தெரிந்த மரங்களின் பெயர்கள் சிலவற்றைத் தொகுத்து வைக்கும் நோக்கத்தோடு இது எழுதப்படுகிறது.
மரங்கள் பற்றிய அறிவு, அனுபவம் என்பன வித்தியாசமானவை. பாடப் புத்தகங்களிலும், வேறு வழிகளிலும் மரங்கள் பற்றிய அறிவைப் பெறுவது ஒருமுறை. ஆனால் மரங்களை நேரிற்பார்த்து பழகி அனுபவம் பெறுவது வேறொரு முறை. நாம் அறிபவற்றில் அனுபவிக்கக் கிடைப்பவை சிலவே. அது நாம் வாழும் அமைவிடங்களைப் பொறுத்தது.
சிலமரங்கள், வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுவதைக் கண்டிருக்கிறோம். பூக்களின் பெயர்கள் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் வேறுபடுவதை வலைப்பதிவுகளில் கண்டிருக்கிறோம்.
இங்கே, மரங்களை அறிமுகப்படுத்த முடியாது. அவைபற்றிய முழுமையாக தரவுகள், படங்களுடன் இடுகையெழுத முடியாது. ஆனால் நான் பழகிய மரங்களின் பெயர்களைப் பதிந்து வைப்பது என்பதே இவ்விடுகையின் நோக்கம். இன்னும் ஈராண்டுகள் கழித்து, எனக்கே சில மரங்களின் பெயர்களை ஞாபகப்படுத்திக்கொள்வதுதான் இதன் முதன்மை நோக்கம்; மற்றவர்களுக்குப் பயன்படுமென்று நினைக்கவில்லை.
இப்படிச் செய்யவேண்டி வந்ததற்கு தலைப்பிலுள்ள 'வெடுக்குநாறி' தான் காரணம்.
இம்மரம் பற்றிய சம்பவமொன்றை அசைபோட்ட பொழுதில், அம்மரத்தின் பெயர் உடனடியாக நினைவுவர மறுத்துவிட்டது. இதென்ன கொடுமை? மிக அதிகளவில் பழகிய மரத்தின் பெயரொன்று வெறும் மூன்று வருடத்துக்குள், சடாரென்று நினைவு வராமற் போகுமளவுக்கு மங்கிவிட்டது திகைப்பாக இருந்தது. கொஞ்சம் யோசித்து பெயரை நினைவுபடுத்திக்கொண்டேன்.
சரி, இப்பிடியே போனா இன்னும் ரெண்டு வருசத்தில் மூளை மக்கிப்போன நேரத்தில இன்னும் பிரச்சினையாக இருக்குமே எண்டு நினைச்சு, அந்த நேரத்தில் உதவக்கூடிய மாதிரி எழுதி வைக்கிறதெண்டு முடிவெடுத்ததன் விளைவுதான் இவ்விடுகை.
யாழ்ப்பாணத்தில் இருந்தபோது அறிந்த மரங்களின் தொகை மட்டுப்படுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்திற் காணக்கிடைக்காத மரங்களில் நான் கேள்விப்பட்டிருந்த பெயர்கள்: பாலை, முதிரை, கருங்காலி போன்றன. இவைகள் தளபாடங்கள் மூலம் அறிந்த பெயர்கள். இவற்றில் பாலையைத் தவிர ஏனையவற்றை வன்னிக்கு நிரந்தரமாக இடம்பெயரும்வரை நேரிற் கண்ட ஞாபகமில்லை. இரண்டொருமுறை யாழ்ப்பாணத்திலிருந்து மடுத் திருநாளுக்காக வந்து போனதில் பாலைமரம் நல்ல பரிச்சயம். அவற்றைவிட வீரை, சூரை என்பவற்றைக் கேள்விப்பட்டதன்றி நேரிற் பார்த்ததில்லை.
1996 இன் தொடக்கத்தில் வன்னிக்கு வந்தபின்பு புதுப்புது மரங்கள் பலவற்றை அறியக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அவற்றிலொன்றுதான் இவ்விடுகைக்குரிய தலைப்பான 'வெடுக்கு நாறி'.
இந்தப் பெயர்வர என்ன காரணமென்று தெரியவில்லை. இம்மரத்தை வெட்டினால் ஒரு மணம் வரும், எல்லா மரத்துக்கும் வருவதைப் போலவே. ஆனால் அருவருக்கத்தக்கதாக அது இருக்காது. வெடுக்கு, நாறுதல் போன்ற சொற்களுக்கு தற்காலத்தில் நாம் கொண்டிருக்கும் பொருட்படி பார்த்தால் அது கொஞ்சம் அருவருக்கத்தக்க மணத்தைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படியில்லை.
இது நெடுநெடுவென்று நேராக உயர்ந்து வளரும், கிட்டத்தட்ட தேக்குப் போல. இளம் வெடுக்குநாறிகளைப் பார்த்தால் மின்கம்பங்களாக நடக்கூடிய மாதிரித்தான் நேராக உயர்ந்து வளர்ந்திருக்கும். பின்னர் முற்றிப் பருக்கும். நாலைந்து பேர் சுற்றிநின்று கட்டிப்பிடிக்கக் கூடியளவுக்குப் பருமனான வெடுக்குநாறிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படிப் பருத்த மரங்கள் எண்ணிக்கையில் குறைவாகவே காணப்படுகின்றன. அந்த நிலைக்கு வருவதற்கு முன்பே ஏதோவொரு வகையில் இம்மரங்கள் தமது வாழ்நாளை முடித்துக்கொள்வதாகக் கருதுகிறேன்.
இதன் இலைகள் கரும்பச்சை நிறத்திலிருக்கும். இதன் பட்டை கறுப்பாக இருக்கும். கொஞ்சம் தூரத்திலிருந்து பார்த்தால் கருங்காலி மரத்துக்கும் வெடுக்குநாறி மரத்துக்கும் உடனடியாக வித்தியாசம் பிடிக்க முடியாதபடி இருக்கும். கருங்காலிக்கு பட்டை தனிக்கறுப்பாக இருக்கும். அத்தோடு சிறிய செதில்கள் போல பட்டைத் துண்டுகள் மேற்கிளம்பியிருக்கும்.
ஆனால் வெடுக்குநாறிக்கு பட்டை மேற்பரப்பு மிகமிக அழுத்தமாக இருக்கும். அத்தோடு கறுப்பினிடையே (உண்மையில் வெடுக்குநாறியின் பட்டையின் நிறத்தைக் கறுப்பென்று சொல்லமுடியாது. கறுப்பும் கடும்பச்சையும் கலந்தவொரு நிறம்) வெளிர்நிறக் கோடுகள் நெடுக்காகத் தெரியும்.
அதைவிட மரத்தின் கிளையமைப்பு வெடுக்குநாறிக்கு வித்தியாசம். நெட்டையாக நிற்கும் இள வெடுக்குநாறிகளின் கிளைகள் கற்தேக்குப் போல ஓரளவு குடைவடிவக் கிளையமைப்பைக் கொண்டிருக்கும். (ஆனால் நன்கு முற்றிப் பருத்த வெடுக்குநாறி மரம் முற்றிலும் மாறுபட்டு சாதாரண மரங்கள் போன்று காட்சிதரும்.)
சரி, வெடுக்குநாறியின் பயனென்ன எனக் கேட்டால் குறிப்பிட்டுச் சொல்லும்படி ஒன்றுமில்லை. இதிலிருந்து தளபாடங்கள் எவையும் செய்ய முடியாது. வைரமான மரமன்று. விறகுக்குக்கூட இதைப் பயன்படுத்துவதில்லை. காய்ந்தபின், அடர்த்திகுறைவாகத் தெரியும்.
ஆனால் குறுகிய கால நோக்கில் இம்மரம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. நேராக நெடுத்து வளருவதால், அவ்வாறான கம்பங்களின் தேவையை இம்மரங்கள் நிறைவேற்றுகின்றன. அண்ணளவாக ஓராண்டு காலம்வரை இம்மரத்தைக் கொண்டு குறிப்பிட்ட பயனைப் பெறலாம். காய்ந்த பின் நிறை மிகக்குறைவாக இருப்பது இன்னொரு சிறப்பு.
அவசரமாக பதுங்கு - குழியமைக்க, கிணற்றுக்குக் குறுக்காக வளையொன்று (கப்பி கட்ட) போட, குறுகியகால வதிவிடம் அமைக்க வளையாக, தீராந்தியாக, கப்பாக என இம்மரம் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வின மரங்கள் வன்னிக் காடுகளில் மிகமிகச் செறிவாகக் காணப்படுகின்றன.
இம்மரத்தைப் பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தவர்கள், அல்லது எனது தகவல்களில் முரண்படுகிறவர்கள் பின்னூட்டங்களில் கருத்துக்களைத் தெரிவியுங்கள்.
இன்னொரு மரத்தோட அடுத்த இடுகையிற் சந்திக்கும் வரை வணக்கம் கூறி விடைபெறுகிறேன்.
நன்றி.
இடுகைக்குத் தொடர்பில்லாதது; டி.சேயின் பின்னூட்டத்தைத் தொடர்ந்து இப்படம் இங்கு இணைக்கப்படுகிறது.
நாயுண்ணிப் பூவின் படம். (பீநாறியும் நாயுண்ணியும் வெவ்வேறு செடிகள்)
படம்: அருச்சுனா
இத்தொடரின் முதலாவது பகுதியில் 'வெடுக்குநாறி' என்ற மரத்தைப்பற்றிப் பார்த்தோம்.
இவ்விடுகையில் 'விண்ணாங்கு' பற்றிப் பார்ப்போம்.
தொடக்கத்தில் வேறொரு பெயரோடு இம்மரத்தின் பெயர் எனக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும். அப்பெயர் 'வெங்கணாந்தி'.
வன்னி வந்த தொடக்கத்தில் விண்ணாங்கு மரத்தை வெங்கணாந்தி எனவும் பலதடவைகள் சொல்லியிருக்கிறேன்.
வெங்கணாந்தி என்பது வன்னியிலுள்ள ஒருவகைப் பாம்பின் பெயர். 'மலைப்பாம்பு' என்று நாங்கள் அறிந்து வைத்திருந்த பெரிய, பருத்த பாம்புக்குத்தான் இந்தப்பெயருள்ளது. விலங்குகள் பற்றி எழுத முடிந்தால் அங்கு இப்பாம்பைப் பற்றிப் பார்ப்போம்.
'அப்பக் கோப்பை', 'பேக்கிளாத்தி' போல 'வெங்கணாந்தி'யும் மற்றவர்களைத் திட்டப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்.
'அவனொரு வெங்கணாந்தி'.
சரி விண்ணாங்குக்கு வருவோம்.
இதுவும் வன்னியில் மிகப்பெருமளவில் காணப்படும் மர வகை.
அடர்காடுகளில் இருக்கும் அதேவேளை, பற்றைக்காடுகள் மற்றும் மக்கள் குடியிருப்புக்களிலும் இம்மரங்கள் உள்ளன.
புதுக்குடியிருப்பு - ஒட்டுசுட்டான் வீதியிலிருந்து மன்னாகண்டல் வழியாக முத்தையன்கட்டுக் குளத்துக்கு வரும் பாதையில், வாய்க்கால் கரையோரத்தில் விண்ணாங்கு மரங்கள் மட்டுமே மிக அடர்த்தியாக வளர்ந்திருக்கும் பகுதியொன்றைக் காணலாம்.
இது அடர்த்திகுறைந்த / எடைகுறைந்த மரம். மிகவும் 'சோத்தி'யான மரமென்று இதைச் சொல்லலாம். எடையில் கிட்டத்தட்ட முள்முருக்குப் போன்றிருக்கும். ஆனால் ஒப்பீட்டளவில் முருக்கை விட கொஞ்சல் வலிமையானது.
இம்மரம் அடர்த்தியான வகையில் இலைகளைக் கொண்டிராது. இலைகள் சாம்பல் கலந்த பச்சைநிறத்திலிருக்கும். மண்ணிறப் பட்டையைக் கொண்டிருக்கும்; முற்றிய மரமென்றால் ஆங்காங்கே பட்டைகள் வெடித்து உரிந்திருக்கும்.
கிளைபரப்பி அகன்று வளராமல் நெடுத்து வளரும். பெரிய விண்ணாங்கு மரமொன்று நின்றாலும் அதன்கீழ் திருப்தியான நிழல் கிடைக்காது. காரணம் பரந்து வளர்வதில்லை; அத்தோடு அடர்த்தியாகக் குழைகளைக் கொண்டிருப்பதில்லை.
சோத்தி மரமென்பதால் தளபாடங்களுக்குப் பயன்படுத்துவதில்லை. விறகாகவும் பயன்படுத்துவதில்லை. எதிர்த்தாலும்கூட அதிகளவு புகையைக் கக்கிக்கொண்டிருக்கும்.
ஒப்பீட்டளவில் பயன்பாடற்ற மரமாகவே தோற்றமளிக்கும். ஆனாலும் சில பயன்பாடுகளுள்ளன.
நீண்டு, நெடுத்து, நேராக வளர்வது இதன் சிறப்பு. மெல்லிய விண்ணாங்குத் தடிகள் வரிச்சுத்தடிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
உலக்கை அளவுக்குத் தடிப்பான விண்ணாங்கு உருளைக் கட்டைகள் மிக நேரான முறையில் கிடைக்கும். அவை பலவிதங்களில் பயன்படுகின்றன. மேலும் விண்ணாங்குக் கட்டைகளை நெடுக்குவெட்டாக இரண்டாகக் கிழிப்பது மிகச் சுலபம். அப்படிக் கிழித்து சிறிய சட்டப்பலகைகள் உருவாக்கலாம்.
வன்னியில் பரண் அமைக்கும் தேவையுள்ளது. சாதாரணமாக நிலத்திலிருந்து இரண்டடி, மூன்றடி உயரத்தில் கட்டில் போல நிரந்தரமாக பரண் அமைத்துப் படுப்பது வழமை. பாம்புகளிடமிருந்து ஓரளவுக்குப் பாதுகாப்பளிக்கும். அதைவிட வயற்காவல், வேட்டை போன்ற தேவைகளுக்கு உயரமான பரண் அமைப்பதும் வழமை. பரண் அமைப்பதற்கு, கிழித்த விண்ணாங்குக் கட்டைகள் அருமையானவை.
வன்னியில் நிகழ்ந்த தொடர்ச்சியான இடப்பெயர்வு வாழ்க்கையில் விண்ணாங்கு மரத்தின் பங்கு கணிசமானது. புதிதாக கொட்டிலொன்றைப் போட்டு வாழ்க்கையைத் தொடங்குவதாயின் விண்ணாங்கு பெருமளவு தளபாடத் தேவையை நிறைவேற்றும். படுப்பதற்கும் இருப்பதற்குமான பரண், பொருட்கள், பாத்திரங்கள் வைப்பதற்கான அடுக்கணி என்பன பெரும்பாலும் விண்ணாங்கின் மூலமே நிறைவு செய்யப்படும்.
கொட்டில்களில் அறைகள் பிரிப்பதற்கும் கிழித்த விண்ணாங்குச் சட்டங்கள் உதவும். யாழ்ப்பாணத்தில் பனைமட்டையால் வேலி வரிவது போன்று விண்ணாங்குச் சட்டங்களால் வரியப்டும்.
தேவைக்கேற்றாற்போல் கத்தியாலேயே சீவி சரிப்படுத்துமளவுக்கு மிக இலகுவான மரமென்பதால் இது பலவகைகளில் வசதியாகவுள்ளது.
மிக அதிகளவில் இது பயன்படுத்தப்படும் இன்னொரு தேவை ஆயுதங்களுக்கான பிடிகள்.
வன்னியில் மண்வெட்டி, பிக்கான், கோடரி போன்ற ஆயுதங்களின் பிடிகள் விண்ணாங்குக் கடையில்தான் அதிகமாகப் போடப்படுகின்றன.
விண்ணாங்கு பற்றிய மேலதிகத் தகவல்கள், திருத்தங்கள் இருந்தால் பின்னூட்டங்களில் தெரியப்படுத்தவும்.
அடுத்த இடுகையொன்றில் இன்னொரு மரத்தோடு உங்களைச் சந்திப்பேன்.
நன்றி.
ஐ.நாவின் தரவுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சனத்தொகை, GDP,GNP,trade, commodities, agriculture, employment, the environment, industry, education, tourism மற்றும் பல தரவுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
முதல் தடவை உள்செல்லும் போது பிரபலமான தேடல்கள் காட்டப்படும். அதனை சொடுக்கி முடிவுகளைக் காணலாம். அல்லது நாடு வாரியான தகவல்களையும் காணலாம். உதாரணத்திற்கு Spain பற்றித்தேட spain என்று உள்ளிடுங்கள். அதன் பின்னர் ஸ்பெயின் பற்றிய தகவல்களைக் காணலாம்.
பனங்காட்டு முனிவன் மதவடியில் வசந்தனுக்கு அருளிய அருளுரை.
ஒருநாள் தற்செயலாக் கிடைத்த தரிசனத்தைச் சரியாகப் பயன்படுத்திய வசந்தன், தன் சந்தேகங்களைக் கேட்டு ஒரு மதவடியில் ஞானம் பெற்றான்.
ஐயா! எனக்கொரு சந்தேகம்.
கேள் மகனே கேள். சந்தேகப்படுவதால்தான் இன்னும் நீ மனிதன்.
ஐயா! கடவுள் இருக்கிறாரா இல்லையா?
ஹஹஹஹஹ. எவ்வளவு காலமாய் இதுபற்றி யோசித்திருக்கிறாய்?
நீண்டகாலமாகவே எனக்குள்ளிருக்கும் சந்தேகமிது. உங்களிடம் தெளிவு கிடைக்குமா?
ஹஹஹ. நீ ஒரு முட்டாள். ஆம் கடவுள் பற்றிச் சிந்திப்பவனையெல்லாம் முட்டாள் என்றுதான் சொல்வேன். காதலும் கடவுளும் ஒன்று. இரண்டுமே முட்டாள்தனங்கள். உனக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?
சின்ன வயதில் இருந்தது.இப்போது?சொல்லத்தெரியவில்லை. நீண்டகாலமாக வழிபடுவதில்லை.
ஆனால் கடவுள் இருக்கிறாரா இல்லையாவென்று குழப்பமாயிருக்கிறது சரியா?
ஆம் குருவே. இதுபற்றி உங்கள் நீண்ட விளக்கத்தைக் கேட்க ஆவலாயுள்ளேன்.
தம்பி! மனித மனம் விசித்திரமானது. ஏகப்பட்ட முரண்களைக்கொண்டிருக்கும் சங்கதிகளையே எந்தக் கேள்வியுமில்லாமலும் குழப்பங்களில்லாமலும் அசைபோடப் பழகிக்கொண்டது. நான் உன்னைக் கேட்கிறேன். கடவுள்தான் பூமியைப்படைத்தார் என்றால், பூமியின் தோற்றம் பற்றிய விஞ்ஞானக் கோட்பாடுகளை முற்றாக நிராகரிக்கத் தயாரா?
கடவுள்தான் மனிதகுலத்தைப் படைத்தாரென்றால், டார்வினின் கொள்கைகள், அவரின் கோட்பாடுகள் எல்லாவற்றையும் நிராகரிக்கத் தயாரா?
கடவுளின் படைப்புக்கொள்கையை கவனத்திலெடுக்காமற் செயற்படும் விஞ்ஞானத்தின் இற்றைவரையான முன்னேற்றத்தை நிராகரிக்கத்தயாரா?
அதெப்படி முடியும் ஐயா?
ஆம். முற்றாக மறுதலிக்க முடியாமல் ஆனால் கடவுளின் படைப்புக் கொள்கையை நம்பிக்கொண்டு, குறைந்தபட்சம் கடவுள் இருக்கிறாரென்று நம்பிக்கொண்டு இருக்கும் மக்கள் கூட்டம் பெரியது. இதில் எந்தத் தவறுமிருப்பதாகப் படவில்லை. பாடசாலையில் மூன்றாம் வகுப்பிலேயே எமது இந்த இரட்டை நிலைப்பாடு தொடங்கிவிடுகிறது. சமயபாடத்தில் இறைவனின் படைப்புத்திறன், காக்கும்திறன் என்று படித்துக்கொண்டு, அதேநேரம் சுற்றாடல் பாடத்தில் மனிதன் குரங்கிலிருந்துதான் தோன்றினான்; அவனது மூதாதையர் ஹோமோ சேப்பியன்ஸ், ஹோமோ நியண்டதால் என்று படங்களோடு விலாவாரியாகப் படிக்கத் தொடங்குகிறோம். மனித மனம் இந்த இரு முரண்களையும் பற்றிச் சிந்திப்பதில்லை. அப்படியே இருந்துவிட்டுப்போக வேண்டியதுதானே. பிறகேன் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற ஆய்வு?
கடவுட் கொள்கையைப் பலமாக ஆட்டம்காண வைப்பதற்குத் தொடக்கம் வானியல்தான். வானியலின் வளர்ச்சிதான் மதங்களுக்கு முதல் எதிரியாயிருந்தது. பின் பலவிதயங்கள் தெளிவாகியது. அந்த வானியலிற்கூட கடவுள் பக்தியுள்ளவர்கள் நிறையப்பேர் இருந்திருக்கிறார்கள். 'கல்பனா' எனும் இந்தியப் பெண்ணொருத்தி ஆராய்ச்சிக்காக விண்வெளி சென்றாள். ஆனால் மீண்டு வரவில்லை. அவள் இறுதியாக விண்ணிலிருந்து அனுப்பிய தொலைநகல் மிக உருக்கமானது. வரிக்குவரி கடவுள் துதிபாடும் அக்கடிதம், அவளது நம்பிக்கைகளின் வெளிப்பாடு. விண்ணிலிருந்து வானியல் ஆராய்ச்சியாளினியொருத்தி கடவுள் துதிபாடி வரைந்த அம்மடல் யாருக்கும் குழப்பத்தையூட்டவில்லை. அதுதான் தனிமனித நம்பிக்கை. நம்பிக்கை வேண்டியவர்கள் கடவுள் என்றொரு பாத்திரத்தை, உருவத்தை நினைத்து மன்றாடுகிறார்கள், நன்றி சொல்கிறார்கள்.
ஐயா! அப்படியானால் விஞ்ஞானம், கடவுள் பற்றி ஏன் எதுவும் கூறவில்லை?
அது தன் வாதங்களையும் எடுகோள்களையும் நிருபிப்பதிலேயே குறியாக உள்ளது. கடவுள் உண்டு என்றும் சொல்லவில்லை. இல்லையென்றும் சொல்லவில்லை. கடவுள் பற்றி கிஞ்சித்தும் சட்டை செய்யாமல் அது தன் வழியிற்செல்கிறது. இந்த அசட்டையே கடவுள் இல்லையென்பதன் வெளிப்பாடாகக்கூட இருக்கலாம். தன் கோட்பாடுகளுக்கு ஏறக்குறைய நிறைவான ஆதாரங்களைக் காட்டிவிட்டது. பலவற்றை நிரூபித்தும் விட்டது. இன்னும் முயன்று கொண்டிருக்கிறது.
அப்போ என்ன சொல்ல வருகிறீர்கள்?
கடவுள் இருக்கிறார், கடவுள் இல்லை என்பதெல்லாம் தேவையற்ற வாதங்கள். பரிணாமக்கொள்கையில் வேருன்றி அதன் வழியிலேயே ஆராய்ச்சி செய்யும் ஒரு விஞ்ஞானிகூட கோயில் சென்று கடவுளைத் தொழக்கூடும். அவன் தன் தொழிலில், கடமையில், ஆய்வில் கடவுளை எந்தச் சந்தர்ப்பத்திலும் தொடர்புபடுத்த மாட்டான். இரண்டும் வெவ்வேறு தளங்கள். எமது மனம் இரண்டையுமே குழப்பமில்லாமற் கையாளும் தகமை பெற்றது. ஆகவே நீ குழம்பாதே.
கடவுள் இல்லையென்று நம்பினால் அது சரிதான்.
கடவுள் இருக்கிறாரென்று நம்பினால் அதுவும் சரிதான்.
ஆனால் இருக்கிறாரா இல்லையா என்று ஆராய்ந்தால் அதுதான் தவறு. கூடவே முட்டாள்தனமும் கூட.
சரி ஐயா!காதலையும் கடவுளையும் எப்படிச் சம்பந்தப்படுத்துகிறீர்கள்?
சரியாகக் கேட்டாய்.இரண்டிலும் அறிவைப் பிரயோகிக்கக் கூடாது.
காதலை வைத்தே உனக்கு நானிதைத் தெளிவிப்பேன்.
காதலில் அறிவுபூர்வமாய் யோசித்தால் என்ன நடக்கும்?
காதலி இருந்துவிட்டுப்போன இருக்கையில் தானும் இருந்து லயிப்பது,
அவள் மூக்குச்சளி சீறி எறிந்துவிட்டுப்போன கைக்குட்டையை எடுத்துப் பத்திரப்படுத்துவது,
அதில் காதலியின்முகம் பார்ப்பது,
அதனால் முகத்தைத் துடைத்து காதலி முத்தம் தருவதாகப் பரவசப்படுவது,
அவள் தலையிலிருந்து விழுந்து பூவொன்றை மாதக்கணக்கிற் பத்திரப்படுத்தி அப்பூவோடு பேசுவது
என்று சினிமாத்தனமான செய்கையெல்லாம் செய்ய முடியாது. அறிவைப்பாவித்தால் இவையெல்லாம் முட்டாள்தனமாயும் சிறுபிள்ளைத்தனமாயும் தோன்றும்.
ஆனால் இப்பிடிச் சிந்தித்தால் உன்னால் காதலின் இன்பத்தை அடையமுடியாது. கூடவே காதலியையும் அடையமுடியாது. ஆக காதலில் முட்டாள்தனங்களும் சிறுபிள்ளைத்தனங்களும்தான் தேவை. கூடவே மனித இனத்தின் தொடர்ச்சிக்கும் இது தேவை.
ஆகவே காதலில் அறிவுபூர்வமாய்ச் சிந்திப்பது எவ்வளவு முட்டாள்த்தனமோ,அதுபோலவே கடவுள் விதயத்தில் அறிவைப்பாவிப்பதும் முட்டாள்த்தனமானது. கடவுள் பற்றிச் சிந்திப்பதற்கு சிறிதளவாவது உமது மூளையைப் பயன்படுத்தாதே.
நினைப்பதற்கும் சிந்திப்பதற்குமுள்ள வேறுபாட்டை உனக்கு நான் தெளிவிக்கத் தேவையில்லை.
நன்றி ஐயா! பூரண தெளிவு பெற்றேன். வருகிறேன். அதற்குமுன் ஒரு கேள்வி. உங்கள் பெயர் என்ன?
ஹஹஹஹஹா. யாம் பலபேரில் உள்ளோம். உனக்குத் தரிசனம் தரும்போது என்பெயர் ‘வன்னிய முனிவன்’. வீடு அங்கே இருக்கிறது. இந்தப்பக்கம் ஏன் போகிறாய்?
கடவுள் இல்லையென்று நான் நினைத்துக்கொண்டிருந்த கூற்று உண்மையானால் பத்துத் தேங்காய் உடைப்பதாக அந்த மூலைக்கோயிலில் வேண்டுதல். இப்போ கடவுள் இல்லையென்ற என்கூற்றுப் பலித்துவிட்டது. அதுதான் அந்த நேர்த்தியைச் செய்யப்போகிறேன்.
ஹஹஹ. விளையாட்டுப் பிள்ளையடா நீ.
பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு
இதை ஒரு ‘இயம்’ ஆக்கிக் கதைப்பதே சரியா தெரியாது. ஆனால் அவ்வளவு தூரத்துக்கு முக்கியமானதுதான் இது. இங்கே சாதி பற்றிய என் அனுபவங்களைப் பகிர்கிறேன் அவ்வளவே. இது ஆராய்ச்சியோ அறிவுரையோ அன்று என்பதை முதலிற் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஏற்கெனவே தமிழோடு பட்டபாடு போதும். என் அனுபவங்கள் என்று சொல்லிவிட்டதால் நான் சார்ந்த தளத்தை மட்டுமே என்னாற் சொல்ல முடியும். எனவே அந்தத்தளம் இங்கே பலருக்குப் பிடிக்காததாயிருக்கலாம் என்பது எனக்குத் தெரியும்.
யாழ்ப்பாணத்தின் கிராமமொன்றுதான் என் சொந்த ஊர். எனது காலத்தில் சாதி ஒடுக்குமுறையென்பது என் கிராமத்தில் இருந்ததாக நினைவிலில்லை. ஆனால் வேறுபாடுகள் நன்றாகவே இருந்தன. மேல் சாதியென்று குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவில் எந்தச் சாதியும் இருந்ததில்லை. (இது என் கிராமத்துக்கு மட்டுமே பொருந்தும். வேறு இடங்கள் பற்றி அந்தச் சின்ன வயசில் எனக்குத் தெரியாது) ஆனால் குறிப்பிட்ட ஆக்கள் வீதியால் வரும்போது காவோலை கட்டி இழுத்து வரவேணும் என்ற நடைமுறை முன்பு இருந்ததாக என் பாட்டன் பரம்பரை சொல்லிக் கேள்விப்பட்டதுண்டு. என் காலத்தில் அது அறவே இருந்ததில்லை. ஏன் தந்தை காலத்திலும் அது இருந்ததில்லையாம்.
எங்கள் கிராமத்தில் எல்லாக் கிணறுமே குடிப்பதற்குப் பாவிப்பதில்லை. சமைப்பதற்குப் பாவித்தாலும், குடிப்பதற்குச் சில குறிப்பிட்ட கிணறுகளையே பாவித்தார்கள். (ஆனால் உண்மையில் எல்லாக் கிணறுமே குடிக்கக் கூடிய தண்ணீருள்ள கிணறுகள் தான். சுவைக்காகத்தான் இப்படி கிணறுக்கு அலைவது. தண்ணீருக்குச் சுவையில்லையென்று விஞ்ஞானம் பேசாதீர்கள். சுவையிருக்கிறது. இது எந்தக் கிணத்துத் தண்ணீரென்று என்னாற் சுவைத்துப்பார்த்துச் சொல்ல முடியும்.) முந்தி தண்ணீர் எடுப்பதில் சாதிச் சண்டைகள் வந்ததாம். ஆனால் என் காலத்தில் எல்லாருமே தண்ணீர் அள்ளினார்கள். குறிப்பாகக் கோயில் கிணறுகள் எந்த நேரமும் எல்லாருக்காகவும் இருக்கும். கோயில் வளவுக் கதவுகள் இரவிற்கூடப் பூட்டப்படுவதில்லை, தண்ணீர் அள்ளுவதற்காக. ஆனால் திருமணங்கள் என்று வரும்போது சாதி நிச்சயமாய்ச் சம்பந்தப்படும்.
தொழில் முறைமூலம் பிரிக்கப்பட்ட சாதி தொடர்ந்து வருவதற்கு மதங்களின் பங்கு அளப்பரியது. இன்னும் சாதியம் வேரூன்றி இருப்பதற்கும் மதங்களின் பங்களிப்பு முக்கியமானது என்பது என் கருத்து. நான் என் ஊரில் சாதி பற்றி அறிந்த கதை இதுதான்:கரையார், பள்ளர், வேளாளர் என்று சனம் கதைப்பதைக் கேட்டிருக்கிறேன். ஒருநாள் என் தாயிடம் கேட்கிறேன்:
“அம்மா! கரையார், பள்ளர் எண்டா ஆரம்மா?”
என் தாய் எனக்களித்த பதில் இதுதான்.
“செவத்தியார் கோயில்காரர் பள்ளர், தொம்மையப்பர் கோயில்காரர் கரையார், அந்தோனியார் கோயில்காரர் வெள்ளாளர். இப்ப விளங்கீட்டுதோ?”
ஓமெண்டு தலையாட்டினன். தொழில்களைக் குறித்து எனக்கு சாதி சொல்லப்படவில்லை. அப்படிச் சொல்லியிருந்தால், ‘அப்ப உதில எந்தத் தொழிலும் செய்யாமல் அரசாங்க வேல மட்டும் பாக்கிற நாங்கள் என்ன சாதி?’ என்று கேட்டிருப்பேன் என்று என்தாய் நினைத்தாளோ தெரியாது.
இப்படித்தான் இந்து மதத்திலுமிருந்தது. சாதிக்கொரு கோவிலை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். நல்ல வேளை சாதிக்கொரு புனிதரை அல்லது கடவுளை வைக்கவில்லை. எங்களுரில் வெள்ளாளருக்கு இருக்கும் அந்தோனியார் பக்கத்து ஊரில் கரையாருக்கு. புனிதர்கள் தப்பித்தார்கள். தொழில்கள் மாறி எல்லாரும் தமக்கு வசதிப்பட்ட தொழில்களைச் செய்யத்தொடங்கிய பின்னும், ஏராளமானோர் அரசாங்க வேலையும் தனியார் வியாபார நிறுவனங்களிலும் வேலை செய்யத் தொடங்கிய பின்னும், இன்னும் அந்தத் தொழில்முறைச் சாதி பலமாக உயிரோடிருப்பதற்கு மதங்கள் முக்கிய காரணம்தான். நேரடியாகச் சாதி பற்றிப் பேச முடியாமல் இப்பிடித்தான் எங்களுரில் பேசிக்கொள்வார்கள். எடுத்துக்காட்டாக வேறோரு ஊரிலிருக்கும் ஒரு கரையாரைப் பற்றிப் பேசும்போது,
“அவயள் தொம்மையப்பர் கோயில் ஆக்களெல்லோ.”
எண்டு சொல்லுவினம். ஆனா அந்த ஊரில அப்பிடியொரு கோயிலே இருக்காது. எங்கட ஊர்க் கோயில வச்சே எல்லா இடத்து ஆக்களையும் குறிப்பினம்.
சொந்த ஊரிலயிருந்து 1992 இல இடம்பெயர்ந்து மானிப்பாயில வந்து இருந்தம். ஏராளமான சனம் மானிப்பாய்க்குத்தான் வந்தது. முதல் பள்ளிக்கூடங்களில எல்லாரும் கலந்து ஒண்டாத்தான் ஒரு பிரச்சினையுமில்லாம இருந்தவை. பிறகு அகதி முகாம்கள் அமைக்கப்பட்டன. பிரதானமா மூன்று முகாம்கள். இவற்றில் இரண்டு பெரிய முகாம்கள். அவற்றில் சாதி மதப்பிரச்சினையில்லாமல் எல்லாரும் ஒன்றாகவே இருந்தார்கள். அதில் தனியே ஓர் ஊரைச் சேர்ந்தவர்கள் என்றில்லாமல் எல்லாரையும் குடியமர்த்தினார்கள். இறுதிவரை பிரச்சினையில்லாமலிருந்தது. ஆனால் மூன்றாவதாக அமைக்கப்பட்ட முகாம் தான் சிக்கலைத் தந்தது. அதில் ஆக முப்பது வரையான குடிசைகள்தான். மிகச் சிறிய முகாம். ஆனால் அவ்வளவு பேரும் ஒரே ஊர் அக்கள். அதாவது என் கிராமத்தவர்கள். அதுவும் ஓரே மதத்தவர், ஆனால் இரு சாதிக்காரர். குடிசைகள் அமைக்கும்போதே பிரச்சினை தொடங்கி விட்டது. குடிசை ஒழுங்குகளை மாற்றித் தருமாறு பிரச்சினை. என்னவென்றால் தாங்கள் எல்லாரும் ஒன்றாக இருக்கப் போவதாக இரு தரப்புமே சொன்னார்கள்.
அந்த முன்று முகாம்களுமே மானிப்பாய் அந்தோனியார் கோவில் பங்கு நிர்வாகத்தின்கீழ்தான் இருந்தன. பங்குத்தந்தை இதை ஒப்பிவில்லை. எல்லாரும் கலந்துதான் இருக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாயிருந்தார். ஆனால் சில ‘பெரியவர்கள்’
“சுவாமி! உங்களுக்கேன் பிரச்சின. நாளைக்கு இதுகள் தங்களுக்க ஏதும் பிரச்சினப் பட்டா அது உங்களுக்குத்தானே இடைஞ்சல். பேசாம அவயள் சொல்லிற மாதிரியே விட்டிடலாம்.”
என்று சொல்லி சம்மதிக்க வைத்தாயிற்று. குடிசை ஒழுங்குகள் மாறின. ஒரே பாதை ஒரே ஒழுங்குமுறை என்று இருந்தும் முகாம் இரண்டாகவே இயங்கியது. திடீரென இடையில் வேலி முளைத்தது. இரண்டு பாதைகள் வந்தன. முகாமுக்கு இரண்டு நிர்வாகம் வந்தது. வெறும் முப்பது குடிசைகளுக்குள் ஊரில் நடந்த அத்தை கூத்துக்களும் நடந்தன. நல்ல வேளை பெரியளவு பிரச்சினைகள் வரவில்லை. மனத்தளவில்தான் அந்தப் பிரச்சனை.
ஆனால் யாழ் இடப்பெயர்வின் பின் வன்னிவந்தபின் இந்த நிலைமைகளில் மாற்றம் வந்தது உண்மை. தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் அவர்களை மாற்றிவிட்டதோ என்னவோ. இங்கே சாதிப்பிரச்சினை, வேறுபாடு முற்றாகக் களையப்பட்டதாக நான் சொல்ல வரவில்லை. யாழில் இருந்த நிலைமை நிரம்பவே மாறிவிட்டது. வன்னிக்குள்ளே கூட நிறைய இடப்பெயர்வுகள். இதிலே எதைச் சொந்தம் கொண்டாட முடியும்? அகதிகள் சம்பந்தமாக வேலை செய்தவன் என்ற முறையில் இந்த மாற்றங்களை என்னால் உறுதியாகப் பதிவு செய்ய முடியும். அகதிமுகாம்களில் பல காதல் திருமணங்கள் கூட நடந்ததுண்டு. எதிர்ப்புகள் இருந்தாலும் அதைப்பற்றிக் காதலர்கள் கவலைப்படவில்லை. தமிழீழக் காவல்துறை தான் அவர்களின் நம்பிக்கை. குடும்பம் நடத்தும் பொருளாதார பலம் இருக்கும் பட்சத்திலும் வயது சரியாக இருக்கும் பட்சத்திலும் காதல் கைகூடும். தமிழகத்திலும் இங்கேயும் காவல்துறைக்கு இது ஒரு முக்கிய பணிபோலும்.
ஒருவர் சொன்னார்:
"உவங்கள் ஒரே சாதிக்குள்ள அல்லது மதத்துக்குள்ள காதலெண்டா ஏனோ தானோவெண்டு இருப்பாங்கள். ஆனா சாதிமதம் மாறியெண்டா விழுந்தடிச்சு தலையில தூக்கிவச்சு ஆடுவாங்கள்.”
எனக்கு இந்தக் குற்றச்சாட்டு உண்மையாகப் படவில்லை. அவர்கள் காதலை ஆதரிக்கிறார்களா வரவேற்கிறார்களா என்பதைத் தாண்டி அதை அவர்கள் சாதி மதங்களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகப் பார்க்கிறார்கள் என்பது தெளிவு. பல போராளிகளின் திருமண பந்தம் இவற்றைத்தாண்டி நடந்ததால் சொந்த தாய் தந்தையரின் உறவுகூட இல்லாமல் இருப்பதும் நான் கண்டுள்ளேன். புலிகளின் திருமண முறைகூட (திருமணச் சடங்கு) இன்னும் பலரால் ஏற்றுக்கொள்ளப் படவில்லை. தவிர்க்க முடியாமல்தான் அவற்றிற் கலந்து கொள்கிறார்கள்.
மதங்களின் ஆதிக்கத்தை மக்களிடத்திற் குறைப்பது முக்கியமானது. ஆனால் புலிகளாற்கூட அதைச் சரிவர செய்யமுடியவில்லை. 'இம்' என முன் பிரச்சனை வந்துவிடும். (ஆனால் மாவீரரின் வித்துடல் விதைப்பு விடயத்தில் மட்டும் எந்த சமரசத்துக்கும் இடங்கொடாமல் அவர்களால் இருக்க முடிகிறது.) சாதிப்பிரச்சினையும் மதங்களோடு பின்னிப்பிணைந்திருப்பதால் அவைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது என்பது என் அவதானம்.
வன்னியில் வெளிப்படையாக சாதி பற்றிக் கதைத்தாலோ இன்னொருவரைச் சாதிப்பேர் கொண்டு திட்டினாலோ அது பிரச்சினைக்குரிய விசயம்தான். மனத்தில் என்ன இருந்தாலும் வெளிப்படையாகப் பேச முடியாது. இது எந்தளவுக்குப் பயனளிக்கும் என்று தெரியவில்லை. ஆனால் குழந்தைகள் சிறுவர்கள் சாதிப்பெயர்களைக் கேட்டும் அதன் வசவுகளைக் கேட்டும் வளரும் சந்தர்ப்பங்கள் குறையும். வன்னியில் இளைய சமுதாயம் எப்படியும் களத்தில் பங்களிப்புச் செய்திருக்க வேண்டும். எல்லைப் படையாகப் போயிருக்கிறோம். பெரிய தாக்குதல் நேரங்களில் ஆயுதங்கள் கைப்பற்றல், இராணுவ உடல்களை அப்புறப்படுத்தல், காயக்காரரை அப்புறப்படுத்தல், வழங்கல்களைச் செய்தல், உணவுப்பொதிகளை வினியோகித்தல் என நிறையக் களப்பணிகளைச் செய்திருக்கிறோம். இரத்ததானம் நிறைய. இவற்றிலெல்லாம் இளைய சமுதாயத்திடம் வழமையைவிடப் புரிந்துணர்வொன்று அதிகமாய் ஏற்பட்டிருந்தது, குறிப்பாக எல்லைப் படையாகக் கடமைக்குச் செல்லும்போது. நண்பர்கள் வட்டமென்பது மிகமிக விசாலமானது. சாதியைக் கருத்திற்கொள்ளாதது. யாழ்ப்பாணத்தில் இன்றும்கூட நண்பர்கள் வட்டம் சாதியைக் கருத்திற்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
எம்மக்கள் மத்தியில் மதவேறுபாட்டைப் பிரச்சினையாகக் கொள்வதிலும்விட சாதிவேறுபாட்டைப் பிரச்சனையாய்க் கொள்வது சற்று அதிகம்போல் நான் உணர்கிறேன். ஆனால் காலப்போக்கில் இந்தப்பிரச்சனை ஒழியலாம் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. என் நம்பிக்கை வன்னிதான். அங்கு ஓரளவுக்கு எல்லாருக்கும் சமமான சமூக அங்கீகாரம் வழங்கப்படுவதைக் காணலாம். ஏதோ தம்மாலியன்றவரை புலிகள் சமூகக் கட்டமைப்பைப் பேணுகிறார்கள். முன்பு வன்னியில் பிச்சையெடுக்கும் சிறுவர் சிறுமிகளைக் கண்டிருப்பீர்கள். அது ஒரு கட்டத்தில் பெருகத்தொடங்கியது. ஆனால் இன்று அறவே அந்த நிலையில்லையென்பதை உறுதியாக் கூறுவேன். ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிட்டு நான் வன்னிபற்றிப் பெருமைப்படும் விசயங்களில் இதுவுமொன்று.
அத்தோடு அனைத்துத் தொழில்களுக்கும் இயன்றவரை உரிய அங்கீகாரம் கொடுத்துள்ளார்கள். சீவல் தொழில் செய்பவர்களுக்கு சங்கம் அமைக்கப் பட்டுள்ளது. அவர்களின் வருமானம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 55 வயதுக்கு மேல் ஒரு சீவல் தொழிலாளிக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தொழிலின்போதான இறப்புக்கு அக்குடும்பத்துக்கு நட்ட ஈடு வழங்கப்படுகிறது. தனிப்பட யாருக்கும் கள் விற்க முடியாது. அது சட்ட விரோதமானது.
இதேபோலவே சிகை அலங்கரிப்புத் தொழிலும். (இந்தப் பெயரில்தான் அவர்கள் இயங்குகிறார்கள்). தனிப்பட யாருக்கும் அவர்களின் வீட்டிற்குப் போய் முடி வெட்ட முடியாது. எந்தக் கொம்பனென்றாலும் சிகை அலங்கரிப்பு நிலையத்துக்குத்தான் (சலூனுக்கு) வந்து வெட்ட வேண்டும். சரியான மருத்துவக் காரணங்களின்றி யாரும் வீட்டிற்குச் சென்று முடிவெட்ட முடியாது. இவை ஓரளவுக்கு ஆண்டான் அடிமை மனோபாவத்தை அல்லது முறையை ஒழிக்கும்.
இன்னும் அவர்கள் செய்ய வேண்டியவை நிறைய. ஆனால் அவர்களால் செய்ய முடியாதவை என்றும் நிறைய உண்டு. எடுத்துக்காட்டாக யாழ்ப்பாணத்தில் ‘மணக்கொடைத் தடைச் சட்டம்’ என்ற பெயரில் தமது நீதித்துறையில் சீதனத் தடைச் சட்டத்தையே கொண்டுவந்தார்கள். அச்சட்டத்தின் கீழ் சில வழக்குகளும் நடந்ததாக அறிகிறேன். இச்சட்டம் பற்றி எங்கள் தமிழர்கள் எந்தவித பிரதிபலிப்பையும் காட்டவில்லை. (அன்ரன் பாலசிங்கம் இச்சட்டத்தை ஆதரித்து எழுதி, பின் அவரே வேறொரு பேரில் விமர்சித்து எழுதி மீண்டும் அதற்கு தன் பெயரில் விளக்கம் கொடுத்து கொஞ்சக்காலம் மினக்கிட்டார். ஆனால் ஒருத்தரும் அந்த விவாதத்தில கலந்துகொள்ளேல.) ஆதரவுமில்லை எதிர்ப்புமில்லை. யாழ் இடப்பெயர்வுடன் வன்னிக்கு வந்த நேரத்தில் புலிகளின் நிர்வாகத் தழம்பல்களுக்கிடையில் இச்சட்டம் செயலிழந்துவிட்டது. இன்றும் செயலிழந்த ஒரு சட்டமாகத்தான் அது இருக்கிறது. இவ்விசயத்தில் அவசரப்பட்டார்களோ என்று தோன்றுகிறது.
இப்போது போர் ஓய்ந்துவிட்ட இந்த நேரத்தில் வன்னியில் மீண்டும் பழய பிரச்சினைகள் தலை தூக்கலாம். அவை எப்படிக் கையாளப்படுகின்றனவோ தெரியவில்லை. நானிருக்கும்வரை பெரிதாக எந்த மாற்றமுமில்லை. சுனாமியின்பின் நிலைமை எப்படியிருக்கிறதென்றும் தெரியவில்லை.
என்பதிவில் யாழ்ப்பாணத்தைத் தாக்கியெழுதியதாக ஒரு பார்வை தென்படலாம். அப்படியன்று. என் அனுபவங்களும் பார்வைகளும்தான் அவை. சில விசயங்கள் எனக்குத் தீராத ஆத்திரத்தை வரவழைப்பவை. சென்ற வருடம் யாழ் போனபோது என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி (என்னைப் புலியாக அல்லது வால்பிடியாக நினைத்து, – வன்னியிலிருந்தவனையெல்லாம் அப்பிடித்தான் பார்ப்பார்களோ தெரியாது.)
“டேய் நீதானே அவங்களோட திரிஞ்சனி. உனக்குத் தெரிஞ்சிருக்கும். பொடியளில கரையாரோ வெள்ளாளரோ கூட இருக்கினம்?”
இது. இதுதான் நான் கண்ட யாழ்ப்பாணம். இந்த ஒரு சம்பவத்தை வைத்து நான் யாழ்ப்பாணத்தை எடை போடுவது தவறுதான். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
குறிப்பு: சாதி பற்றிய விடயங்கள் தமிழகத்துக்கும் ஈழத்துக்கும் பொதுவாக இருந்தாலும் அடிப்படையில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இன்னும் ஈழத்தில் அரசுமுறை அங்கீகாரம் சாதிக்குக் கிடைக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் விரும்பியோ விரும்பாமலோ ஒருவன் தன்னைச் சாதிரீதியில் வெளிப்படுத்தியே ஆகவேண்டும்.
'தலித்' என்ற சொல் நான் தமிழகம் சம்பந்தப்பட்டு மட்டுமே கேள்விப்பட்டுள்ளேன். ஈழத்தில் இச்சொற்பாவனை நானறியவில்லை. ஆனால் சிறிரங்கன் பாவிப்பதைப் பார்த்தால் அங்கேயும் இச்சொல் பாவனையிலிருந்திருக்கிறது போலுள்ளது. தெரிந்தவர்கள் சொல்லவும்.
பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு
இதைப்பற்றி ஏற்கெனவே பலர் கதைத்துவிட்டார்கள். காசி தன் பதிவில் இதுபற்றி எழுதியிருந்தார். இங்கே நானும் என்பங்குக்கு எழுதுகிறேன். பெருமளவு காசியின் கருத்துக்களுடன் ஒத்திருக்கிறேன்.
‘உ’கர, ‘ஊ’காரங்கள் சேர்ந்து வரும் உயிர் மெய்களுக்குத் தனித்தனி வரிவடிவம் கொடுக்கப்படுகிறது. ஏனைய உயிர்மெய் வடிவங்கள் போல் இவற்றுக்கும் பொதுவான முறையொன்று இருந்தால் தமிழைப் பயில்வோருக்கு மிக எளிதாக இருக்கும். அத்தோடு கணிணி சம்பந்தப்பட்டும் அனுகூலமுண்டு. இதனால் என்னென்ன அனுகூலங்கள் என்று நான் சொல்ல வரவில்லை. என்னைவிடச் சிறப்பாக வேறு யாராவது சொல்ல முடியும்.
ஒஸ்ரேலியாவில் வசிக்கும் மருத்துவர் பொன்.சத்தியநாதன் இது சம்பந்தமாக முயற்சிகள் எடுத்துள்ளார். அவரும் இதுமாதிரியான கருத்தையே கொண்டுள்ளார். கிரந்தத்துக்கு நாம் பாவிக்கும் குறியீடுகளையே இந்த 'உ'கர 'ஊ'காரமேறிய உயிர்மெய்களுக்குப் பயன்படுத்தலாம். (இதற்குப் பலரின் ஆதரவும் உண்டென்று நினைக்கிறேன்.) ஆனால் அவற்றை அப்படியே பயன்படுத்துவதிற் சில சிக்கல்களுள்ளன. கிரந்தத்தை அப்படியே பயன்படுத்துகிறோமென்ற மனோபாவம் ஒன்று. அதைவிட பக்கவாட்டு அகலம் அதிகமாகும் என்பது மற்றொன்று. இதைக் கருத்திற்கொண்டு அக்குறிகளை செங்குத்தாகப் போடுதல் நலமென்று கருதப்படுகிறது. ‘விடுதலை’ பத்திரிகை இப்படியொரு எழுத்துருவைப் பாவிப்பதாக அறிகிறேன். யாராவது விளக்கவும்.
பொன்.சத்தியநாதன் அவர்கள் வடிவமைத்த ஓர் எழுத்துருவைப் பாவித்து நாலைந்து வசனங்கள் தாயாரித்துள்ளேன். அவற்றில் 'உ'கர, 'ஊகார உயிர்மெய்களை உங்களாற் புரிந்து கொள்ளக் கூடியவாறுள்ளதா என்பதைத் தெரிவிக்கவும். படத்துக்குக் கீழே அவற்றின் தற்போதைய வடிவத்தைத் தந்துள்ளேன். இவ் எழுத்துருவில் டி,டீ என்பவற்றுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழமையாக நாம் பாவிப்பதுபோலன்றி, ‘ட’வுடன் விசிறி வரும். இந்த மாற்றங்களும் தேவையென்பது என் கருத்து. மேலதிகமாக இரு இடங்களை இவ்வெழுத்துக்களுக்காக ஒதுக்கியுள்ளோம். இவற்றையும் உங்களாற் புரிந்து கொள்ள முடிகிறதா எனப்பாருங்கள்.
இது பற்றிய கருத்துக்களைப் பகிரவும். இதிலிருக்கும் குறைநிறைகளை அலச வேண்டும். எனக்கு இம்மாற்றங்கள் பிடித்துள்ளது. மேலும் என்னென்ன செய்யலாமென்பதையும் சொல்லுங்கள். செய்யுங்கள். எழுத்துரு சம்பந்தமாக பரவலான விவாதமொன்று தேவை. ஒருங்குறி சம்பந்தமாகவும் பிரச்சினைகளுள்ளன. திடீரென இம்மாற்றங்கள் குழப்பத்தைத் தரலாம். வாசிப்பதற்குச் சற்றுச் சிரமமாக இருக்கலாம். ஆனால் இவற்றின் பலாபலன்கள் முக்கியமானதென்றால் அவற்றைச் செயற்படுத்துவது முக்கியம். இதிற் கடினமென்று சொல்ல எதுவுமில்லை. 13 எழுத்துத் திருத்தங்களைக் கொண்டு வந்தபோது நாம் ஏற்றுக்கொள்ளவில்லையா? வெறும் ஈராண்டுகளுக்குள் சரளமாக எழுதப்பழகவில்லையா? அப்படிப்பட்ட மாற்றம்தான் இதுவும்.
ஒலிவடிவம் தான் முதன்மையானது. வரிவடிவம் மாறாமலே இருப்பதன்று. காலத்துக்குக் காலம் அது மாற்றமடைந்து வந்துள்ளது. இதுபற்றி வேறிடத்திற் பேசியாகிவிட்டது. ஆக வரிவடிவத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்க முடியாது.முக்கியமாக அச்சில் வந்துவிட்ட இலட்சக்க்ணக்கான புத்தகங்களை என்ன செய்வது என்ற கேள்வியுண்டு. என்னைப் பொறுத்தவரை பழய முறை, புது முறை இரண்டிலுமே வாசிக்கத்தக்க தேர்ச்சி இயல்பாக மக்களிடம் இருக்கும். இன்று எழுத்துச் சீர்திருத்தத்தின்பின் நாமந்த 13 எழுத்துவடிவங்களையும் இருமுறைகளிலும் வாசித்தறியப் பழகிக்கொண்ட மாதிரி.
இந்த மாற்றத்தின்படி நமக்கு உயிரெழுத்துக்கள் பதினொன்று, மெய்யெழுத்துக்கள் பதினெட்டு, உயிர்மெய்யைக்குறிக்கப் பாவிக்கும் குறிகள் (கீற்றுக்கள்?) ஒன்பது என முப்பத்தெட்டு விசைகள் மட்டுமே விசைப்பலகையில் தேவை. ‘ஃ’ ஐயும் சேர்த்தால் நாற்பது. (உயிரில் ‘ஒள’ என்தற்குத் தனியான விசை தேவையில்லை. அதேபோல் உயிர் மெய்யில் ‘ஒள’ இன் வரிசையில் வரும் அனைத்துக்கும் தனிக்கீற்றுத் தேவையில்லை.)
இங்கே வழமையான ‘ள’கரத்தை ‘ஒள’க்குப் பாவிப்பதைப் பொன்.சத்தியநாதன் எதிர்க்கிறார். அதற்கென தனியான, ‘ள’கரத்துடன் குழப்பாத வரிவடிவமொன்றின் தேவையை அவர் விளக்குகிறார். இதற்கு சுளியற்ற ‘ள’கர வரிவடிவத்தை இப்போது அவர் பரிந்துரைக்கிறார். ஆனால் சிறிய எழுத்துருக்களில் வித்தியாசம் தெரியுமளவுக்கு இருக்க வேண்டும். இதே வடிவத்தை ‘ஊ’காரத்தில் வரும் ‘ள’கரத்துக்கு மாற்றாகவும் பாவிக்க வேண்டுமென்பது அவர் வாதம்.
1.அவனுக்குப் பிடித்தது எனக்கும் பிடிக்கும்.
2.முருகனை வேண்டுங்கள்.
3.எனக்கும் இது வேண்டும்.
4.இவை உங்களுக்குப் புரிகிறதா?
5.நான் கூடவே வரவா?
6.ஊழிப்பெருவினை.
7.ஒளடதம் பற்றி ஒளவையார் எழுதினார்.
8.இந்த முறையை ஏற்கிறீர்களா?
இனிச் சும்மா பம்பலாக…..
கண்ணன் சொன்னது போல் தனியே உயிர் மற்றும் மெய்களைக்கொண்டே எழுதும் முறையும் நன்று போலவே படுகிறது, என்று நான் சொன்னால் என்னை அடிக்க ஒரு கூட்டமே தயாராகி வரும். ஆகவே இத்தோடு முடிக்கிறேன்.முடிந்தால் கண்ணன் முறையில் வாசித்துப் புரிந்து கொள்ளுங்கள். (மெய்யிற்குக் குற்றுப்போடாமல் எழுதுவது என் ஆலோசனை. ஆனால் இங்கே குற்றுப்போட்டே எழுதுகிறேன்.)
ப்ஓங்க்அட்ஆ ம்அட்அப்ப்அச்அங்க்அளஆ.
இது புரிந்துவிட்டால் அடுத்த வளர்ச்சி. உயிரில் நெடிலுக்கு ஏன் தனியெழுத்து வேண்டும். குறிலையே இருமுறை எழுதினால் ஆயிற்று. (ஆங்கிலத்தைப்போல. எமக்கு 25 போதும்.)
‘ஐ’காரத்தை முறையே அ,இ ஆகியவற்றின் இணைவொலியாகவும் ‘ஒள’காரத்தை அ,உ ஆகியவற்றின் இணைவொலியாகவும் கொண்டால் இன்னும் இரண்டு குறைந்து 23 எழுத்துக்களுடன் தமிழ் தயார். இதையும் முயன்று பாருங்கள்.
ப்ஒஒங்க்அட்அஅ ம்அட்அப்ப்அச்அங்க்அள்அஅ.அஇய்அஇய்ஒஒ ந்எஎர்அம்அஅய்இட்ட்உத்உ வ்அர்அட்எஎ?
பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு
முசுப்பாத்தி...
இது எம்மிடையே(ஈழத்தில்) பேச்சு வழக்கில் பரவலான பாவனையிலிருக்கும் சொல். பம்பல் என்பதன் ஒத்த கருத்தாகப் பாவிக்கிறோம். பம்பல் என்பதும் புரியாதவர்களுக்கு:
நகைச்சுவையாகப் பேசுதல் அல்லது நகைச்சுவை எனும் பொருளில் பாவிக்கப்படுகிறது.
'இது நல்ல முசுப்பாத்தி' என்றால் 'நல்ல நகைச்சுவை' என்று கருத்து. 'முசுப்பாத்தியான ஆள்' என்றால் 'நகைச்சுவையான மனிதன்'.
'முசுப்பாத்தியாகப் பேசக்கூடியவர்' என்றால் 'நகைச்சுவையாகப் பேசக்கூடியவர்'.
இச்சொல்லை நானும் இன்னும் ஈழத்தைச் சேந்த சிலரும் வலைப்பதிவிற் பாவித்துள்ளோம். இந்தச் சொல் எப்படி வந்தது என்று சிந்தித்ததுண்டு. அனேகமாய் ஏதாவது ஐரோப்பிய மொழியிலிருந்து தான் வந்திருக்கும் என்று நினைத்திருந்தேன். இன்றுதான் ஒரு இச்சொல் பற்றி அறியும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.
பண்டிதர் வீ. பரந்தாமன் எழுதியுள்ள ஒரு புத்தகத்தில் (வேர் - அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகர முதலி. – பெயரைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்) இச்சொல் பற்றி எழுதியுள்ளார். ஆச்சரியமாயிருக்கிறது, இது தமிழ்ச்சொல் என்பது. இதை முனைவர் கு. அரசேந்திரனும் வியந்துள்ளார். இனி பண்டிதர் பரந்தாமனின் எழுத்து அப்படியே.
முசுப்பாத்தி: முசி – (முசிப்பு + ஆற்றி) – முசிப்பாற்றி – முசிப்பாத்தி = இளைப்பாறுகை, இளைப்பாற்றுகைப் பொருட்டுப் பேசும் வேடிக்கைப் பேச்சு, நகையாட்டு.
முசிதல் = 1.அறுதல்.
2.கசங்குதல்.
3.களைத்தல்.
4.ஊக்கங் குன்றுதல்.
5.மெலிதல் “அற்பமனம் முசியாள்” (அரிச்சந்திர மயான காண்டம். 115) 6.அழிதல்.
முசித்தல் = 1.களைத்தல்.
2.வருந்துதல்.
3.மெலிதல்.
4.அழிதல்.
5.கசங்குதல்.
முசிப்பாறுதல் = இளைப்பாறுதல். (Winslow's Tamil English Dictionary)
முசிப்பாற்றி – முசிப்பாத்தி - முசுப்பாத்தி.
சிலர் அறியாமையினால் இச்சொல்லை பிறமொழிச் சொல்லெனக் கூறுகின்றனர். அதற்கு இச்சொல் பிழையாக, ‘முஸ்பாத்தி’ என்று உச்சரிக்கப்படுவதும் ஒரு காரணமாகும். இவ்வாறே பல தமிழ்ச் சொற்களைப் பிறமொழி ஒலிகளில் உச்சரித்து வேற்று மொழிச் சொற்களாகக் காட்டுகின்றனர். பண்டிதரேயானாலும் சொல்லியல் மொழிநூற்புலமையிலாராயின் பொருடெரியிற் சொல்வதேயன்றி, அச்சொல் இன்ன மொழிச் சொல்லென்று துணிந்து கூறுதலை ஒழித்தல் வேண்டும்.
பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு
எல்லாருக்கும் இந்தச் சொல் தெரியுமோ தெரியாது. எங்கட இடத்தில குறிப்பிட்ட இளமட்டத்தில இந்தச்சொல் பாவனையில இருந்திச்சு. இன்னொருத்தனைத் திட்டவோ மட்டந்தட்டி நக்கலடிக்கவோ இந்தச் சொல்லைப் பாவிப்பம்.
ஒருத்தன் விளங்காத்தனமாக அல்லது சிறுபிள்ளைத்தனமாக ஏதாவது செய்தால் அல்லது தொடர்ச்சியாக ஒரேதவறைச் செய்தால், எப்படி முயன்றும் ஒருத்தனைத் திருத்த முடியாதென்று எரிச்சல் தோன்றும்போது இச்சொல்லைப் பாவித்துத் திட்டுவதுண்டு.'அவனொரு அப்பக்கோப்பை. ஒரு இழவும் விளங்காது' எண்டு ஒருத்தனத் திட்டுவோம். அதேபோல் திட்டும் வாங்குவோம்.
இதன் சரியான தோற்றம், காரணகாரியங்கள் எதுவுமறியாமலேயே ஆனால் சரியான சந்தர்ப்பங்களில் இச்சொல்லைப் பாவிப்போம். எந்த இடங்களில் இச்சொல்லைப் பாவிப்பதென எல்லாருக்கும் தெரிந்திருந்தது.
சரி இந்தச் சொல்லின் சரியான அர்த்தத்துக்கு வருவோம். அப்பக்கோப்பை என்றால் அப்பம் சுடும் தாச்சியைக் குறிக்கும். அப்பத்தாச்சி என்ன செய்யும்? எதையும் தன்னிடம் வைத்துக்கொள்ளாது. அதில் ஊற்றும் மாவை அப்படியே அப்பமாக்கி சிறுதுண்டுகூட தாச்சியில் ஒட்டாதபடிக்கு அழகாக அப்படியே திருப்பிக்கொடுத்துவிடும்.
தோசைக்கல்லிற்கூட மாவு ஒட்டும், இட்லிச்சட்டியில் மாவு ஒட்டும். ஆனால் அப்பத்தாச்சியில் எப்போதாவது மாவு ஒட்டிப்பார்த்திருக்கிறீர்களா? அதுதான் அந்தச் சட்டியின் சிறப்பு.
இங்கே இச்சொல்லை அப்பக்கோப்பை என்று மாற்றி ஒருவனுக்கு அல்லது ஒருத்திக்கு (இதுகளப் போடாட்டி பிறகு சண்டைக்கு வருவியள்) திட்டுவதற்குப் பாவிக்கிறோம். இதன் அர்த்தம் என்னவென்றால் எப்படி அப்பச்சட்டி தனக்கென எதையும் வைத்துக்கொள்ளாமல் தனக்குள் ஊற்றப்படும் சகலதையும் திருப்பிக்கொடுத்துவிடுகிறதோ அதேபோல் இவர்களும் எதையும் உள்வாங்கிக்கொள்வதில்லை. அனைத்தையும் திறந்துவிடுவார்கள். இவர்களுக்கு எப்படிச் சொல்லிக்கொடுத்தாலும் திருந்தப்போவதில்லை என்ற கருத்தில் இச்சொல் பாவிக்கப்படுகிறது.
இன்றும் ஏராளமானவர்கள் இச்சொல்லின் விளக்கத்தை அறியாமல் பாவித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு விளக்கும் முகமாகவே இப்பதிவு போட்டேன்.
திடீரென்று ஏனிந்தச் சொல் பற்றி யோசினை வந்ததெண்டா, இப்ப தான் கொஞ்சத்துக்கு முதல் ஒருத்தரை நேர திட்டிப்போட்டன். அவருக்கு இந்தச்சொல் புதுசு. அதுக்கு அவர் விளக்கம் கேட்டார். அவருக்கு விளங்கப்டுத்தின கையோட அதையே ஒரு பதிவாப்போடுறன்.
அப்பக்கோப்பையள் ஆராவது என்ர வலைப்பதிவப் பாக்க வருவினந்தானே. அவையளுக்கு ஒரு விளக்கமா இருக்கட்டுமெண்டு போட்டு வைக்கிறன்.
'பன்னாடை' எண்டு திட்டுறதுக்கும் இதுக்கும் கிட்டத்தட்ட ஒரே பொருளாத்தான் இருக்கு. ஆனா பன்னாடை எண்டு திட்டினா கடுமையாக் கோவம் வரும். மாறாக அப்பக்கோப்பையெண்டது அதே கருத்தைத்தாற ஆனா ஏச்சு வாங்கிறவன்(ள்) சிரிச்சுக்கொண்டே கேட்டுக்கொண்டு போற மாதியொரு சொல்லு.
நீங்களும் ஏன் திட்டுவதற்கோ ஏசுவதற்கோ இந்தச்சொல்லைப் பாவிக்கக்கூடாது?
முயன்றுபாருங்கள்.
பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு
யாழிலிருந்து வரும் உதயன் பத்திரிகையில் அண்மையில் வந்த செய்தித் தலைப்பு இது.
“மகிந்தவுடன் சந்திரிக்கா லடாய்.”
இந்த 'லடாய்' என்ற சொல்லுக்கான விளக்கம் எனக்குத் தெரிந்திருந்தது என்றாலும் திடீரென உதயனில் இத்தலைப்பைப் பார்த்ததும் ஓர் அதிர்ச்சி.
இந்த ‘லடாய்’ என்ற சொல் யாழ்ப்பாணத்தில் யார் பயன்படுத்துவது? நானறிய யாரும் இச்சொல்லைப் பேச்சுவழக்கிற்கூடப் பயன்படுத்தியதில்லை. ஆனால் யாழ்ப்பாணத்தில் மட்டுமே விற்பனையாகும் உதயன் பத்திரிகை இச்சொல்லை தமிழகத்திலிருந்து கடன்பெற்று யாழ்ப்பாணத்தில் செய்தித்தலைப்பாகப் போடுகிறது.
இதுமட்டுமன்று, இதற்கு முன்னரும் ஓரிரு தடவைகள், இப்படியான மக்களிடத்தில் அறவே பயன்பாட்டிலில்லாத சொற்களை வைத்துச் செய்தித்தலைப்புக்கள் போடப்பட்டன.
“மண்ணெண்ணெய் அபேஸ், குமுறுகிறார் மகேஸ்” (மகேஸ் அப்போது யாழ்மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர்)
“இன்னாருடன் இன்னார் ஜல்மா”
கல்தா, மேலும் பல சினிமாக் கிசுகிசுப்பாணிச் சொற்கள்.
மக்களிடத்தில் நல்ல தமிழ்ச்சொற்களைப் பரப்புவதென்பது பத்திரிகைகள் முன்னுள்ள கடமை. ஆனால் இங்கே மாறி நடக்கிறது. மக்களிடத்தில் இயல்பான பயன்பாட்டிலிருக்கும் சொற்களைப் போட்டு செய்தி எழுதுவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அறவே பயன்பாட்டிலில்லாத, அதேநேரம் அறிமுகப்படுத்தியாகவேண்டிய கட்டாயமற்ற சொற்களைப் போட்டு பத்திரிகை நடத்துவதென்பது அச்சொற்களை வலிந்து மக்கள்மீது திணிக்கும் முயற்சியாகவே படுகிறது.
உண்மையில் தமிழகத்தின் ஆனந்தவிகடன், குமுதம், குங்கும வகையறாச் சஞ்சிகைகளைப் படிக்காத யாழ்ப்பாணத்தானுக்கு ‘லடாய்’ என்றால் என்னவென்று தெரியப்போவதில்லை. இதுபற்றி முன்பு உதயனில் பணியாற்றிய ஒருவருடன் கதைத்தபோது, உதயன்தான் பல சொற்களை யாழ்ப்பாணத்துக்கு அறிமுகப்படுத்தியதென்றார். என்னை வெறுப்பேற்ற அதைப்பெருமையாகச் சொல்லி சட்டைக் கொலரை இழுத்துவிட்டுக்கொண்டார்.
உதயன் மட்டுமாவது பரவாயில்லை. அதன் சகோதரப் பத்திரிகையான சுடரொளி பயன்படுத்தும் சொற்களும் வசனநடையும் அப்பட்டமான தமிழகப் படியெடுப்பு.
யார் கண்டது? எதிர்காலத்தில் உதயனின் இச்செயல் பெரிய புரட்சியாகக்கூடச் சொல்லப்படலாம். இச்சொற்கள் யாழ்ப்பாணத்தில் சரளமான பயன்பாட்டுக்கு வந்துவிடவும்கூடும்.
பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு
ஆகவே ஓர் அவசரப்பதிவு.
நான் சில இலக்கணத் தவறுகளைத் தெரிந்தே செய்கிறேன். அதாவது மீறுகிறேன்.
பல இடங்களில் 'ல்' --'த்' புணர்ச்சியைத் தெரிந்தே தவிர்க்கிறேன்.
காவல் + துறை = காவற்றுறை
கல் + தூண் = கற்றூண்
கடல் + தொழில் = கடற்றொழில்
இவை, காவல் துறை, கல் தூண், கடல் தொழில் என்றே பெரும்பாலும் எழுதப்படுகின்றன. சிலர் இடையிலே 'த்' போடுவார்கள். இப்புணர்ச்சிவிதியைக் கடைப்பிடிப்பதில் எனக்கொன்றும் சிக்கலில்லை. வாசிப்பவருக்கு, பெரும்பாலும் புழக்கத்திலில்லாத சொல் சங்கடத்தைக் கொடுக்குமென்பது தவிர்த்தலுக்கான ஒரு காரணம்.
மேலும் நான் உச்சரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவன். என்னிடம் யாராவது வலிமிகும் (ஒற்று வரும்) , வலிமிகா (ஒற்று மிகா) இடங்கள் பற்றிக் கேட்டால் நான் சொல்வது:
'நீ எப்படி உச்சரிக்கிறாயோ அப்படி எழுது'
என்பதுதான். எந்தெந்த இடங்களில் ஒற்று வரவேண்டுமோ அந்தந்த இடங்களிலெல்லாம் ஒற்றுப்போட்டுத்தான் நாம் உச்சரிக்கிறோம். இது தொன்னூறு வீதம் பொருந்தும். அதேபோல் சொற்புணர்ச்சியும் எமது உச்சரிப்பில் தான் (உச்சரிப்பிற்றான் என்று எழுத முடியுமா?) பெரிதும் தங்கியுள்ளது.
ஆனால் கடற்றொழில், காவற்றுறை, கற்றூண் என்று நாங்கள் யாரும் பேச்சுவழக்கில் உச்சரிப்பதில்லை.
நிறையப் பொழுதுகளில் 'த்' சேர்த்து உச்சரிக்கிறோம்.
கடல் + தொழில் = கடல்த்தொழில்
காவல் + துறை = காவல்த்துறை
கல் + தூண் = கல்த்தூண்
அதாவது இப்புணர்ச்சிவிதி ('ல்'-- 'த்') எங்கள் பேச்சுவழக்கிலிருந்து மிகமிக விலத்தி நிற்கிறது. எம்மால் உச்சரிப்பிற் கடைப்பிடிக்க முடியாத விதியை, அல்லது இயல்பினின்று பிறழ்ந்த விதியை ஏன் காவித்திரிய வேண்டுமென்ற கேள்வி எனக்குண்டு.
இலக்கண விதிகளனைத்தும் இயல்பினின்று உருவானவைதாம் என்ற தெளிவு எனக்குண்டு. எனவே எம்முன்னோர்களின் உச்சரிப்பில் இயல்பாக இப்புணர்ச்சி இருந்திருக்க வேண்டும். ஆனால் இன்று நாம் அதைத் தொலைத்துவிட்டோம் ('ழ'கர உச்சரிப்பைத் தொலைத்ததைப் போல). இன்றைய நிலையில் இப்புணர்ச்சிவிதியைக் கைக்கொள்ளத்தான் வேண்டுமா என்ற கேள்வி எனக்குண்டு. நானறிய, பெருமளவானோர் இக்குறிப்பிட்ட விதியைக் கைக்கொள்வதிலிருந்து விலகிவிட்டனர். சிக்கலான இச்சந்தர்ப்பத்தில் சொற்களைப் புணர்த்தாமல் இரண்டையும் தனித்தனியே எழுதும்படி அறிவுறுத்துகின்றனர், காவல் துறை, கடல் தொழில் என்றவாறு.
நானும் இச்சந்தர்ப்பங்களில் நிலைமைக்கு ஏற்றவாறு சரியாகப் புணர்த்தியோ, புணர்த்தாமல் தனித்தனியாகவோ எழுதுகிறேன். (ஆனால் இடையில் 'த்' போடுவதில்லை. விதியைக் கடைப்பிடிக்கவில்லையென்று இருக்கலாமேயொழிய, புதிய விதி உருவாக்கியவன் என்று இருக்கக்கூடாது:-).
இதைப்பற்றி வலைப்பதிவாளர்களின் கருத்தென்ன?
சரியானபடி புணர்த்தியெழுதினால் வாசிக்கும்போது அந்நியத் தன்மையை யாராவது உணர்ந்திருக்கிறீர்களா? (இதன்பொருள் அச்சொல் புரியாது என்பதன்று)
நான் மேலே எழுதியது விளங்கவில்லையென்றால் அதையும் சொல்லுங்கள். அடுத்தமுறை கவனமெடுக்கிறேன்.
இலக்கணத்தைக் கடைப்பித்தல் தொடர்பில் மேற்கூறிய விதியொன்றின் மீது மட்டுந்தான் எனக்குச் சிக்கல். இதுகூட ஒவ்வாத தன்மைகொண்ட விதி என்பதால் மட்டுமே. கடைப்பிடிக்கத்தான் வேண்டுமென்று வந்தால் அதில் எனக்கு எந்தச் சிக்கலுமில்லை.
மற்றும்படி ஏனைய நடைமுறைகள் பற்றி எவ்விதக் குறையுமில்லை. அவை கடைப்பிடிக்கப்பட வேண்டியவையென்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.
பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு
ஒருவனை அல்லது ஒருத்தியை ஏதாவதொரு வேலையாய் அனுப்பி, அந்நபர் எங்காவது "மிலாந்தி"க்கொண்டு நின்றால் அவர்களைக் குறிக்க ஒரு சொற்றொடர் ஈழத்தில் - குறைந்தபட்சம் யாழ்ப்பாணத்தில் பாவிக்கப்படுகிறது. அதுதான் மேற்சொன்ன "நோவா விட்ட காகம்".
இத்தொடர் மத பேதங்களின்றி எல்லாராலும் பயன்படுத்தப்படுவது குறித்து முதலில் ஆச்சரியப்பட்டேன்.
சரி. அதென்ன 'நோவா விட்ட காகம்'?
விவிலியத்தில் நோவா என்ற பாத்திரத்தை வைத்து ஒரு கதை உண்டு. அதுபற்றி சிறில் சுருக்கமாக எழுதியுள்ளார். இங்கே விவிலியத்தைத் தாண்டிய ஒரு கதையில், நோவா வெள்ளம் வடிந்துவிட்டதா என்பதை அறிய முதலில் பறக்க விட்டது ஒரு காகத்தைத் தானாம். பறந்த காகம் சேதி சொல்லத் திரும்ப வரவேயில்லை. அது பிணங்களைக் கண்டதும் அங்கேயே குந்திவிட்டது போலும். காகம் வரும்வருமென்று காத்திருந்து ஏமாந்த நோவா பின்புதான் புறாவைப் பறக்கவிட்டாராம். அது பின் ஒலிவ் கிளையுடன் வந்து சேர்ந்ததாக அக்கதை தொடரும்.
காகத்தை அனுப்பிவிட்டுக் காத்திருந்த நோவாவின் நிலைதான், ஏதாவது வேலையாக ஒருவரை அனுப்பிவிட்டுக் காத்திருப்பவர்களினதும். குறிப்பிட்ட நேரத்துக்குள் அவர் வரவில்லையென்றால், அவர்தான் "நோவா விட்ட காகம்".
சின்ன வயசில் நானுட்பட நிறையப் பேர் இந்தச் சொற்றொடரால் திட்டப்பட்டிருப்போம். உங்களில் யாருக்கேனும் இப்படித் திட்டு வாங்கியது ஞாபகமிருக்கா?
இதே உணர்வை வெளிப்படுத்தப் பாவிக்கப்படும் வேறு சொற்றொடர்கள் இருக்கா? ("கப்பல் பார்க்கப்போன சேவகன்" கதையைச் சொல்லாதீர்கள். அதுவேறு இதுவேறு.)
அல்லது இதே சொற்றொடருக்கு வேறேதும் கதைகளிருக்கா?
தமிழகத்தில் இச்சொற்றொடர் இருக்கா?
பின்னூட்டங்களுடன் கூடிய மூலப்பதிவு