிலுவைச் சாவுக்கு தகுதியானவர்கள் தான். ஒருவனுக்கு அது தெரிந்திருந்தது. இன்னொருவனுக்கு அது தெரிந்திருக்கவில்லை. அவ்வளவு தான் வித்தியாசம்.

தன்னை பரிசோதனை செய்ததால் கள்ளன் கூட “நல்ல கள்ளன்” எனும் அடைமொழியைப் பெறுகிறான்.

  1. இயேசுவின் தூய்மையை உணர்தல்

“இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!” என ஒரு கள்ளன் மற்ற கள்ளனைப் பார்த்துச் சொல்கிறான்.  “இயேசு குற்றவாளி” என மறைநூலைக் கரைத்துக் குடித்தவர்கள் தீர்ப்பிட்டார்கள்.  இயேசுவை கூட இருந்தவனே காட்டிக் கொடுத்து காசு வாங்கினான்.

ஆனால் இயேசுவுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஒரு கள்ளன் இயேசுவை குற்றமற்றவர் என சான்று பகர்கிறான். இயேசுவின் ராஜ்யத்தில் பாவிகளும், நிராகரிக்கப்பட்டவர்களும் நுழைவார்கள் என்பதன் இன்னொரு உறுதிப் படுத்துதல் தான் அது எனலாம்.

  1. கேளுங்கள், தரப்படும்.

“இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்றான் அந்த க‌ள்ளன்.

தனது தவறுகள் பாவங்கள் போன்றவற்றைப் புரிந்து கொள்வதும். தான் செய்து கொண்டிருக்கும் பாவத்தின் முடிவு நரகம் மட்டுமே என்பதைப் புரிவதும் மீட்பின் முதல் படி.  இரண்டாவதாக, இயேசுவின் மீது வைக்கின்ற நம்பிக்கை.  மூன்றாவதாக,. இறைவனிடம் தனது மீட்புக்காய் மன்றாடுவது.

ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்” என்னும் வேண்டுதலில் தான் கள்ளனுக்கு மீட்பு கிடைக்கிறது.

  1. தனிப்பட்ட மீட்பு

இயேசு அவனிடம், “நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்” என்றார்.

முதலாவது சிலுவை வார்த்தையான, “தந்தையே இவர்களை மன்னியும்” எனும் வார்த்தையில் ஒட்டு மொத்தமாக பொதுவான ஒரு மன்னிப்பை வழங்கிய இயேசு, தனது இரண்டாவது வார்த்தையின் மூலம் மீட்பு என்பது தனிநபருக்குரியது. ஒவ்வொருவரும் தனித்தனியே மீட்பின் பாதையில் வரவேண்டும் என்பதைப் புரிய வைக்கிறார்.

 “கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா?” எனும் கள்ளனின் வார்த்தைகளால் அவனுக்குள் பாவத்தைக் குறித்த அச்சமும், மீட்பின் தாகமும் இருப்பது புரிகிறது. கடவுள் மீது அவன் கொண்ட அச்சமே அவனை மீட்பை நோக்கி வழிநடத்தியது.

  1. மீட்பு உடனடிப் பரிசு

இயேசுவை நோக்கிய விண்ணப்பம் வைக்கிறான் நல்ல கள்ளன். இயேசு, “யோசித்து சொல்றேன்” என்று சொல்லவில்லை.

“இன்றே…” என உடனடி மீட்பை அவருக்கு வழங்குகிறார். அத்துடன் நிற்கவில்லை. “என்னுடன்” என சொல்லி அந்தத் திருடனை திக்குமுக்காட வைக்கிறார் இயேசு.

பேரின்ப வீட்டில் இருப்பது மிகப்பெரிய பாக்கியம் என்றால், அங்கே இயேசுவோடு இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம் !

அந்தக் கள்ளனைப் பொறுத்தவரை இயேசுவை அவன் சந்தித்த முதலாவது நிகழ்வு அது. முதல் நிகழ்விலேயே அவன் தனது பாவங்களை உணர்ந்து, இயேசுவிடம் மீட்புக்காக விண்ணப்பிக்கிறான்.

“அறிவிலியே இன்றிரவே உன் உயிரை எடுக்கப் போகிறார்கள்” என்று இயேசு சொன்னது போல, நமது உயிர் எப்போது பிரியும் என்பதை நாம் அறியோம். எனவே இறைவனிடம் கேட்பதில் தாமதம் கூடாது.

இயேசு