வட கிழக்கு மாநிலங்களில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை எதிர்த்து கடந்த 14 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்து வரும், மனித உரிமை ஆர்வலர் இரோம் ஷர்மிளாவை விடுதலை செய்யுமாறு மணிப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு இம்பால் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.குணேஷ்வர் சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:

ஷர்மிளா மீது தற்கொலைக்கு முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. அவர் மீது வேறு எந்த வழக்குகளும் இல்லை என்றால், ஷர்மிளாவை உடனடியாக விடுதலை செய்யலாம் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் 1958ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இரோம் ஷர்மிளா கடந்த 2000ஆம் ஆண்டு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினரால் இம்பால் விமான நிலையம் அருகே 10 அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, ஷர்மிளா இந்தப் போராட்டத்தைத் தொடங்கினார்.

தனது 28ஆவது வயதில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியதில் இருந்து, கடந்த 14 ஆண்டுகளாக அந்தப் போராட்டத்தை ஷர்மிளா தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் ஷர்மிளாவின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு, அவரை மருத்துவமனையில் அனுமதித்து மாநில அரசு சிகிச்சை அளித்து வருகிறது.

இரோம் சர்மிளாவின் போராட்ட வாழ்க்கை தெரிந்துகொள்ள இரோம் சர்மிளா பத்தாண்டுகளாய் தொடரும் போராட்டம் என்கிற புத்தகத்தைப் படியுங்கள். உண்பதை மறுத்து கட்டாயமாக மூக்கில் சொருகப்பட்ட குழாய் மூலம் உயிர்வாழும் தன் போராட்டத்தை விட்டுக் கொடுக்காத அந்தப் பெண்ணின் மன உறுதி நமக்கு உரமேற்றக்கூடியது.

மு.ந. புகழேந்தியின் மொழிபெயர்ப்பில், எதிர் வெளியீடு இந்நூலை வெளியிட்டிருக்கிறது. இரோம் சர்மிளாவின் எளிமையான வாழ்க்கையில் ஆரம்பித்து அவர் எப்படி போராட்ட பாதைக்குத் திரும்பினார், மணிப்பூரில் இந்திய ராணுவம் எப்படி அடக்குமுறையை கட்டவிழ்க்கிறது, அப்பாவி மக்கள்  கொல்லப்படுவது எப்படி சாதாரண நிகழ்வாகிறது, தன் போராட்டத்துக்கு வந்த இடையூறுகளை இரோம் எப்படி எதிர்கொண்டார் என எளிமையான மொழியில், முக்கியமாக எந்தவித புனைவும் இல்லாமல் இந்த நூல் சொல்கிறது.

அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் சின்ன சின்ன பிரச்னைகளுக்கெல்லாம் துவண்டு போய்விடுகிறோம். இரோமின் வாழ்க்கை நமக்கொரு படிப்பினையைத் தருகிறது. நமக்கான உந்துசக்தியை தருகிறது. ஒவ்வொரு பெண்ணும் இரோமின் வாழ்க்கையை படிக்க வேண்டும். அதற்கு புனைவு கலக்காத இந்த நூலை நாம் பரிந்துரைக்கிறோம்.

இரோம் சர்மிளா

பத்தாண்டுகளாய் தொடரும் போராட்டம்

எழுத்து: மு. ந. புகழேந்தி

எதிர் வெளியீடு
96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி – 642 002
தொலைபேசி: 04259 226012
கைபேசி: 98650 05084
மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com

எதிர் வெளியீடு இணையதளத்தில் இந்த நூலை வாங்கலாம். தமிழகத்துக்குள் நூல் வாங்குவோருக்கு கூரியர் செலவு இலவசமாக தருகிறார்கள்.