குறிச்சொற்கள் » அனுபவம்

கொஞ்ச நாட்களும் சில வரிகளும்

*
இன்னொரு முறை ஹைதராபாத் போவது என்பது எதிர்பாராமல் சாத்தியப்பட்ட ஒன்று. PyCon இந்தியா பதிவு தொடங்கியதும் மநுவிடம் விடுமுறை கிடைக்குமா போவதற்கு என்றேன். அவர் அதற்கென்ன கொஞ்சம் பைசாவும் வாங்கிக் கொள் என்றார். உடனே அலுவலகத்தில் வேறு எவருக்கேனும் விருப்பமிருந்தாலும் போய் வரலாம் என அறிவித்தார். அன்றே பதினோரு பேருக்கு மேல் தயாராக இருந்தார்கள். கொஞ்சம் பைசா என்பதை மநு எவருக்கும் எவ்வளவு என்று சொல்லவில்லை.

எனக்கு பொது நுழைவுச் சீட்டு வாங்கியதும், என்ஃபா என்கிற பெண் நீயும் மாணவர்களுக்கான சீட்டு வாங்கவில்லையா என்றாள். எதற்கும் உறுதிப்படுத்தலாம் என்று அமைப்பினருக்கு மின்னஞ்சல் அனுப்பி உறுதி செய்துவிட்டு நான் எடுத்ததை ரத்து செய்து மாணவர் சீட்டு வாங்கினேன். அடையாள அட்டையை காட்டினால் போதும். அவளுக்கும் சொல்லி எப்படி என்று உதவினேன். ஒரு ஐந்நூறு ரூபாய் மிச்சம்.

அலுவலகத்தில் அனைவரும், என்ஃபா உட்பட, விமானத்தில் முதல் தினம் சென்று இறங்குவதும் ஓயோ மூலம் அறையெடுத்து தங்குவதும் என்று திட்டமிட்டார்கள். எனக்கு இதெல்லாம் சரிப்படாது என்று தெரிந்துவிட்டது. இன்னும் ஹைதராபாத்தில் பாரதி வேலையை விட்டிருக்கவில்லை. எனவே அவனோடே ஒருவாரம் முன்னால் சென்று தங்குவது என்று திட்டம். எப்போதும் போல, வேலையும் செய்து தேவைக்கு மட்டும் விடுமுறை எடுப்பது. எப்படியோ அதே வாரத்தில் பைக்கானுக்கு எடுத்த விடுமுறை சேர்க்காமல் எனக்கு இரண்டு நாள் கிடைத்தது. சென்று இறங்கியது சனிக்கிழமை என்பதால் ஓய்வெடுத்தேன்.

அடுத்த தினம் (30 Sept) பாரதியையும் அழைத்துக் கொண்டு நான் கோவிந்துடன் போனேன். வெகு நாட்களுக்குப் பிறகு மனம் நொந்து பாண்டிச்சேரி போயிருந்தவர் திரும்பி வந்து சில நடைகள் ஒருக்கியிருந்தார். அன்று பைகா கல்லறைகள் சுற்றியும் உள்ளேயும் நடை. தொடங்கியது தெரு முனையில் இருக்கும் சிறு கடையிலிருந்து. அங்கே லுக்மி என்கிற உணவு. கோவிந்த் சொன்னது போல, சமோசாவுக்கும் ரொட்டிக்கும் பிறந்தது, உருளைக்கிழங்கு குருமாவுடன் பரிமாறினார்கள். எங்களுடன் சென்னையிலிருந்து வந்த பாரதியின் தோழி கீதாஞ்சலியும் அவருடைய தோழி பிரியங்காவும் சேர்ந்து கொண்டார்கள். அன்று ஒரு வார சுற்றுதல் முடிந்து இரவே சென்னை திரும்பவிருந்தார்கள்.

எப்படியோ கீதாஞ்சலி உடனே நட்பாகிவிட்டார். எனக்கும் அன்று காலை எப்போதும்போல உணர்வுக் குழப்பத்துடன் தொடங்கியும் நான் அவன் நினைப்பு வந்த காரணமோ என்னமோ இயல்பாகிவிட்டேன். ஒருவேளை என் பலசமயம் பொருளற்ற கேலிகளை கீதாஞ்சலி பொருத்துக் கொண்டதாலும் இருக்கலாம். அவர்கள் அங்கும் இங்கும் புகைப்படம் எடுத்துத் தள்ளினார்கள். அந்த கல்லறைகளின் பொருப்பாளர் ஏனோ அவர்களை உட்கார வைத்துவிட்டு, கேமராவை வாங்கி புகைப்படக்காரராக மாறிவிட்டிருந்தார். என்னையும் பாரதியையும் அவர் திரும்பிக்கூட பார்க்கவில்லை. அவன் தலையெழுத்தோ அவர்களின் பைகளை சுமந்து நிற்கும் தென்னை மரம் போலானது.

அங்கிருந்து பயணப்பட்டு நயாப் போய் சாப்பிடுவது. அவர்களிடமும் பாரதியிடமும் அவனைப் பற்றி பேசியபடியே வந்தேன். ஓட்டலில் ஆகர்ஷிகா வந்து சேர்ந்தாள். வெகு நாட்களுக்குப் பிறகு வாய்ப்பு கிடைத்ததால் கல்லூரியிலிருந்து விடுதலையாகி வந்திருந்தாள். ஆகர்ஷிகாவும் பாரதியும் பேசிக் கொண்டிருக்க மற்ற இருவருடன் நான் செளமஹல்லா அரண்மனை பார்க்க நடந்தேன்.

போகும் வழியில் அவனுக்கு ஒரு பரிசு வாங்க நினைத்ததை சொன்னதும் இருவரும் முத்துக்களால் ஆன எதையாவது வாங்கிக் கொடு என்றார்கள். எனக்கும் அதுவே பொருத்தமானது என்று தோன்றவும் சரி என்றேன். என்னை அவர்கள் முதல் நாள் பாடுபடுத்தியிருந்த கடைக்கே அழைத்துச் சென்று வாங்க உதவினார்கள். அந்த கடைக்காரர் அவர்களை பார்த்ததுமே அலறி தன் சொல்லும் விலையை நியாயமாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார்.

செளமஹல்லா சுற்றிப் பார்க்கும்போதும் அவ்வப்போது அவனைப் பற்றியே பேச்சு. அப்படியே வேறு வெட்டி அரட்டைகள். கொஞ்சம் பிரியங்காவை என் இடையில்லா பேச்சு எரிச்சலாக்கியதோ என்று தோன்றியது. அப்படியே அதற்கு மன்னிப்பு கேட்டுவிடலாம் என்று நினைத்து மறந்து பின்னர் அவர்கள் போன பிறகே கீதாஞ்சலியிடம் சொல்லச் சொன்னேன்.

அங்கிருந்து வெளியே வரும்போது பாரதியும் ஆகர்ஷிகாவும் காத்திருக்க நாங்கள் ஜும்மா மசூதிக்கு சென்று அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். எப்படி கேளரத்துக்கு உள்ளே இலக்கியம் போன்றவற்றில் உஸ்தாதாக இருக்கும் இளைஞர்கள் குறைவு என்றும் அதே எப்படி வெளியே கொள்ளை எண்ணிக்கை என்றும். எனக்கு தெரிந்தவரை வெளியே இருப்பவர்கள் இரண்டாம் தலைமுறையாகவே இருப்பார்கள் என்றேன். முதல் தலைமுறையின் கனவு முழுக்க வெளியே எங்காவது போய் சம்பாதிப்பது தவிர வேறில்லை. அவர்களே கேளரத்துக்குள் மிகுதி என்றேன். அவர்கள் யோசித்து ஆமாம் என்றார்கள்.

அன்றைக்கு அப்படியே பேசிக் கொண்டிருந்தவிட்டு கிளம்பினோம்.

*
காந்தி ஜெயந்தி அன்று கோபால் மத நல்லிணக்க நடை ஒன்றை பிரிட்டிஷ் ஹைகமிஷனோடு இணைந்து ஏற்பாடு செய்திருந்தார். அதற்கு துணை ஹைகமிஷனர் ஆண்ட்ரூ வருவதாக இருந்தது. என்னால் கொஞ்சம் தாமதமாகிவிடும் போலிருந்து சமாளித்தேன். ஆனால் கிளம்பும் நேரம் முன்பு வரை தூங்கிக் கொண்டிருந்தது என்னவோ கோவிந்த்! ஒரு ஹிப்பியைப் போல வாழும் இந்த மனிதரை நினைத்து ஒரு அச்சம் அடி வயிற்றிலிருந்து எழுகிறது. எப்படி அவரால் இப்படி ஒரு வாழ்வை எந்த ஒட்டுதலும் இல்லாமல் வாழ முடிகிறது. எந்த சட்டகத்திலும் அடைபடாத வாழ்வு.

ஒரு சிவன் கோயிலில் தொடங்கி தர்காக்கள், கோயில்கள் என கடந்து சார்மினார் அருகே ஜும்மா மசூதியில் முடிந்தது. இடையில் ஒரு பூங்காவில் உட்கார்ந்து உரையாடியிருந்தோம். ஆண்ட்ரூ இருந்தவரை காவலர்கள் துணைக்கு வந்தார்கள். அவரும் பாதி தூரம் வரை நடந்திருந்தார். மொத்தம் மூன்று மணிநேரம். நாங்கள் காலை உணவும் எடுத்திருக்கவில்லை. கோவிந்த் பல்லே விலக்கவில்லை. என்ன செய்ய. எனக்கு கொஞ்சமும் ஆர்வமே ஏற்படுத்தவில்லை நடை. ஷபாப், சாரா, மற்றும் நண்பர்கள் கேரளத்தவர். ஆகர்ஷிகா படிக்கும் EFLUவில் முதலாமாண்டு படிப்பவர்கள். இந்த நடையைப் பற்றி சொல்லி அனைவரையும் அழைத்து வந்தது சாரா. அவனை ஏதாவது கேலி செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று தோன்றியது. அவனிடமே சொல்லி பின்னர் வாங்கிக் கட்டிக் கொள்ளவும் செய்தேன்.

இரண்டு இரானி தேனீர் நிம்ராவில் ஊதி ஊதிக் குடித்துவிட்டு அவரசமாக வண்டி பதிந்தேன். இன்று மந்தன் சம்வாதம் நடக்கிறது போவோம் என்றார். ஆனால் பார்த்தால் நுழைவுக்கு பதிவு முடிந்திருந்தது. போகும் வழியில் ஆட்டோவுக்கு பத்து ரூபாயில் சண்டை துவங்கி வாடா போகலாம் என்று ஆட்டோக்காரர் கத்தும்போதே நடக்கத் கோவிந்த் நடக்கத் துவங்க, எங்கோடு வந்த ஒருவரை அவர் பிடித்துக் கொண்டார். எப்படியோ சமாளித்து நாங்கள் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம்.

*
பிரபாத் பட்நாயக்கின் உரை ஒன்றை கேட்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. நிறைய குறிப்புகளும் எடுத்து வைத்திருக்கிறேன். இன்னொரு முறை அதை சரி பார்த்ததும் இன்னும் கொஞ்சம் வாசிக்க வேண்டும். ஆனால் TISS பல்கலை சூழலின் மீது எனக்கு சில விமர்சனங்கள்.

*
அந்த வார இறுதியில் பைகான். ஆனால் வெள்ளிக் கிழமையே ஒரு பட்டறை. பாண்டாஸின் மேம்படுத்துனர் மார்க் கார்சியா நடத்தியது. ஆனால் சொதப்பல். எதிர்பாராமல் என் அலுவலக கும்பலில் மூவர் வந்திருந்தார்கள். அவர்களுடன் மதியச் சாப்பாட்டுக்கு கோவிந்தின் பரிந்துரையால் பாரடைஸ், ஹைடெக் சிட்டிக்கு போனேன். கொஞ்சம் அல்ல, நிறையவே விலை. மேலும் எந்த ஹைதராபாத் ஓட்டலிலும் மாடியில் ஏறவே கூடாது. கீழிருப்பதை விடவும் மேலே அதே உணவின் விலை அதிகம். அந்த தவறை செய்தோம்.

அங்கிருந்து உடல் சோர்வுடன் அறைக்குத் திரும்பி ஓய்வெடுத்தேன்.

இரவில் இதிஹாஸ் முதல் நாளும் பிறகும் எப்போதெல்லாம் அவர் உணவு வாங்க நேர்ந்ததோ என்னிடம் பணம் மட்டும் வாங்கவே மாட்டேன் என்றார். அன்றும் அப்படியே. அவரிடம் சொல்லிப் பார்த்து சலித்துவிட்டது. பாரதி அவருக்கு மேற்கத்திய மரபில் பிடித்தம் எப்படி என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். போன முறை போலில்லாமல் இந்த முறை அவரோடு பேச நிறைய நேரம் கிடைத்தது. ஆனால் எனக்குத்தான் அவ்விஷயம் சூன்யம் என்பதால் பொதுவான விஷயங்களையே அதிகம் பேசிக் கொண்டிருந்தோம். அதே நேரம் பாரதியை ஓட்டுவதில் சேர்ந்துகொண்டோம். அவருக்கு பூச்சி போன்ற சிறிய ஜந்துக்களில் அத்தனை பயம். ஒரு நாள் நான் உள்ளே போகும்போது கதறிக் கொண்டிருந்தார். என் எண் இல்லாமல் அப்போதே பாரதியை அழைத்து வாங்க நினைத்தாராம். ஒரு பல்லி அவரது அறைக்குள் புகுந்து கொண்டிருக்கிறது! அன்றிருந்து அவரை அவ்வப்போது ஓட்டிக் கொண்டிருப்பேன்.

*
இப்படியான ஒரு நிகழ்வில் கலந்துகொள்வது முதல்முறை. பைகான்! வெள்ளிக் கிழமை நிகழ்விடம் அடைவதற்காக கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் நடந்திருந்தேன். அதை மீண்டும் செய்யாமல் தவிர்த்தேன். அலுவலக நண்பர்கள் இருந்த இடம் போய் பணம் பகிர்ந்து பயணித்தோம். நிறைய கற்றுக் கொள்ளவும் புரிந்து கொள்ளவும் இந்த பைகான் உதவியது.

இரண்டு நாளும் இரண்டு சந்திப்புகள் முக்கியமானவையாக இருந்தன. ஒன்று, வெள்ளிக்கிழமை அறிமுகமான மார்க் கார்சியாவுடன் பேசுவதற்கு கிடைத்த நேரம். நீ ஏன் கணிதம் கற்றுக் கொள்ள நேரம் வீணடிக்கிறாய், ஏதாவது சிக்கல்களை எடுத்து தீர்க்க முயற்சி செய், கணிதம் கற்கும் ஆர்வம் தேவை வரும்போது தன்னால் வரும் என்றார். என் தீர்மானங்கள் என்று ஒன்றும் இல்லாவிட்டாலும் வரைந்த ஒரு மெல்லிய வரைபடம் அப்படி யோசிக்கும்போது கரைந்து அழிகிறது. எனவே முதல் புள்ளியிலிருந்து மீண்டும் தொடங்க வேண்டும். இதை எழுதும் நேரம் வரை அதை தொடங்கும்படியான சவாலை சந்திக்கவில்லை.

இரண்டாம் நாள், ஞாயிறு, சார்ல்ஸ் செவரென்ஸை உணவு இடைவேளையில் அடையாளம் கண்டு பேசினேன். என் ஆரம்பப் பள்ளி ஆசிரியரை சில பத்தாண்டுகள் கழித்து சந்திப்பது போன்றிருக்கிறது என்றேன். அவருடைய பொதுவெளியில் வைக்கப்பட்ட புத்தகமே என் வாழ்வில் பைத்தானை நுழையச் செய்தது. அப்படி ஐந்து நிமிடம் இருக்கும்போதே அவரது புத்தகத்தின் சமீபத்திய பதிப்பை தமிழாக்கேன் என்றார். இந்த வருட இறுதிக்குள் மொழிபெயர்ப்பின் பணிகள் பெரும்பகுதி முடித்திருப்பேன் என்று வாக்களித்தேன்.

ஓட்டமும் நடையுமாக பைக்கான் இரண்டு நாளும் சந்திக்க வைத்த அனுபவங்கள் நிறைய. அருகிலிருந்தும் இயல்பு தெரியாமலிருந்த சிலவற்றையும் அடையாளம் கண்டேன். இனி அதிகமும் பார்த்து மலைக்க வைக்கிற விஷயங்களும் அதில் எளிது என்று புழங்கும் மனநிலையோடு அணுக வேண்டும். என்னை பைக்கான் போகச் சொல்லி வெகு காலம் முன்னரே சொன்ன நண்பர் ராகவை நினைத்திக் கொண்டேன். அவர் வர முடியாது போயிருந்தது.

ஒவ்வொன்றையும் எழுத நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. எனவே எழுதாமல் விட்டுவிடுவது நலம். ஆனால் நினைவிலிருந்து போகாது என்பதை நிச்சயம். பைக்கான் முடிந்து வார நாட்கள் அங்கிருந்தே வேலை செய்துவிட்டு விடுமுறையில் திரும்பும் ரயில் ஏறினேன். அலுவலகத்துக்கும் வீட்டுக்குமாக கராச்சி பிஸ்கட்டுகள் வாங்கிக் கொண்டிருந்தேன்.

*
ஒரு வாரம் வீட்டிலிருந்து அதே வார இறுதியில் ஐந்திணை கூட்டம் 2 (அக்டோபர் 13, 14). இம்முறை காரைக்குடியில் நண்பர் நாராயணன் மெய்யப்பனின் செட்டிநாட்டு வீட்டில். தலைமை நாஞ்சில் நாடன். இம்முறை ஒரு விமர்சனம் நான் எழுதியது. லங்கூர் தொகுப்பின் மேல். ஆனால் இந்த சந்திப்பு மட்டுமில்லாமல் விமர்சனம் நான் எழுதியதும், அதற்கு வந்த பதில் விமர்சனமும் சில புரிதல்களும் வாழ்வில் முக்கியமானவை. அதிர்ச்சியும். அதே நேரம் கட்டுரை நிறைவானது.

இக்கூட்டத்தின் சிறப்பு பேருந்து வாடகைக்கு எடுத்து சித்தன்ன வாசலும், குடுமியான் மலையும் போனது. செட்டிநாட்டு உணவு. சென்ற கூட்டத்தை காட்டிலும் குறைவான உரையாடல் திசைமாறுதல் மற்றும் சர்ச்சைகள். இன்னும் வரும் கூட்டத்தை எப்படி மேம்படுத்தலாம் என்பதையும் கவனித்தோம்.

இதை தனியே எழுத வேண்டும்.

பதிவுகள்

கதை சொல்லட்டுமா...?

ஹாய் மக்களே :)

இது புது பகுதி..

கதைகள் உருவான கதையைப் பத்தி இங்கே பேசப்போகிறேன்.

இப்ப டைம் இல்ல…சீக்கிரமே இதுல பார்க்கலாம்..?

உங்களுக்கு விருப்பமான கதை தோன்றிய கதையை கூட நீங்க கமெண்டில் கேட்டால் அப்ப  நான் பதில் சொல்றேன்…

அனுபவம்

ஷேரிங்க்ஸ்

ஷேரிங்க் நல்லது தானே மக்களே…  :)

அதான் எனக்குப் பிடிச்ச விசயங்கள் , நான் ரசித்தவை இதெல்லாம் உங்க கூட ஷேர் செஞ்சுங்க தான் இந்தப்பக்கம்…

இதனால் சிலருக்கு கொஞ்சமாய் ஒரு கீற்றுப் புன்னகைத் தோன்றலாம்…சிலருக்கு இளைப்பாறுதலாய் இருக்கலாம்..அறியாததை அறியலாம்…இப்படி எதுக்காகவேனும்னாலும் யாருக்காகவேணும்னாலும் எங்கே இருக்கவங்களுக்கு வேணும்னாலும் ஏதோ ஒரு பயனையோ உதிரியாய் ஒரு புன்னகையோ தீப்பொறியாய் ஒரு சிந்தனையோ தூண்டலாம்..அதுக்காகவே…

happiee reading  :)

1.இசையில் தொடங்குதம்மா..

2.வேடிக்கைப் பார்ப்பவன்

3.மலாலா- மை கேர்ள்

அனுபவம்

உபநிஷதங்கள் – கேன உபநிஷதம்


(Picture courtesy: Internet)
எதனால் இந்தப் பயணம்? – எனக் கேள்வி கேட்டுக்கொண்டே இந்த உபநிஷதம் உள்ளார்ந்த ஆராய்ச்சியில் இறங்குகிறது. அதாவது ’தேடுகிறவனை’ ’உள்ளே’ இறக்கிவிட்டுப் பயணிக்கவிடுகிறது.

’ஓம். . கேனேஷிதம் பததி ப்ரேஷிதம் மன:’ என்கிறது ஆரம்பத்திலேயே.’(கேன’ என்பதற்கு ’எதனால்’ (எந்த சக்தியினால்) என்று அர்த்தம். எந்த சக்தியினால் விரும்பப்பட்டு, ஏவப்பட்டு, மனம் இப்படியெல்லாம் செல்கிறது, பயணிக்கிறது? என்கிற ஒரு அடிப்படைக் கேள்வியைக் கேட்கிறது. ’இறுதிஉண்மைக்கான தேடுதலில்’ இருப்பவன், தன் மனத்தின் தன்மைகண்டு கூர்மையாகி, தன்னைத் தானே கேட்டுக்கொள்கிறான் இப்படி. மேலும் கேள்விகள் வருகின்றன: முக்கியமாக, பிராணன் என்று ஒன்றிருக்கிறதே நமக்குள்.. அதனை இயக்குவது, யாரோ? வாக்கு எனப்படும் சொல், பேச்சு என்பதெல்லாம் நம்மிலிருந்து எப்படிப் புறப்படுகின்றன? புலன்களை செயல்படுத்தும் சக்தி எது? என்கிற ரீதியில் மேலும் மேலும் கேள்விகள் துளைக்கின்றன..

பிராணன் எனப்படும் உயிர்சக்தி சூட்சுமமாக எங்கும் நிறைந்திருக்கிறது. உலகை இயக்குகிற ஆற்றல்படைத்தது. அதன் ஒரு துகள் – துகளினும் துகள் நமக்குள்ளும் இருக்கிறது. அதனாலேயே இயங்குகிறோம். எனச் சிந்திக்கையில், ஜீவனின் (மனிதனின்) ஸ்தூல உடம்பு, மனம் எனும் சூட்சும வடிவம், இவற்றோடு பிராணனும் யாரால் இயங்குகின்றன என்கிற கேள்வியில் வந்து நிற்கிறது. இன்னுமொரு ஸ்லோகம் ’ஸ்ரோத்ரஸ்ய ஸ்ரோத்ரய் மனஸோ மனோ யத்’ என ஆரம்பித்து விஷயத்துக்கு வருகிறது. அதாவது காதின் காதாக.. மனதின் மனமாக.. என்று செல்லும் அது, தெளிவான ஒரு புள்ளியில் வந்து நிற்கிறது. காதின் காதாக, கண்ணின் கண்ணாக, வாக்கின் வாக்காக, மனதின் மனதாக, பிராணனின் பிராணனாகவும் இருப்பது ஒன்றே. அதுவே அது (பிரும்மம்) என நிற்கிறது இறுதியாக. தன் கடுமையான தவத்தினால், ஆழ்ந்த அக ஆய்தலில் உச்சம்பெற்று, உணர்வுநிலை திறக்கப்பட்டவன் இதனை உணர்கிறான். அவ்வாறு கண்டடைந்தவன் எவனோ அவன், இந்த புலன்களின் உலகிலிருந்து விடுபட்டுவிடுகிறான். பிறப்பு-இறப்பற்ற மேன் நிலையை எய்துகிறான் – என்கிறது.

மனதின் இயக்கத்தை, செயல்பாடுகளை துரத்திச்சென்று ஒரு பயனும் இல்லை என விழிப்புணர்வுபெற்றவன் புரிந்துகொள்கிறான். ஆதலால் அவன் மனதின்பின்னே இருக்கும் ஆன்மாவை அறிய முற்படுகிறான். மேலும் தொடர்கிறது. உடம்பு-மனம் என்கிற அமைப்பின் ஊடே, அழியாத உண்மைப்பொருளாக இருப்பது ஆன்மா. தானாகவே நிற்கும் அது உண்மையில் எத்தகையது என்கிற கேள்விக்கு குரு பதில் சொல்வதாக வருகிறது இந்த ஸ்லோகம்:

ந தத்ர சக்ஷூர்கச்சதி ந வாக்கச்சதி நோ மன:
ந வித்மோ ந விஜானீமோ யதைத தனுசிஷ்யாத்

அது கண்ணால் நோக்கப்பட முடியாதது; வாக்கும் (பேச்சு, சொற்களும்) மனமும் (சிந்தனைகளும்) அதனை நெருங்கமுடியாது. எனவே, எத்தகைய குணம்கொண்டது அது எனத் தெரியாது.. சொற்களில் சிக்காத ஒன்றை எப்படிப் புரியவைப்பது என எங்களுக்கும் தெரியாது (ஆனால் அவசியம் புரிந்துகொள்ளவேண்டியது) என்று ஆன்ம அனுபூதிபெற்ற குரு (ரிஷி) தன் சீடனுக்கு சொல்லும் வகையில் இது அமைந்துள்ளது. நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஐம்புலன்கள் வெளிஉலகை அறிவதற்காக, தொடர்புகொள்வதற்காக மட்டுமே. அவற்றால் அகத்தினுள் உறைகின்ற ஒன்றை அறியமுடியாது. புலன்களால் அறியமுடியாததை, புலனைக்கொண்டு எப்படி சொல்வது? அதனால்தான் அதைப்பற்றி வார்த்தைகளில் தன்னால் சொல்லமுடியவில்லை என சீடர்களுக்குப் புரியுமாறு விளக்குகிறார் வேதகால ரிஷி. மேலும் சொல்கையில், அது மனிதனுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் விட வித்தியாசமானது. எதையெல்லாம் அவன் இன்னும் அறியவில்லையோ அவற்றைவிடவும் மேலானது. ஞானநிலை அடைந்து அதனை ‘அறிந்த’ எங்களது பூர்வாச்சாரியர்களால் (ரிஷிகள்) இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார்.

’யத் வாசானத்யுதிதம் யேன வாகப்யுத்யதே..’ எனத் தொடங்கும் ஸ்லோகம் இப்படி விளக்க முற்படுகிறது: ’எது சொல்லால் (வாக்கினால்) விளக்கப்படமுடியாதோ, ஆனால் எதனால் சொல்லப்படுகின்ற சொல் விளக்கம், ஒளி பெறுகின்றதோ அதுவே பிரும்மம். எதனைக் கண்கள் பார்ப்பதில்லையோ, ஆனால் எதனால் கண்கள் பார்க்கின்றனவோ அதுவே அது. எதனைக் காதுகள் கேட்கமுடியாதோ, ஆனால் எதனால் காதுகள் கேட்கின்றனவோ அதுதான் அது.. மேலும், எதனை மூச்சு தீண்டமுடியாதோ, நுகரமுடியாதோ, ஆனால் எதனால் மூச்சுவிடுதல் (மனிதனுக்கு/உயிர்களுக்கு) சாத்தியமாகிறதோ, அதுவே பிரும்மம்’ என அறிவாயாக என்று சீடனுக்கு உபதேசிக்கிறார் குரு. கூடவே ’..அதுதான் பிரும்மம்’ என விளக்கும் ஒவ்வொரு ஸ்லோகதுக்கு அடியிலும் ஒரு வாக்கியம் வருகிறது. அது: இங்கே வணங்கப்படுவது அது அல்ல!’
இங்கே கொஞ்சம் விளக்கம் தேவைப்படுகிறது. ஆன்மா என சூட்சுமமாக அறியப்படுவது பிரும்மம், பரம்பொருள், பரப்பிரும்மம். ஆனால் சாமான்யன் எதை வணங்குகிறான்? ஒரு உருவத்தை, பிம்பத்தை – அது விக்ரஹ (சிலை) வடிவிலோ, ஓவிய (பட) வடிவிலோ இருக்கிறது. ஏனெனில், சாதாரண மனிதனால் சூட்சும வடிவில் , அதாவது வடிவில்லா வடிவில் இருக்கும் இறையை வணங்க, தியானிக்க முடியவதில்லை. ஆனால் அவனும் இறைவழி செல்லவேண்டுமே – உய்வதற்கு, கடைத்தேறுவதற்கு. அதற்கான ஒரு எளிய முதற்படியாக, வழிபட ஏதுவாக கோவில்களில் இந்த விக்ரஹங்கள், வீடுகளில், ஆசிரமங்களில், மடங்களில் கடவுள்களின் சித்திரங்கள், படங்கள் ஆகியவை. ஆரம்பப் படிநிலைதான் இது. ஸ்தூல வடிவத்தில் அகப்படாத, ஆனால் எங்கும் நிறைந்திருக்கும் இறையை, பிரும்மத்தை மனிதன் தன் புற அங்கங்களைக் கொண்டு காண இயலாது. ஆனால் அதற்காக அவன் தன்னை இயக்கும் தெய்வசக்தியை, பரம்பொருளை விட்டுவிடமுடியுமா? புறத்தே சுற்றித் திரிந்தவன், தன் அகத்துக்குள் பார்க்கிறான். பயணிக்க ஆரம்பிக்கிறான். அதற்கான சாதனாக்களை (தீவிர, தொடர்ந்த இறைசிந்தனை, மனம் ஒருநிலைப்படல், தியானம் போன்றவை) அவன் செய்யவேண்டியிருக்கிறது. கடும் சோதனைகள் நிறைந்த அந்தப் பாதையிலோ செல்லவேண்டிய தூரம் மிக அதிகம். தேடுபவன் அதற்காக அந்தப்பாதையை விட்டு விலகுவானா? சைவசமய முதன்மை நாயன்மார்களில் ஒருவரான அப்பர், இறுதியில் தான் அடைந்த அனுபூதி நிலையைப்பற்றி ‘தேடொணா தேவனை என்னுள்ளே தேடிக் கண்டுகொண்டேன்’ எனக் குறிப்பிடுகிறார்.

பிரும்மத்தை (இறுதி உண்மை) நோக்கிய கரடுமுரடான பாதையில் மேலும் முன்னேறுகிறது கேன உபநிஷதம். ஆன்மீகத் தேடலின் ஆரம்பநிலைகளில் சீடனுக்குத் தனக்கு அது தெரிந்துவிட்டது என்பதான மயக்கம் உண்டாகிறது. அதனைத் தன் குருவுக்கு சொல்கிறான். அவர் சொல்கிறார்.: ’அதற்குள் பிரும்மத்தைக் கண்டுவிட்டதாக உனக்குத் தோன்றினால், நீ அறிந்தது மிகக்குறைவுதான். மீண்டும் தொடர்ந்து தியானத்தில், உண்மை வழியில், சாதனாவில் இரு. தேடுதல் தீவிரமாகட்டும்’ என்று ஊக்குவிக்கிறார். மேலும் மேலும் சீடன் சிரத்தைகாட்டி, தியானித்து நாட்கள் கடந்தபின் அவனின் சலசலப்புக்கு குரு (வேதரிஷி) தெளிவுபடுத்துகிறார். ‘ என்னை எனக்குத் தெரியும்.. ஆனால் எனக்குள்ளிருக்கும் பிரும்மத்தை (ஆன்மா) தெரியாது . அதே சமயத்தில், தெரியவில்லை என்றும் உறுதியாகச் சொல்லமுடியாதுபோலிருக்கிறதே’ என்கிற நிலைக்கு நீ வந்திருந்தால், இறை அறிதலில் நெருங்குகிறாய் என அர்த்தம். மேலும் ‘யார் நன்றாகத் தெரிவதாகச் சொல்கிறானோ அவன் அறியாதவன். யார் தனக்குச் சரியாகத் தெரியவில்லை எனும் நிலையிலிருக்கிறானோ, அவனே அறிபவன். மேலும் மேலும் சாதனாக்கள் மூலம் தன்னை ஈடுபடுத்தி உணர்வின் படிப்படியான நிலைகளில் எவனொருவன் முன்னேறுகிறானோ, அவன் அந்த ஆன்மாவிலிருந்தே(பிரும்மத்திலிருந்தே) மேன்மேலும் ஆற்றல் பெற்று, மரணமில்லாப் பெருவாழ்வடைகிறான் என்கிறது இந்த உபநிஷதம். மேலும் எச்சரிக்கவும் செய்கிறது: ’இங்கேயே, இந்த பிறவியிலே ஒருவன் பிரும்மத்தை இவ்வாறு அறிந்துகொண்டானேயானால், அவன் எல்லா உயிர்களிலும் பிரும்மத்தின் இருத்தலை உணர்கிறான். ஒருவேளை, இந்த பிறப்பில் அப்படி அறியமுடியாதுபோனால், அது அந்த ஜீவனுக்கு மாபெரும் இழப்பு’ என்கிறது.

மூன்றாவது அத்தியாயத்தில் பிரும்மமே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகிறது என்பதைக் கதையாக விளக்குகிறது இந்த உபநிஷதம்.

அரக்கர்களுடனான ஒரு யுத்தத்தில் வென்றபின் களித்திருந்தனர் தேவர்கள். தங்களைத் தாங்களே மெச்சி மகிழ்ந்திருந்தனர். கர்வம் தலைக்கேறிவிட்டதை பிரும்மம் அறிந்தது. அவர்களுக்குப் பாடம் புகட்ட நினைத்து, ஒரு யக்ஷனாக உருவெடுத்து அவர்கள் இருக்கும் பகுதியில் உலவியது. தேவர்கள் தங்கள் உள்ளுணர்வினால், ஏதோ ஒரு அதீத சக்தி இங்கு வந்திருக்கிறது என அறிந்தனர். ஆனால் என்ன அது என்று தெரியாது திகைத்தார்கள். அவர்களுக்குள் பேசிக்கொண்டிருக்கையில் தேவேந்திரனான இந்திரன் அக்னிதேவனை அழைத்து ’நீர் போய் அது யார், என்ன எனத் தெரிந்துகொண்டுவாரும்..’ என அனுப்பினான்.

அக்னிதேவன் யக்ஷனின் முன் வந்து நின்றான். யக்ஷ உருவிலிருந்த பிரும்மம் அக்னியைப் பார்த்து ’யார் நீ’ என்றது. ’அக்னியே நான்!’ என்றான் அவன். ’உன்னால் என்ன செய்ய முடியும்?’ என்றது பிரும்மம். ’எதனையும் நொடியில் எரித்து சாம்பலாக்கிட என்னால் முடியும்!’ என்றான் அக்னிதேவன். ’ஓ.. அப்படியா!’ என்றது பிரும்மம். ஒரு உலர்ந்த புல்லை அக்னியின் முன்னால் போட்டது. ’எரி இதனை!’ என்றது. அக்னி புல்லைப் பார்த்தான். ப்பூ! என்று நினைத்தான். கடும் தனலாக உலர்ந்தபுல்லின் மீது பாய்ந்தான். புல்லுக்கு ஒன்றும் ஆகவில்லை. நிறம்கூட மாறவில்லை. அக்னியால் புல்லை எரிக்க முடியவில்லை.மீண்டும் முயன்றான். தோற்றான். சோர்ந்தான். என்னால் புல்லைக்கூடவா எரிக்கமுடியவில்லை என்று முணுமுணுத்துக்கொண்டே தேவர்களிடம் வந்து நடந்ததைச் சொன்னான். ’அந்த யக்ஷன் யாரென அறியமுடியவில்லை’ என்றான்.

இந்திரன் வாயுவை நோக்கினான். ’நீர் போய் அறிந்து வாரும்!’ என்றான். வாயுதேவன் விரைந்து வந்து யக்ஷன் முன் நின்றான். அதே கேள்வி. ‘நான் வாயு!’ என்றான் இவன். ’என்ன செய்ய முடியும் உன்னால்?’ என்று யக்ஷன் கேட்டதற்கு, ’இங்குள்ள எதனையும் காற்றாக வீசித் தூக்கி எறியும் சக்தி எனக்குண்டு!’ என்றான் சிரித்துக்கொண்டே. ’ஓ! அப்படியா.. எங்கே இந்தப் புல்லைத் தூக்கி வீசு!’ என்றது யக்ஷனாய் நின்ற பிரும்மம். வாயுதேவன் அற்பப் புல்லைப் பார்த்து மனதில் சிரித்துக்கொண்டான். அலட்சியமாக அதன்மீது வீசினான். அசைந்துகொடுக்கவில்லை அது. ஆச்சரியமுற்று, உக்கிரமாக வீசி, அதனைத் தூக்கிவீசப் பார்த்தான். ம்ஹூம்! ஒன்றும் நடக்கவில்லை. புல் அசைவற்று போட்டது போட்டபடிக் கிடந்தது. யக்ஷனைக் குழப்பத்துடன் பார்த்தவன் திரும்பிச் சென்று தேவர்களிடம் நடந்ததைச் சொன்னவன். ’என்னாலும் அந்த சக்தியைப் புரிந்துகொள்ளமுடியவில்லை’ என்றான்.

இந்திரன் ஆச்சரியம் மிகக்கொண்டான். இதில் ஏதோ பெரும் சூட்சுமம் இருக்கிறது. நமக்குப் புரியவில்லை. புரிந்துகொள்ளும் சக்தி நமக்கில்லையோ எனக் கலங்கியவாறு அவனே சென்றான். யக்ஷன் மறைந்துவிட்டிருந்தான். அங்கே வானில், பொன்னொளி எங்கும் ஜொலித்து வீச, பேரழகுடன் ஒரு பெண்சக்தி உருவந்தாங்கி காட்சிதந்தது. உமாதேவி! இந்திரனின் கண்கள் பனித்தன. பணிந்து வணங்கினான். மனதில் அவளை முழுதுமாக நிறுத்திப் பிரார்த்தித்தான். ‘எனக்கு ஒன்றும் புரியவில்லையே.. யார், எது இந்த மர்மசக்தி? அன்னையே, அருள்வாய்’ என மனதாரத் தாழ்ந்து இறைஞ்சினான். உமாதேவி முகமலர்ந்தாள். ’தேவேந்திரா! தேவர்களான உங்கள் சக்தியினால் உணரமுடியாது அதை எனக் கண்டுகொண்டாய். பிரும்மாண்டம், சூட்சுமத்தின் சூட்சுமம் அது. பிரும்மம். பிரபஞ்சத்தின் எல்லா செயல்களுக்கும், ஏன், உங்கள் வெற்றிகளுக்கும்கூட அதுவே ஆதாரம். அது தன் சக்தியை பின்னிழுத்துக்கொண்டால், நீங்கள் தளர்ந்து வீழ்வீர்கள். நீங்கள் யாரும் எதுவும் இல்லை என்றாகிவிடும் என அறிவாயாக!’ என்றாள் தேவி. தேவேந்திரன் அவளை நோக்கித் தலைதாழ்த்தினான். புத்தி தெளிவாகி, தேவியை வணங்கி நன்றி சமர்ப்பித்து, அங்கிருந்து அகன்றான்.

மேலும், பிரும்மத்தின், பரம்பொருளின் அதீத சக்தியை, எல்லையில்லா இருப்பை உணரவேண்டும். ’மின்னல் மின்னுவதும், இமை இமைப்பதெல்லாமும் அதனால்தான்’ என்கிற இந்த உபநிஷதம், தொடர்கிறது: மனமானது கற்பனை செய்வதும், வெளிஉலகில் பொருள்களை, உணர்வுகளை நாடிச்செல்வதும், ஆன்மா என அறியப்படும் பிரும்மத்தின் காரணமாகவே. ’அத்தகைய பிரும்மமானது எல்லா உயிர்களிலும் நிறைந்திருப்பதாக உணர்ந்து, எவனொருவன் அதை உண்மையாக தியானிக்கிறானோ, அவனை எல்லா உயிர்களும் நேசிக்கின்றன’ என்கிறது.

ஆழ்ந்த தேடலில் இப்போது முன்னேறியிருக்கும் சீடன், ’குருவே! அத்தகைய ஞானநிலைக்கான ரகசிய அறிவை அருள்வீராக’ எனப் பிரார்த்திக்கிறான். ’இதுவரை நான் உனக்கு சொன்னதெல்லாம் அதுபற்றியதே’ என்கிறார் குரு. இறை உணர்வோடு புலன்களின் கட்டுப்பாடு, உண்மைவழி செல்லுதல், சிரத்தையுடன் கூடிய கடும் தியானம் (தவம்) ஆகியவைதான் அந்த ரகசிய அறிவிற்கான சாதானாக்கள் எனச் சொல்கிறார். வேதங்கள் அந்த ரகசிய அறிவின் அங்கங்களாய் உள்ளன என சீடனுக்கு அவர் தெளிவுபடுத்துவதாய் இந்த உபநிஷதம் நிறைவு பெறுகிறது.

இந்த இடத்தில் நினைவு கூரவேண்டிய ஒன்று: ’உண்மைவழி நிற்றல் என்பதில், பேச்சு என்பது, விளைவு எதுவாயினும் பிடிவாதமாக உண்மை சொல்லல் என்றாகாது. பிறர் மனதை கலங்கடிக்காத, புண்ணாக்காத உண்மைகளையே ஒருவன் எப்போதும் பேசவேண்டும். அத்தகைய பேச்சு என்பது, வாக்கினால் செய்யப்படுகிற தவம்’ என்கிறது பகவத் கீதை.

**

புனைவுகள்

உபநிஷதங்கள் – பிரும்மத்தை நோக்கி . .

பிரத்யட்சமாக அல்லது கண்ணெதிரே காட்சியாகத் தெரியும் வடிவங்கள்தான் ஆதிமனிதனுக்கு, பொதுவாக, உண்மையெனத் தோன்றியிருக்கும். அதில் இந்த உலகம் என அழைக்கப்படும் பூமியும், பூமிவாழ் உயிர்களும், பூமியில் காணப்படும் ஆறுகள், நதிகள், மலைகள், கடல்கள் போன்றவைகளும், பகலும், இரவும், மாறும் காலமும், கூடவே அண்ணாந்து பார்த்தால் தெரியும் ஆகாயமும், ஆகாயஒளிர் சூரிய, சந்திர, நட்சத்திரங்களும், இன்ன பிறவும் அடக்கம்.

புனைவுகள்

பரியேறும் பெருமாள் : வெள்ளாள சாதி என்ற மலக்குழி

நான் பிறந்தது வெள்ளாள சாதி என்ற மலக்குழிக்குள். மூச்சு முட்ட முட்ட அந்த மலக்குழிக்குள்தான் வளர்ந்தேன். அதிர்ஷ்டவசமாக எனக்கு பெயர் வைக்கும் போது அந்த மலம் பெயருக்குப் பின் ஒட்டி விடவில்லை. அப்பா பெயரிலும், அவரது அப்பா, அம்மாவின் அப்பா பெயர்கள் சூட்டப்பட்ட அண்ணன்கள் பெயரிலும் பிள்ளை என்ற திருநாமம் ஒட்டிக் கொண்டது. அதைப் பற்றி யோசித்தது கூட கிடையாது.

ஆற்றில் குளிக்கப் போகும் போது வேறு சாதியைச் சேர்ந்த ஒருவரிடம் பேசியதற்காக அண்ணனை அப்பா திட்டியது, சுசீலா அக்கா வீட்டு சாப்பாட்டை வாங்கிக் கொண்டு போய் சாப்பிட்டதற்காக, “நானா இருந்தா அந்த சோற்றை கொட்டி விட்டு பட்டினியா இருந்திருப்பேன்” என்று அம்மா சொன்னது, பள்ளியில் சாதிக் கணக்கு எடுத்தது, “வட்ட விளை, வடலி விளையிலிருந்து வந்து உயிரை வாங்குறானுங்க” என்று வாத்தியார்கள் பேசியது என்று பல மறக்க முடியாத பதிவுகள் இருக்கின்றன.

போர் போட வந்த தொழிலாளர்களில் ஒரு பெண் கக்கூசை பயன்படுத்தியதும், அம்மாவுக்கு வந்த ஆவேசம். இப்படி சின்னச் சின்ன விதங்களில் உள்ளே குவிந்து கிடக்கிறது மலக்குவியல்.

இதற்கிடையில், சாதி ரீதியான வெறுப்பையோ, வெறியையோ வளர்க்கவில்லை. சாதி ரீதியான மேட்டிமைத்தனம் மட்டும் விதைக்கப்பட்டது. 2006-க்குப் பிறகு ஊருக்குப் போன போது மேரி அக்காவின் பையனை சாப்பிடச் சொன்னதும், அவன் புழக்கடை தரையில் உட்கார்ந்ததை பார்த்ததும் அதிர்ந்து போய் விட்டேன். ஏன் அவனை அங்கே வைத்து சாப்பாடு போடுகிறீர்கள் என்று காய்ச்சி எடுத்து விட்டேன். அவன் கூப்பிட்டா வர மாட்டான் என்று அம்மா சொன்னாள். ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படியானால் நீங்க சாப்பாடே கொடுக்க வேண்டாம். இது என்ன அசிங்கம் என்று குமுறினேன்.

அந்த கோபம் எல்லாம் உள்ளே நிரம்பியிருந்தது.

அந்த மேட்டிமைத்தனத்தோடு கல்லூரிக்கு வந்து தனி ஒரு உலகில் வாழ்ந்தாலும், அமெரிக்கா அறிமுகம் ஆனது. அமெரிக்க பொருளாதாரம், சமூகம், ROOTs நாவல், Fountainhead நாவல் என்று அமெரிக்க நூலகத்தின் மூலம் உலகத்துக்கு ஜன்னல் திறந்தது. இந்த அற்பத்தனங்களின் அநியாயம் புரிந்தது. வேலைக்குப் போன பிறகு வாசிப்பு இன்னும் விரிவடைந்து, ஜனநாயக, சமத்துவ உணர்வு புகுந்து விட்டது. திட்டமிட்டே சொந்த சாதியில் திருமணத்தை தவிர்த்தேன். பெயருக்குப் பின்னால் சாதி இல்லாததை பெருமையாக உணர ஆரம்பித்தேன்.

ஆனால், அதில் பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி என்ற பெரியாரின் கொள்கை வந்திருக்கவில்லை. சமூகநீதியை புரிந்து கொள்ளவில்லை, சுயமரியாதையை மதிப்பதன் அவசியத்தை உணரவில்லை. அதற்கு மேல்-நடுத்தர சம்பாத்தியமும், வாழ்க்கை முறையும் தடையாக இருந்தன.

கடந்த 8 வருடங்களாகத்தான், எல்லா நடுத்தர வர்க்க பாசாங்குகளையும் இழந்து விட்ட பிறகு, சமூகத்தை புரிந்து கொள்ள முடிந்தது. அப்போதும் கூட ஒரு தவறான அரசியல் நிலைப்பாட்டில், “சாதியை பேசக் கூடாது, சாதிக் கொடுமையை எதிர்ப்போம், சாதியை எதிர்க்க மாட்டோம், வர்க்கப் போராட்டத்தில் சாதி மறைந்து விடும்” என்ற நடைமுறையில் வாழ்ந்து விட்டேன். இந்தப் படம் அது எல்லாவற்றையும் உடைத்து போட்டிருக்கிறது.

திரைப்படம்

ஆயுத பூஜை

வாட்சாப் குரூப்பில் தாமிரபரணி புஷ்கரணி பற்றி நண்பர்களுடன் ஒரு காரசார விவாதம். அதில் ஒரு நண்பன் இது மதத்தை கட்டாயமாக திணிப்பது போல உள்ளதாக சொல்லியிருந்தான்.

எனக்கு சிரிப்புதான் வந்தது. ஆயுத பூஜை நேரமாக பார்த்து இதை சொன்னது இன்னும் விசேஷம்.

வெள்ளிக்கிழமை தொழுகை இஸ்லாமியருக்கு கடமை. ஞாயிறு காலை பிரார்த்தனை கிறிஸ்தவர்களுக்கு கட்டாயம். விடுமுறைகள் கூட இதை ஒட்டி தான் இருக்கும். இஸ்லாமிய நாடுகளில் வெள்ளி விடுமுறை. கிறிஸ்த்தவ நாடுகளில் ஞாயிறு விடுமுறை. பிரிட்டிஷ் ஆட்சியில் ஆரம்பமானது இந்தியாவில் இன்னும் தொடர்கிறது.

கேரள விஜயத்தின் போது டிரைவருடன் பேசிக்கொண்டு வந்த போது அறிந்த தகவல். ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஒவ்வொரு சர்ச்சோடு இணைந்திருப்பர். ஒரு நாள் சிவன் கோவிலுக்கு ஒரு நாள் பெருமாள் கோவிலுக்கு நாம் போவது போலெல்லாம் போகமுடியாது. அதே சர்ச்சுக்கு ஒவ்வொரு ஞாயிறும் போகவேண்டும். பாதிரியார் அட்டெண்டன்ஸ் வைத்திருப்பார் போலிருக்கிறது. வராவிட்டால் போன் பண்ணி ஏன் வரவில்லை என்று கேட்பாராம்.

இது போல ஏதானும் ஒரு தினத்தில் கட்டாயம் கோவிலுக்கு போகும்படி இந்துக்களுக்கு உண்டா? இருக்கும் மதங்களிலேயே இன்ன ஒரு வழியில் தான் வழிபாடு செய்யவேண்டும் இன்னின்ன சடங்குகளை கட்டாயம் செய்யவேண்டும் என்று சொல்லாத மதம் ஏதானும் உண்டா என்று தேடிப்பார்த்தால் இந்து மதம் மட்டும் தான் தென்படும்.

நெருப்பை கும்பிடலாம். நெருப்பு வடிவான சூரியனை கும்பிடலாம். இல்லை நெருப்பிலிருந்து பிறந்த குமரனை வணங்கலாம் இல்லாவிட்டால் அவன் தந்தை நெருப்பை கையிலும் நெற்றியிலும் வைத்திருக்கும் பரமனை வணங்கலாம்.

அதே போல நீரை, நதியை, கடலை இறைவனாக வணங்கலாம். அதையே பாற்கடலாக உருவமித்தது அதில் பள்ளிகொண்டுள்ள பரந்தாமனாக வணங்கலாம். சக்தி என்பதை தாய் தெய்வத்தின் உருவகமாக வணங்கலாம். எல்லாம் ஒன்றே என்ற எண்ணத்தோடு சேர்த்தும் வணங்கலாம்.இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்னும் சரியை,கிரியை,யோகம், ஞானம் என்று பல வழிகளிலும் இறைவனை தேடலாம். இதெல்லாம் எதுவும் தெரியாமலே கூட இதை கடைபிடிக்கலாம். எந்த வழியில் போனாலும் ஒரே இறைவனை தான் அடைவோம் என்பதை இதை விட சிறப்பாக சொல்ல முடியுமா?

இதோ நாளை ஆயுத பூஜை. கார், டெம்போ, லாரி, ஸ்பானர் என்று அவரவர் தொழில் சார்பான பொருட்களை வைத்து பூஜை செய்வர். அரைகுறையாக இதை புரிந்து கொள்ளும் நாத்திகரும் இதர மதத்தவரும் இரும்பை பூஜிக்கிறார்கள் என்று கேலி செய்வர்.

பூஜிப்பது இரும்பை அல்ல இறைவனை தான் என்பதை இவர்கள் அறிவதில்லை. செய்யும் தொழிலே தெய்வம் – ஏதோ சாதாரண வாக்கியம் போல் இருக்கும் இது கீதையில் பகவான் சொன்ன கர்ம யோகம் என்பதன் சாரம் என இவர்கள் புரிந்துகொள்வதில்லை.

கடமையை செய், இதை நினைப்பூட்டுவது தான் ஆயுத பூஜை. அனைவர்க்கும் இனிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள்.

எழுத்து
V. வெங்கடேஷ்
சிங்கப்பூர்

அனுபவம்