குறிச்சொற்கள் » சுவாரஸ்யம்

"அழகு" என்ற சொல் என்றும் அழகானதன்று

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 7 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

முகத்தை அழகென்றும் முடியை அழகென்றும் தமிழை அழகென்றும் தன்னை அழகென்றும் சொல்கின்ற உலகப்போக்கு என்பது இன்று நேற்று தோன்றியதல்ல. அழகை ஆராதிக்கும் பழக்கம் ஒவ்வொரு மொழியிலும் ஆளப்பட்டிருக்கும் விதமே தனியழகானதுதான்.

ஆனால், அழகு என்பது வதனத்தின் முகவரிக்குக் கொடுக்கும் முத்திரைதான் என்றால் இல்லையென்றே சொல்வேன். நகரும் மலைகள், மனதோடு பேசும் சிரசுகள், மரங்களை வெட்டிச்செல்லும் காற்றின் சீற்றம் எல்லாமும்தான் அழகு நிறைந்தவை.

வாழ்க்கை என்பதுகூட ஒருசொல்லாக இனங்கண்டுவிடப்படக் கூடாதது. அது அழகான வாழ்க்கை என்ற அடைமொழிக்குள்ளும் அடக்கப்படக்கூடாதது. பசி கொண்ட வாழ்க்கையின் பெறுதிக்கு கிடைக்கின்ற பரிசு — அழகு. வியர்வை சிந்தி உழைக்கின்ற வாழ்விற்கு கொடுக்கின்ற வலிகள் — அழகு. பொய் கொண்டு சேர்க்கும் மொழியின் விந்தையான நடனம் — அழகு.

“அழகு” என்பது ஒரு பொருளா என்றால் இல்லை என்றுதான் பதில். பொருளின் அழகைக்கூட்டும் அடைமொழிதான் அழகு என்பது வெளிப்படையானது. வான நட்சத்திரங்களின் பெறுதியான நீயும், அழகின் அடைமொழிதான்.

சூரியன் கக்கும் சூட்டிற்கு புதிதாக யாரும் பெயர் வைப்பதில்லை. அதுவொரு அழகிய சூடு என்று யாரும் சொல்லிவிட்டதாகத் தகவலில்லை. எரிமலைகளின் பெறுதிகளாய் வருகின்ற தீக்குழம்பின் அளவைக் கண்டு யாரும் அதற்கு பெயர் வைத்ததாய் வரலாறு இல்லை. அழகிய எரிமலை என்று எரிமலையை ஆராதிப்பதாய் கேள்விப்பட்டதில்லை.

உன் உணர்வுத்தீயில் வெந்து ஆவியாகும் உணர்ச்சிகளின் பெறுதிகளுக்கு யாரும் அழகு என்று அர்த்தம் சொல்வதில்லை. அழகான உணர்வுகளுக்கு அழகு என்ற அடைமொழி இல்லாமலேயே அழகாய்த் தோன்றிவிட முடிகிறது.

அழகு என்பது எப்போதும் பாராட்டப்படும் வார்த்தையாக நீ எண்ணிக் கொள்ளக் கூடாது. நீ “அழகு” என்ற அடைமொழிக்குள் காண்கின்ற எழிலை, இன்னொருவன், “அசிங்கம்” என்பதாய் உணர்வதும் மனித இயல்பின் அழகிய நிலை.

அழகு என்பதை உச்சரிக்கும் மொழியின் கனத்தில்தான் அதன் அர்த்தம் மிளிர்கிறது. வாயும் மனதும் எண்ணிச் சொல்கின்ற வார்த்தையில் கலந்து நிற்கும் அழகு என்ற மொழியின் பாவனைதான் உண்மையானது.

நீ, அழகு என்ற அடைமொழியை ஒரு பொருளோடு பொருத்திக் கொள்ள முனையாதே! அழகு என்பது உன்னோடு பொருந்திக் கொள்ளட்டும்.

- உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். :) நான் இங்கே – Follow @enathu

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

கட்டுரை

மனத்திற்கு ஒரு மடல்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 23 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

நீ பேசுவதையோ, எழுதுவதையோ இன்னொருவன் புரிந்து கொள்கின்ற விதம் என்பதை உன்னால் தீர்மானிக்க முடியாது. அதைத் தீர்மானிக்க முனையவும் கூடாது.

பொதுத்தளத்தில் எழுதப்படுகின்ற எழுத்துக்களாகட்டும், பொதுக்கூட்டங்களில் ஆற்றப்படும் உரைகளாகட்டும் — ஒவ்வொரு தனிநபரையும் வெவ்வேறு வகையில் சந்திக்கின்றன.

உன் எழுத்துக்கள், ஒருவனின் ஏற்படுத்தும் பாதிப்பு என்பதன் மடங்குகள் தான், நீ ஆயிரம் பேர்களில் ஏற்படுத்தும் பாதிப்பின் அளவாக இருக்க முடியாது. அது அப்படி ஒருபோதும் நடப்பதுவுமில்லை.

ஒருவனுக்கு உன் உரை மூலம் நீ சொல்ல வந்த விடயம் கொண்டுவரும் தாக்கத்தை கூட்டத்திலுள்ள மொத்த சனத்தொகையால் பெருக்கி, உன் உரையின் நிலையில் கூட்டத்திலுள்ளோர்கள் பெற்ற அனுபவ உயர்நிலையை நீ எண்ணி மகிழ்ச்சி கொள்ளக்கூடாது. அது அவ்வாறு பெருக்கி வருகின்ற கணிதமல்ல.

ஒருவனிடம் காட்டுகின்ற அன்பின் வடிவத்தை, ஒரு கூட்டத்திடம் உன்னால் காட்ட முடியாது. அதேபோலத்தான், உன்னிடம் ஒரு தனிநபர் காட்டும் அன்பைப் போல், ஒரு கூட்டத்தால் உன்னோடு அன்பு பாராட்ட முடியாது. இரண்டும் முரண்கள் கொண்ட முனைகள்.

உன் உறவுகளின் வலுவும் உன் உரையின் தெளிவும் ஒருநபருக்கு ஒரு நபராய் மட்டும் சுவாசம் கொள்கிறது. கூட்டமாய் இருந்தாலும் நீ சொல்ல வரும் விடயம் ஒரு மனத்தை மட்டுந்தான் அடைய வேண்டும்.

ஆயிரம் மனங்கள் இருக்கட்டுமே, உன் உரை ஒவ்வொரு மனத்தையும் அன்போடு அரவணைக்க வேண்டிய கலையைக் கொண்டிருக்க வேண்டும்.

இந்தக் கலை விசித்திரமான கலையன்று. மனதோடு பேசுகின்ற கலை, ஒரு விஞ்ஞானமாயிருந்தாலும் — அதுவொரு மிக எளிய விஞ்ஞானம்.

இன்னொரு மனதோடு பேச, நீ செய்ய வேண்டியதெல்லாம், உன் மனதாலே பேச வேண்டும். உன் மனதாலே எழுத வேண்டும்.

மனதாலே பேசுகின்ற கலை வாய்க்க என்னவெல்லாம் செய்யலாம் என்று கோபாலிடம் கேட்டேன். ஒரு பட்டியல் சொன்னான். உபயோகம் கருதி தருகிறேன்.

அதிகமாக நீ ஓட வேண்டும். சாப்பாட்டை அதிகமானோருக்கும் சேர்த்து சமைத்தருள வேண்டும். அதிகமான சூரிய உதயங்களை நீ காண வேண்டும். அதிகமாய் நீ வாசிக்க வேண்டும். அதிகமாய் நீ படைக்க வேண்டும். நீ மன்னிக்க வேண்டும். எது அவசியமோ அதில் உன்னை திளைத்திருக்கச் செய்ய வேண்டும். இத்தனையும் உன் வழக்கமாக ஆகிவிடுகின்ற நிலையில், உன் மனமே பேசத் தொடங்கும். அந்தப் பேச்சில் கர்வம் இருக்காது, கவர்ச்சி இருக்கும். அதில் ஈர்ப்பு அற்புதமாய் ஒட்டிக்கொண்டிருக்கும்.

மனதோடு பேசுவோம் வா!

- உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். :) நான் இங்கே – Follow @enathu

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

கட்டுரை

யாரைத்தான் நம்புவது?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  2 நிமிடங்களும் 8 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

ஒவ்வொரு பொழுதும் வித்தியாசமாகவே விடியும். விடிகின்ற பொழுது கொண்டு வரும் நிகழ்வுகளின் அனுபவங்கள் தான் அடுத்த வினாடியின் உணர்வின் வெளிப்பாட்டை தீர்மானிப்பதில் ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்த நிலை உலகின்பால் வாழும் அனைவருக்கும் பொதுவானதுதான். ஆனால், தலைவன் என்பவன், பின்தொடர்பவர்களைக் கொண்டவன். பின்தொடரும் தேட்டத்தைப் பலர், ஒருவன் சார்பாகக் கொண்டதனாலேயே அவன் தலைவன் ஆகிவிடுகிறான்.

தலைமைத்துவம் என்பது ஒரு கலை. அதை ஒரு மாயாஜால வித்தையென்றோ, புராணங்களின் மிச்சம் என்றோ நீ பொருந்திக் கொள்ளக்கூடாது. சாதித்த தலைவர்களின் விம்பங்களை மட்டும் ஊடகங்களில் கண்டு கொள்ளும் நீ, தலைமைத்துவம் சௌகரிகமானது என உறுதி கொள்ளக்கூடாது.

தலைமைத்துவம் அசௌகரிகமானது. அது கடினமானது. வலிகளைக் கொண்டு தரக்கூடியது.

உன்னைப் பற்றி நீ நம்பியுள்ள உண்மைகளைக்கூட, இன்னொரு தடவை மெய்தானா என கேள்வி கேட்க வைக்கக்கூடிய முரணை, தலைவனின் மனத்தை நீ கொண்டுள்ள நிலையில் பெற்றுக் கொள்வாய்.

உன் உறக்கத்தின் சொகுசைக் கூட சூறையாடிக் கொள்ளும் வலிமை அதற்குண்டு. என் நடவடிக்கைகள், என் எண்ணங்களில் ஓட்டத்தோடு ஒத்திசைகிறதா? என்னை அவர்கள் ஏற்று பின்தொடர்வார்களா? இதைச் செய்தால், அவர்கள் என்னை இப்படி நினைத்துவிடுவார்களோ? நான் பிழையான முடிவைச் சொல்லிவிட்டால், என்ன நடக்கும்? என கேள்விகள் மனதிற்குள் கோட்டை கட்டி குடிகொண்டிருக்கும்.

தலைவன் சந்திக்கின்ற சவால்களின் அளவு விசாலமானது. அவனைச் சுற்றியுள்ள அத்தனையும் “இதற்கெல்லாம் நீதான் காரணம்” என்றவாறு அவனைச் சுட்டியே பிழைக்கான காரணங்களைச் சொல்லி, பிழைத்துக் கொண்டிருப்பதை அவன் சகித்துக் கொள்ள வேண்டியுமிருக்கிறது.

எவ்வளவுதான் நெருக்கடிகள் தோன்றினாலும், அவன் எண்ணங்களை கேள்விகளால் சவாலாக்கிக் கொண்டு, காரியம் செய்கின்ற தலைவனின் மனமே ஒரு கவிதை.

அவனுக்கு தேவையானதெல்லாம், தன் தலைமையின் மூலமாக தான் காண்கின்ற, கண்ட உலகத்தின் நிலையை ஒரு படியேனும் மேலே உயர்த்திவிட வேண்டுமென்பதாகத்தான் இருக்கும்.

அவன் செய்கின்ற விடயமென்பது தலைமைத்துவம் அல்ல. அவனே தலைமைத்துவம் ஆகிவிடுகிறான்.

நீயும் அப்படியானதொரு தலைவனாய் உருவெடுக்க வேண்டும். அதற்கு நீ வாழ்கின்ற உலகம் பற்றிய புரிதலை நீ விசாலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நீ வாழ்கின்ற உலகில், தங்களால் நடக்கின்ற தவறுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள யாரும் தயாராயில்லை. தங்களின் தவறை, காகித விமானம் போல், மற்றவரை நோக்கி எறிந்து விடுவதையே கௌரவமாய் கருதுகின்ற நிலையில் மனங்கள் உருவாகியிருக்கின்றன.

உன் உலகில், சின்னச் சின்னச் வெற்றிகளைக் கூட ஊதிப் பெருக்க வைக்கிறார்கள். உன் படைப்பை, தங்கள் படைப்பாய் வெளியிட்டு விருதுக்கு அனுப்புகிறார்கள். அவர்கள் இல்லாத இன்னொன்றாய் தங்களை உருவகப்படுத்திக் காட்டிக் கொள்கிறார்கள். மற்றவர்களை இழிவாகப் பார்ப்பதை வாழ்வின் அங்கம் என நம்புகிறார்கள். இத்தனையும் செய்து கொண்டு, நிம்மதியாய் நித்திரை செய்யக்கூட பழகிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட உன் உலகத்தில், நீ உண்மையான தலைவனாய் இருக்க முடியாது. இது உனக்கான உலகமே அல்ல. ஆனாலும், உன் தலைமையின் விளைவால் மக்களின் வாழ்வில் மாறுதல்களை கொண்டுவர வேண்டியிருக்கிறது. நீ, உண்மையான தலைவனாய் உருவெடுக்கின்ற நிலையில் உனக்கு சாட்டுப் போக்குச் சொல்ல நேரமிருக்காது. சாதனைகள் செய்யவே உனக்குத் தேட்டம் இருக்க வேண்டும்.

இத்தனையும் செய்ய, நீ நம்ப வேண்டும். தலைமைத்துவம் என்பது நம்பிக்கை. யாரைத்தான் நம்புவது?

நம்பிக்கை பற்றிய நிலையில், எனக்கு பிடித்தமான ஆளுமை, செத் கோடின் சொல்கின்ற ஒரு விடயத்தை பகிர்கின்றேன்.

“நம்பிக்கை எங்கிருந்து வருகிறது? சந்தோசமான நேரங்களிலோ, இலகுவான காரியங்களின் நிறைவிலோ நம்பிக்கை தோற்றம் காண்பதில்லை. அசௌகரிகமான நேரங்களில் கூட, எம்முன்னே வந்து உண்மைகளை உவப்பாய் சொன்னவர்கள் மூலமே நம்பிக்கை வாழ்கிறது. ஏனெனில், பொய்யை இலகுவாகச் சொல்லிவிட்டு அந்தத் தருணத்திலிருந்து விலகிச் சென்றுவிடக்கூட அவகாசம் இருந்தும், தங்கள் வாக்குறுதியை அவர்கள் காப்பாற்றினார்கள். ஒவ்வொரு கடினமான காலமும் துக்கமான நிலையும் உன் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களை இனங்கண்டு கொள்வதற்கான ஒவ்வொரு வாய்ப்பை வழங்குகிறது”.

ஆக, நம்பிக்கையை கண்டுகொள்ளும் அவ்வாறான வாய்ப்பை நீ ஒருபோதும் தவறவிட்டு விடாதே!

“நீயல்லாத இன்னொன்றாக, உன்னை மாற்றிக் கொள்” என்றே தொடர்ச்சியாக உன்னை இந்த உலகம் தூண்டும், ஆனாலும் நீயெதுவோ அதுவாகவே ஆகிவிடு. உண்மையான தலைவனாக நீ வருகையில், உனக்கு இன்னொரு முகமிருக்காது. நீயே தலைமைத்துவத்தின் முகமாயிருப்பாய் – உன் எண்ணங்கள் யாவும் மக்கள் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தி, அவர்களின் உன்னத மாற்றங்களுக்கு முகம் கொடுக்கும்.

- உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். :) நான் இங்கே – Follow @enathu

கட்டுரை

படைத்தலும் பகிர்தலும்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  58 செக்கன்கள் தேவைப்படும்.) [?]

நிறமும் நிறத்தோடிணைந்த பதிவுகளும் படைத்தலின் தேவையும் அதன் இன்பத்தையும் பற்றி அடிக்கடி சொல்லியிருப்பதை நீங்கள் வாசித்திருப்பீர்கள்.

படைத்தல் என்பது பற்றிய தேவை, மனிதனின் மிகப்பெரிய தேட்டமாகவே பண்டைய காலம் தொட்டு இன்று வரைக்கும் வளர்ந்து கொண்டு வருகிறது. 8 more words

கட்டுரை