சன் குழும நிறுவனத் தலைவர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் “கல் கேபிள்ஸ்’ நிறுவனம் உள்பட 17 நிறுவனங்களின் டிஜிட்டல் உரிமத்தை ரத்து செய்து மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதில், தமிழகத்தில் மூன்று நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

இது தொடர்பான விவரம் மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் தெரிவிக்காதது, நீதிமன்றங்களின் உத்தரவு உள்ளிட்ட காரணங்களால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் “கல் கேபிள்ஸ்’ நிறுவனத்தின் கீழ் செயல்படும் சுமங்கலி கேபிள் விஷன் (எஸ்சிவி) மூலம் ஒளிபரப்பாகி வரும் தொலைக்காட்சி சேனல்கள் நிலை கேள்விக்குரியாகியுள்ளது.

மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுமங்கலி கேபிள் நிறுவனத்தின் (கல் கேபிள்ஸ் பி.லிட்.) நிர்வாக இயக்குனர் விட்டல் சம்பத்குமரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: சுமங்கலி கேபிள் நிறுவனம் தொலைக்காட்சி சேனல்களை டிஜிட்டல் முறையில் சென்னை, கோவை உள்பட பல பகுதிகளில் “எம்எஸ்ஓ’ மூலம் ஒளிபரப்பி வருகிறது. இதற்காக மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை உரிமம் வழங்கியுள்ளது. இந்த உரிமத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து பாதுகாப்பு ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், மத்திய உள்துறை அமைச்சம் பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மறுப்பு தெரிவித்துவிட்டது.

அது தொடர்பாக எங்களுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு ஒப்புதல் வழங்கவில்லை என மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை தெரிவித்து, சென்னை, கோவை ஆகிய நகரங்களின் “எம்எஸ்ஓ’ உரிமத்தை ரத்து செய்து கடந்த 20-ஆம் தேதி உத்தரவிட்டது.இது தொடர்பாக எங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை. மேலும், பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மறுத்ததற்கான எந்தக் காரணமும் எங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. உடனடியாக எங்களது அனைத்து வர்த்தக நடவடிக்கைகளையும் மூடுமாறு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து எங்களது வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், “15 நாள்களுக்குப் பிறகு எங்களது கேபிள் நிறுவனம் ஒளிபரப்பாகாது: வேறு கேபிள் நிறுவனத்துக்கு மாறிக் கொள்ளுங்கள்’ என்று ஒளிபரப்பவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.எனவே, எந்த முன்னறிவிப்பும் வழங்காமல் உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், ஒளிபரப்பு உரிமம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

கல் கேபிள் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதி ராமசுப்ரமணியன் முன் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் உத்தரவிற்கு தடை விதிக்கக் கோரினார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் துணைத் தலைமை வழக்கறிஞர் ராஜகோபாலன், தடை உத்தரவு பற்றிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க கால அவகாசம் தேவை எனக் கூறினார். இதனையடுத்து, மத்திய அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க மறுத்த நீதிபதி, எஸ்சிவி மூலம் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சேனல்களை பிற எம்எஸ்ஓக்கள் மூலம் காணலாம் என்று அறிவிக்கக் கூறிய மத்திய அரசின் உத்தரவிற்கு மட்டும் இடைக்காலத் தடை விதித்தார். மேலும், வழக்கு விசாரணையை வரும் 2-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்நிலையில் ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில், மலேசியாவில் விசாரணை முடியாத நிலையில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக்கூடாது என்ற தயாநிதி மாறன் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சட்டப்படி தடை விதிக்க முடியாது என்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபின் மனுதாரர் முறையிடலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.