குறிச்சொற்கள் » இந்திய செய்திகள்

திருப்பத்தூர் அருகே கிடைத்தது, சோழர்கால வீரமங்கை நடுகல்லா?

ஊருக்கு வெளியே, கிறுக்கல்கள் நிறைந்த அல்லது சித்திரங்கள் வரையப்பட்ட சில கற்களைப் பார்த்திருப்பீர்கள். சில ஊர்களில் அக்கல்லுக்குப் பூப்போட்டு, சூடம் ஏற்றி வணங்குவார்கள். பெரும்பாலானோருக்கு, அந்தக் கல் எப்படி அங்கு வந்தது, அதை ஏன் வணங்குகிறார்கள் என்பது தெரியாது. உண்மையில், அந்தக் கல்லுக்குப் பின்னால் பெரும் வரலாறு புதைந்திருக்கிறது. அது சோக வரலாறாகவோ, இல்லை வீர வரலாறாகவோ இருக்கலாம். அம்மாதிரியான கற்களை ‘நடுகற்கள்’ என்று குறிப்பிடுகிறது சரித்திரம்.

இயற்கை வழிபாட்டின் அடுத்த கட்டம், நடுகல் வழிபாடுதான். இறந்த மூதாதையர்களின் நினைவாகவும், போரில் உயிர்நீத்த வீரர்களின் தீரத்தை வெளிப்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டதே நடுகற்கள். தமிழ்நாட்டில் பல இடங்களில் பண்டைய கால நடுகற்கள் கிடைத்து வருகின்றன. குறிப்பாக, வட தமிழகத்தில் அதிக அளவில் நடுகற்கள் கிடைத்து வருகின்றன.

கடந்தவாரம், வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே ஜல்லியூர் என்னும் கிராமத்தில் தனியார் விவசாய நிலமொன்றில், திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர்களான பிரபு, சிவசந்திரக்குமார், தொல்லியல் ஆர்வலரான முத்தமிழ் ஆகியோர் ஒரு நடுகல்லை கண்டெடுத்துள்ளனர். அந்தக் கல் ஒரு பெண்ணுக்காக நடப்பட்டது என்கிறார்கள் அவர்கள்.

இதுபற்றி பேராசிரியர் பிரபுவிடம் பேசினோம்.

தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள நடுகல், பெண்ணுக்கான உடல் அமைப்புடன் காணப்படுகிறது. ஒரு கையில் வில்லும், மறு கையில் அம்பும் இருக்கிறது. ஐந்தரை அடி நீளமும், நான்கு அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது.

இந்தக் கல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில், புதையல் இருப்பதாக வதந்தி பரவியுள்ளது. சிலர் இப்பகுதியைத் தோண்டி புதையல் தேடியும் உள்ளார்கள். இந்தக் கல் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகில் பட்டாளத்தம்மன் கோயில் ஒன்று உள்ளது. பட்டாளம் என்றால் படைக்கலம். ஒருவேளை படைக்கலத்தில் வீரப்போர் புரிந்து உயிர் நீத்த பெண்ணுக்காக இந்தக் நடுகல் நிறுவப்பட்டிருக்கலாம். இந்த நடுகல்லின் அமைப்பை வைத்துப் பார்க்கும்போது, 12 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த, பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று கருதுகிறோம்” என்கிறார் பேராசிரியர் சுகவன் முருகன்அவர்.

ஆனால், இந்த நடுகல், பெண்ணுக்காக வைக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்கிறார் வரலாற்று ஆய்வாளர் சுகவன் முருகன்.

“இதுவரை எந்தப் பகுதியிலும் பெண்களுக்கான நடுகற்கள் கண்டெடுக்கப்படவில்லை. உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்த காலத்தில், கணவனின் உடலோடு சேர்த்து தீக்குளித்து இறக்கும் பெண்ணுக்கு நடுகற்கள் ஊன்றப்படுவதுண்டு. அந்தக் கற்களுக்கு சதிக்கற்கள் என்று பெயர். ஆனால், இப்போது கிடைத்திருப்பது சதிக்கல்லும் கிடையாது. இது யாரோ ஓர் ஆணுக்காக நிறுவப்பட்ட நடுகல்தான். 13 அல்லது 14 -ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. அப்போது இந்தப் பகுதியை அதியமான் வம்சத்தைச் சேர்ந்த சிற்றரசன் ஆட்சி செய்துள்ளான்.


இந்த நடுகல், இந்தப் பகுதியைச் சேர்ந்த ஏதாவது ஒரு சீறூர் தலைவனின் நடுகல்லாகவோ, படைத்தலைவனின் நடுகல்லாகவோ இருக்கலாம். இல்லாதபட்சத்தில் மாடு கவர்ந்து செல்ல வந்து உயிர்நீத்தவருக்கான நடுகல்லாகவும் இருக்கலாம். எப்படியாயினும் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இந்தக் கல்லுக்கு அருகே ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது. அதை எடுத்துச் சென்றுள்ளனர். அது வந்த பின்னர் நமக்குப் பல்வேறு தகவல்கள் கிடைக்கும்…” என்றார் சுகவன முருகன்.

நன்றி : விகடன்.

இரா.செந்தில் குமார்

இந்திய செய்திகள்

இலங்கையில் உள்ள படகுகளை மீட்க மூன்று நாள் காத்திருப்பு!

மூன்று நாள்கள் காத்திருப்புக்கு பின் இலங்கையில் உள்ள படகுகளை மீட்க நாகை மாவட்ட மீனவர்கள் புறப்பட்டு சென்றனர்.
இலங்கை கடற்படை எல்லை தாண்டும் தமிழக மீனவர்களின் படகுகளை தொடர்ந்து சிறை பிடித்து வருகிறது. இந்நிலையில் மீனவர்களின் போராட்டத்தின் காரணமாக மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையினை தொடர்ந்து முதல் கட்டமாக 42 படகுகளை விடுவிக்க இலங்கை அரசு சம்மதித்தது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட படகுகளில் 10-க்கும் மேற்பட்ட படகுகள் மிக பழுதடைந்த நிலையில் மீட்டு வர முடியாத நிலையில் உள்ளன. எஞ்சிய 32 படகுகளை மீட்டு வர ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை மாவட்ட மீனவர்கள் பல கட்டங்களாக இலங்கை சென்று வருகின்றனர்.

இதுவரை 3 குழுக்கள் படகுகளை மீட்க இலங்கை சென்ற நிலையில் 4 வது குழுவாக நாகை மாவட்டத்தை சேர்ந்ந மீனவர்களுக்கு கடந்த 5-ம் தேதி இலங்கை செல்ல தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து நாகையில் இருந்து மண்டபத்திற்கு வந்த மீனவர்களை இலங்கைக்கு அழைத்து செல்ல இந்திய கடலோர காவல் படையினர் அனுமதி வழங்கவில்லை. இதனால் கடந்த 3 நாட்களாக மண்டபம் கடற்கரையில் நாகை மாவட்ட மீனவர்கள் 40 பேர் படகுகளுடன் காத்து கிடந்தனர்.

இந்நிலையில் இன்று காலை நாகை பகுதி மீனவர்களை படகுகளை மீட்டு வருவதற்காக இந்திய கடலோர காவல் படையினர் மண்டபத்தில் இருந்து அழைத்து சென்றனர். இவர்கள் இலங்கையில் உள்ள காரைநகருக்கு சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட 6 படகுகளை மீட்ட பின்னர் இரு நாட்களில் ஊர் திரும்புவர் என தெரிகிறது.

இந்திய செய்திகள்